சந்தியா ராகம்

நேற்று தற்செயலாக முகப்புத்தகத்தை மேய்ந்துகொண்டிருந்தபோது “தமிழ் ஸ்டுடியோ” என்கிற வலைத்தள அறிவிப்பு கண்ணில் பட , எனக்கு சொல்லொண்ணா பூரிப்பு…

” இன்று மாலை 6 மணிக்கு சென்னை MM ப்ரிவ்யூ தியேட்டரில் ‘சந்தியா ராகம்’ திரையிடப்படுகிறது. திரு பாலு மகேந்திரா அவர்கள் கலந்துகொள்கிறர்.அனைவரும் கலந்துகொள்ளவும்” என்கிற அறிவிப்பு.

என் பள்ளி காலங்களில் ஒரு ஞாயிற்றுக்கிழமை மதியம் தூர்தர்ஷனில் பார்த்த நினைவு மட்டும் இருக்கிறது. அதுவும் சில காட்சிகள் மட்டும் ஓலிகள் இல்லாமல் படிமங்களாக பதிந்திருக்கிறது.

அதற்குப் பின் பல இடங்களில் இந்தப் படத்தைப் பற்றி பலர் பேசும்பொழுது பார்க்கவேண்டும் என்று தோன்றும். இதன் பிரதியை பலரிடமும் கேட்டிருக்கிறேன். திரைப்பட விழாக்களில் எதிர்பார்த்தேன். எதுவும் வாய்க்கவில்லை.ஆனால் இப்போது “தமிழ் ஸ்டுடியோ” மூலம் இதை பார்க்கும் சந்தர்ப்பம்.

5.30 க்கே MM ப்ரிவ்யூ தியெட்டர் சென்றுவிட்டேன். 6 மணிக்கு ஆரம்பமாகவேண்டியது சற்று தாமதமாக ஆரம்பமானது. அரங்கம் நிறைந்திருந்தது. கறுப்புவெள்ளையில் ஆரம்பமானது.

Image

மனைவியை இழந்த முதியவர் (சொக்கலிங்க பாகவதர்) வேறு போக்கிடம் இல்லாமல் சேலத்துக்கு அருகிலுள்ள தனது சொந்த கிராமத்தை விட்டு சென்னையில் உள்ள தன் தம்பி மகனிடம் (ஓவியர்.வீர சந்தானம்) வந்து சேர்கிறார்.

சொற்ப சம்பளத்தில் ஒரு அச்சகத்தில் ஓவியராகப் பணிபுரிந்து வரும் அந்த மகன், தன் நிறைமாத கர்ப்பிணியான மனைவி (அர்ச்சனா), பள்ளிசெல்லும் மகளுடன் ஒரு ஒண்டுக்குடித்தனத்தில் வாழ்ந்துவருகிறான்.

அவர்களோடு சேர்ந்து வாழத்துவங்குகிறார் முதியவர். அவரால் இயன்ற அளவுக்கு அவர்களுக்கு உதவியாக இருக்கிறார். அந்தக் குழந்தை அவருடன் வெகுவாக ஒட்டிக்கொள்கிறது.

ஒரு நாள் அந்த முதியவர் தன் பேரக் குழந்தையை பள்ளிக்குக் கொண்டுவிடும் சமயத்தில் , குழந்தை ஆசைப்படுகிறாளே என்று சாலையோரத்தில் விற்கும் பட்ஷணம்(வடை) ஒன்றை வாங்கிக்கொடுக்கிறார். அது அந்தக் குழந்தைக்கு ஒவ்வாமல்போய் வாந்தியெடுத்து மயங்கிவிடுகிறது.

அந்தப் பதட்டத்தில் மருமகள் அவரைத் திட்டிவிட்டு குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்று ஊசி போட்டு திரும்புகிறாள். அந்த இரவு முதியவர் எதுவும் சாப்பிடாமல் ஆழ்ந்து யோசிக்க ஆரம்பிக்கிறார்.

இவர்களுக்கு தான் ஒரு பாரமாக இருக்கிறோமா என்கிற எண்ணம் அவருக்குத் தோன்ற , மறுநாள் அதிகாலை யாரிடமும் சொல்லாமல் வீட்டை விட்டு வெளியேறுகிறார். ஒரு முதியோர் இல்லத்தில் தானே சென்று சேர்ந்து தன் வாழ்க்கையைத் தொடருகிறார்.

அந்த மகனும் மருமகளும் அவரை பல இடங்களில் தேடுகிறார்கள். மகன் தன் ஊருக்கெல்லாம் சென்று தேடி , அவர் கிடைக்காமல் ஏமாற்றத்தோடு திரும்புகிறான்.

