
“என்ன ஞாயிற்றுக் கிழமையும் அதுவுமா வெளியே கிளம்பிட்டீங்க?”
“டி எம் எஸ் ஐயாவ கடைசியா ஒரு தடவ பாத்துட்டு வர “
“ ஓ….. so sad … நேத்தியிலிருந்து டிவில தொடர்ந்து அவரப்பத்தி காமிச்சுட்டே இருந்தாங்க… எங்க அப்பா அவரோட பெரிய fan…. ஆமா, அவர உங்களுக்கு தெரியுமா ”
“ ம்…. “
“எப்போத்திலிருந்து ….”
“போய்ட்டு வந்து பேசறேன்க்கா” ….
வீட்டைப் பூட்டி வெளியே கிளம்பும்போது பக்கத்து வீட்டு அக்காவுடன் நேற்று காலை நடந்த சம்பாஷனை இது …
மந்தைவெளியில் உள்ள அவரின் வீட்டிற்கு போகும் வழி நெடுக எனக்குள்ளே பல முறை இந்தக் கேள்வி வந்துபோய்க்கொண்டே இருந்தது
“””” எப்போதிலிருந்து டிஎம்எஸ் எனக்குத் தெரியும்?”
பின்னோக்கிய யோசனை எந்த இடத்திலும் நிற்காமல் சர்ர்ரெனப்போய் ஒரு இருட்டறையில் நின்றது…… ஆம்
“என் தாயின் கருவறையிலிருந்து அவரை எனக்குத் தெரியும்”
எனக்குமட்டுமல்ல, 60 களின் ஆரம்பம் தொடங்கி , தமிழ்ச் சூழலில் உருவான எல்லா சிசுக்களுக்கும் பொருந்தும் விடை இது.
மந்தைவெளியில் படுத்திருப்பவன்,வயோதிகம் பற்றி முற்றிச் செத்த வயோதிகன் அல்ல. காசுக்காகப் பாடிவிட்டு கண்மூடிய ஒரு பாட்டுக்காரன் அல்ல. இசை தேரிந்து தேர்ந்த விற்பனன் ஒருவன், வாய்ப்புத்தேடித் தெருத்தெருவாய் அலைந்து , பின் அவர்கள் எல்லோரையும் தன்னைத்தேடி அலையவைத்த அகம்பாவ சாதனையாளன் மட்டுமல்ல.
அவன் ……
சில தலைமுறைகளின் கருவில் கலந்து கரைந்த நாதபிரும்மம். .
ஒரு மொழியின் உத்திரவாதம் .
ஓராயிரம் தமிழாசிரியர்கள் சேர்ந்த ஒற்றை உருவம்.
என் மொழியை எனக்குக் கற்றுத்தந்த ப்ரதான குரு.
இசைத்தமிழை இன்னும் அழகுபடுத்திய அழகன்.
என் மொழியின் “ழ” அவன் .
கலங்கிக் கதறாமல் இருக்க நான் உயிருள்ள மரக்கட்டையா என்ன…
அவரின் இறப்பு செய்தி கேட்ட நொடி முதல் , இதோ இதை எழுதிக்கொண்டிருக்கும் இந்தக்ஷணம் வரை அந்தக் குரலின் ஆக்கிரமிப்பில் சுழற்றியடிக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறேன்….
“எம்ஜிஆருக்கும் சிவாஜிக்கும் எப்படி குரலை வேறுபடுத்திப் பாடினீங்க”
லட்சத்துக்கும் அதிகமான தடவை கேட்டுக் கேட்டுப் புளித்துப்போன அதே கேள்வியை, அந்தக் காது என் குரலிலும் கேட்டுத் தொலைக்கவேண்டிய நிர்பந்தம் வந்தபோதும்,
சிரித்துக்கொண்டே என்னிடம்
“அது இருக்கட்டும்…. சிவாஜி குண்டா இருக்குபோது ஒரு வாய்ஸ்லயும் , ஒல்லியா இருக்கும்போது ஒரு வாய்ஸ்லயும் பாடியிருப்பேன். கவனிச்சிருக்கியா”…..
“……………!!!!!?????!!!!!!!!………”
லேசாக செருமி “உள்ளம் என்பது ஆமை, அதில் உண்மை என்பது ஊமை” என்று பாடிவிட்டு “ …. “இது சிவாஜி குண்டா இருக்கும்போது”
உடனே, கொஞ்சம் மெலிதாக , ஆனால் கூர்மையாக, “வெள்ளிக் கிண்ணம்தான். தங்கக் கைகளில்” ….. “ இது சிவாஜி ஒல்லியா இருக்கும்போது” என்று சொல்லிவிட்டு என்னைக் கூர்ந்து பார்க்க , நான் கண்கலங்கி வாய் பிளந்து நிற்க …. ஹாஹ்ஹாஹ்ஹா என்று அவர் உரக்க சிரிக்க … ஜென்ம சாபல்யம் ..
அவர் இறந்த நேற்று முன் தினம் (25/05/2013) இரவு முழுவதும் அவருடைய பாட்டுக்களைக் கேட்டபடியே இருந்தேன். குறிப்பாக 50 களில் அவர் பாடிய பாடல்கள் எனக்கு ஆத்மப்ரியம்.

“கொஞ்சும் கிளியான பெண்ணை”
“முல்லை மலர் மேலே”
“தில்லை அம்பல நடராஜா”
“எளியோரைத் தாழ்த்தி”
“எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்“
“நாடகமெல்லாம் கண்டேன்”
“ஏரிக்கரையின்மேலே”
“வீடு நோக்கி ஓடி வந்த என்னையே” (சோகம்)
“மாசிலா நிலவே நம் காதலை மகிழ்வோடு”
“சித்திரம் பேசுதடி”
“கனவின் மாயாலோகத்திலே நாம்“
“நான் பெற்ற செல்வம்”
ஒவ்வொரு பாடலைக் கடக்கும்பொழுதும் ,“நாளை இதைப் பாடிய நாவும் நாசியும் தொண்டையும் உருவமும் தீயினால் சுட்டெரிக்கப்பட்டு சாம்பலாய்ப் போய்விடும் என்பதை நினைக்க நினைக்க, ஜீரணிக்க இயலாமல் குமட்டிக்கொண்டு வந்தது. தொண்டைக்கும் நெஞ்சுக்கூட்டுக்கும் நடுவே யாரோ ஏறி நிற்பதுபோல ஒரு நிலையில்லாப் பெரும்பாரம் அழுத்தியபடியே இருந்தது. கண்ணீரின் பாதைக்கு மட்டும் எந்தவித இடையூறுமில்லை.
இப்படி அடுக்கிக்கொண்டே சென்று 60 களுக்குள் நுழையும் சமயம், பொழுது விடிய ஆரம்பித்திருந்தது.
அப்படியே பாடல்கள் தொடர, ஓரிடத்தில்
“தாய் முகத்தைப் பார்க்காமல்
யார் முகத்தைப் பார்த்தழுவேன்
நீ கொடுத்த நிழலைவிட்டு
யார் நிழலில் போயிருப்பேன் – அம்மா
யார் நிழலில் போயிருப்பேன்”
என்ற பாடலில் , “அம்மா” என்னும் இடம் வரும் ஒவ்வொரு தடவையும் கண்கலங்காமல் இருந்ததில்லை. நேற்று மடை உடைந்து கொட்டிற்று.
“கண்ணின் மணி போல
மணியின் நிழல் போல
கலந்து பிறந்தோமடா
இந்த மண்ணும் கடல் வானும்
மறைந்து முடிந்தாலும்
மறக்க முடியாதடா – உறவை
பிரிக்க முடியாதடா”
இதை எழுதும்பொழுது என் நுனிமூக்கு வெம்மிப்புடைத்து, பொத்துக்கொண்டு கண்ணீர் வருவதை தடுக்கும் திராணி எனக்கில்லை.
எழுத்துக்கள் ,வார்த்தைகள் , வரிகள் ….அவை டிஎம்எஸ்ஸின் குரலில் உருவம்பெற்று உலவ ஆரம்பிக்கின்றன. இதை எனக்குத் தெரிந்தவரை எந்தப் பாடகரும் பாடகியும் இதுவரை செய்ததில்லை.
“சொல்லிக்குடுத்தபடி ஸ்ருதி சுத்தமா பாடுறதுக்கு டிஎம்எஸ் தேவையில்லைய்யா. அதுக்கு நெறையப்பேர் இருக்காங்க” என்று அடிக்கடி சொல்வார்… பேசும் வார்த்தைகளில் அவ்வளவு திமிர் , கர்வம் , அகம்பாவம் தெரியும்……… தெரியணும் … தெரிஞ்சாத்தான் டிஎம்எஸ்… உப்புக்குக்கூட லாயக்கில்லாத பலர் இன்று செய்யும் ஆர்ப்பாட்டங்களைப் பார்க்கும்போது, “நீ என்னவேணாலும் சொல்லு ராசா” என்றுதான் எனக்கு சொல்லத்தோன்றும்.
இன்னொரு முறை அவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது (கேள்வி கேட்டு படுத்திக்கொண்டிருந்தபோது என்பதுதான் சரி) அவரின் முதல் பாடலான “ராதே நீ என்னைவிட்டுப் போகாதெடி” பற்றிக் குறிப்பிடுகையில்
“…… உனக்குத் தெரியும் அது பாகவதர் பாடிய “ராதே உனக்குக் கோபம் ஆகாதடி” பாட்டின் இன்னொரு வெர்ஷன், காப்பின்னு (remix)…. நான் பாடியதை கேட்டு முடித்தபின் அதை ஒலிப்பதிவு செய்த சவுண்ட் இஞ்சினியர்
“இதுவும் அப்படியே பாகவதர் பாடின மாதிரி டிட்டோவா இருக்கு. எதாவது டிஃபரென்ஸ் வேண்டாமா” என்றார். இசையமைப்பாளர் உட்பட எல்லோரும் ஆமோதித்தோம்.
சரி இன்னொரு டேக் போகலாமா என்று யோசித்துக்கொண்டிருந்தபோது, அந்த சவுண்ட் இஞ்சினியர் “எனக்கு ஒரு ஐடியா” என்று சொல்லிவிட்டு, டேப்பை (tape) ரீவைண்ட் செய்து, மிக மிகக் கொஞ்சமாக டேப்பின் சுற்றுவேகத்தை(RPM) அதிகரித்து ப்ளே (play) செய்து காண்பித்தார். என் வாய்ஸ் கொஞ்சம் ஷார்ப்பாக கேட்டது.
இசையமைப்பாளரும் “அடடே இது நல்லா இருக்கே, வாய்ஸும் வேறமாதிரி கேட்குது. இதே டெம்போ ல காப்பி போட்டுடுங்க” என்றார். அப்படி வந்த அவுட்புட் (output) தான் என் முதல் பாடல். நான் பாடி வெளிவந்த முதல் பாடல், நான் பாடிய ஒரிஜினல் டெம்போவில் (tempo) இல்லை”” என்றார்.
அதன்பின் அவரின் பல பேட்டிகளைப் படிக்கும்போதும் பார்க்கும்போதும் இந்த சம்பவத்தைக் குறிப்பிடுவாரா என்பதை கவனித்தேன். இதுவரை என் கண்ணுக்குத் தட்டுப்படவில்லை . அவரின் வாயால் இதைக் கேட்ட அனுபவம் இன்னும் என் கண்ணுக்குள்ளே நிழலாடிக்கொண்டிருக்கிறது.
“டிஎம்எஸ் ஒரு நல்ல பாடகரே அல்ல” என்று சொல்லும் சிலரை எனக்குத்தேரியும். “கத்துவது போலப் பாடுவார்” என்று என்னிடம் சொன்ன சங்கீத விற்பனர்களும், பாடகர்களும் இருக்கிறார்கள்.
அவர்கள் பாடிய பாடல்களைக் கேட்கும்போது ஒன்று விளங்கியது. இவர்களுக்கு டிஎம்எஸ் புரியாதது ஞாயம்தான். ஸ்ருதி சுத்தமும் ராகபாவங்களும் , கேட்பவர்கள் மிரளும் அளவுக்கு இவர்களின் குரல் ரசிக்கச் செய்கிறதே தவிர, அது உள்ளே சென்று உயிரைத்தொடவில்லை. அது அவர்களுக்கு அவசியமும் இல்லை. ‘இசை ரசிக்க மட்டும்தானே என்பது அவர்களின் கருத்து … இருக்கட்டும் … தவறில்லை…. ஆனால் டிஎம்எஸ் அப்படி அல்ல…. அதையும் தாண்டி… அந்த எல்லை வேறு…
நேற்று அவரை கடைசியாக வணங்கச் சென்றபோது, வீட்டின் வெளியே ஆட்டோக்காரர்களும், கைவண்டி இழுப்பவர்களும் கூலி வேலை செய்யும் பெண்களும், குப்பத்து ஜனங்களும் வேகாத வெயிலில் பெரும் திரளாக குழுமி இருந்தனர். அதில் சிலர் “டி எம் எஸ் ஐயா , போய்ட்டீங்களே” என்று தலையில் அடித்துக்கொண்டு அழுதபடி இருந்தனர். பலரின் கைபேசியில் டிஎம்எஸ் பாடல்கள் ஒலித்தபடி இருந்தது.
ஒருவர் உரக்க அவரின் பாடல்களைப் பாடிக்கொண்டிருந்தார். அவரைச் சுற்றி சிலபேர் தலைகவிழ்ந்தவண்ணம் கண்ணீரோடு கேட்டுக்கொண்டிருந்தனர்.
டிஎம்எஸ் ஐயாவின் உடல் வைக்கப்பட்ட குளிர்பெட்டிக்கு அருகில் சென்று அவரின் முகத்தைப் பார்த்தேன். தன் குரலால் எல்லோரையும் கட்டிப்போட்ட அந்த உருவம் நாடி கட்டப்பட்டு , தன் இறுதி யாத்திரைக்குத் தயாராக இருந்தது. அருகில் அவரது துணைவியாரும் மகனும் இருந்தனர். கண்ணீரோடு கையெடுத்துக் கடைசியாக வணங்கினேன்.
வெளியே வந்து நின்றுகொண்டிருந்தேன் . என் அருகில் ஒருவர் காம்பவுண்டுச் சுவரில் சாய்ந்தபடி கண்கலங்கிக் கொண்டிருந்தார். அழுக்கான சட்டை, பழைய செருப்பு, கலைந்த தலை… எட்ட நின்று அந்தப் பெட்டியைப் பார்த்தபடி அழுதுகொண்டே இருந்தவரிடம் பேச்சுக் கொடுத்தேன்.
“நான் ஈரோடுங்ணா, லோடுமென் வேல பாக்குறேன். நேத்து சாயங்காலம் விசயம் கேள்விப்பட்டதுமே, நைட்டு லாரி புடிச்சு காலைல வந்துட்டேனுங்க”
“ ஐயாவ அவ்வளவு புடிக்குமா”
உசுருங்க….அவரு பாட்டு கேக்காம எனக்கு விடியாது. இப்போ அம்பத்தஞ்சு வயசு ஆகுது. பேரன் பேத்தி எடுத்துட்டேன், ஆனா முப்பது வருசமா, ஒவ்வொரு வருசமும் ஒரு நாள் ஈரோட்ல இருந்து ஐயா வீட்டுக்கு வந்து அம்மா கையால ஒரு சொம்பு தண்ணிவாங்கி குடிச்சுட்டு போய்ருவேன். ஐயா இருந்தா ஒரு கும்பிடு மட்டும் போடுவேன்”
“ஐயாகிட்ட பேசிருக்கீங்களா”
“இல்ல”
“மத்த பாட்டெல்லாம் கேப்பீங்களா”
“பழைய பாட்டுதான் அதிகமா கேப்பேன். மத்த பாட்டும் கேப்பேன்”
“இவர மட்டும் உங்களுக்கு அதிகமா புடிக்கிறதுக்கு என்ன காரணம்”
இந்தக் கேள்விக்கு அவர் தந்த பதிலைத்தான் இந்தக் கட்டுரையின் தலைப்பாகவும் கடைசி வரியாகவும் இருக்கவேண்டுமென்று முடிவு செய்தே இந்தக் கட்டுரையை ஆரம்பித்தேன்.. இதுதான் டிஎம்எஸ் என்னும் ஒப்பற்ற சாதனையாளனுக்கு நான்செய்யும் மரியாதை.
அவரின் பதில் இதுதான்
“”””“குரலால பார்க்கவைக்கிறது, இந்த ஒரு மனுசனால மட்டும்தான் முடியும்”””””
…………………………………………..
…………………………………………………