தான் திட்டியதால்தான் மாமா வீட்டைவிட்டு போய்விட்டார் என்று நினைத்து நினைத்து அந்த கர்ப்பிணி மருமகள் வருந்திக்கொண்டிருக்கும் சமயத்தில் அவளுக்கு அந்த முதியவரிடமிருந்து ஒரு கடிதம் வருகிறது.

கடிதத்திலுள்ள முகவரியைத்தேடி உடனே கிளம்பிச்சென்று முதியவரை சந்திக்கிறாள் மருமகள்.தன்னுடன் வரும்படி அவரை வற்புறுத்துகிறாள்.

முதியவர் அன்பாக மறுக்கிறார். தான் இங்கே நிம்மதியாக இருப்பதாகச் சொல்கிறார். அந்த இல்லத்தில் இருக்கும் நண்பர்களை மருமகளுக்கு அறிமுகம் செய்துவைக்கிறார். எப்போது வேண்டுமானாலும் தான் வந்து அவர்களைப் பார்ப்பதாக உறுதியளிக்கிறார். மேலும் அவர்கள் மீது தனக்கு எந்த வருத்தமும் இல்லை என்று புரியவைத்து மருமகளை அனுப்பிவைக்கிறார்.

சில நாட்களுக்குப் பின் மருமகளுக்கு குழந்தை பிறந்திருப்பதாக அவருக்கு செய்தி வர, உடனே கிளம்பி மருத்துவமனைக்கு வந்து பிறந்த குழந்தையைப் பார்க்கிறார்.

மகிழ்ச்சி பொங்க தன் மருமகளை அவர் பார்க்க…
அவளும் அவரைப் பார்த்து பாசமாய் புன்னகைக்க….
அவரின் முதிர்ந்த விரலை அந்த பச்சிளம் குழந்தையின் கை மெதுவாக பற்ற…. காட்சி மெதுவாக மறைந்து

“திரைக்கதை – வசனம்- ஒளிப்பதிவு -எடிட்டிங் – பாலு மகேந்திரா என்று திரையில் தோன்றுகிறது …..

எங்கும் நிசப்தம்…. ஆங்காங்கே ஒன்றிரண்டு தொடங்கி, பின் அரங்கம் கைதட்டலில் அதிர்கிறது.

முதுமையின் பயணம் எப்படிப்பட்டது என்பதை அந்தக் கலைஞன் எவ்வளவு நுட்பமாகப் பதிவு செய்திருக்கிறார்.அடடா… சொல்ல வார்த்தைகள் இல்லை.

என்னுள் இறங்கிய இடி, அதனால் ஏற்பட்ட பெருமழை இன்னும் அடங்கியபாடில்லை.

ஒரு விமர்சகனாகவோ அல்லது சினிமாவில் வேலைபார்ப்பவனாகவோ இதை எழுதுவதற்கு உண்டான தகுதி எனக்கு இல்லை என்பதால் அந்த தவறைச் செய்ய எனக்கு மனம் வரவிலலை.

இந்தக் காட்சி அழகு, அந்தக் காட்சி அப்படி, என்று ஒரு ரசிகனாக சொல்லவேண்டுமானால் இதை இன்னும் குறைந்தபட்சம் 15 முறையாவது நான் பார்க்கவேண்டும்.

ஆனால் உங்களிடம் ஒன்றை மட்டும் ஒரு வேண்டுகோளாக வைக்கிறேன். இந்தப் படத்தை எங்கு பார்க்கக் கிடைத்தாலும் தவிர்க்காமல் பாருங்கள் .

ஒரு 5,6 பத்திகளில் கதைச் சுருக்கத்தை சொல்லிவிட்டேன். ஆனால் சந்தியா ராகம் அது அல்ல. அது ஒரு பயணம். அதை நீங்கள் பயணித்து அனுபவித்தால்தான் அந்த சுகானுபவம் உங்களுக்குக் கிடைக்கும்.

அடர்ந்த காட்டின் நடுவே சலனமற்று ஓடும் நதியில் நிதானமாக மூழ்கிக் களிக்கும் சிலிர்ப்பை எப்படி சொல்லி புரியவைக்க முடியாதோ, அதுபோலத்தான் இந்த சந்தியா ராகமும்.

கூடியமட்டும் அரங்கில் பாருங்கள். தனியாக பார்க்கக் கிடைத்தால் கைபேசியை அணைத்துவிட்டு கொஞ்சம் கவனம் செலுத்திப் பாருங்கள்.ஏனென்றால் இதற்காக நீங்கள் கொடுக்கப்போகும் ஒவ்வொரு நொடியும் உன்னதமானது.

ஐரோப்பிய சினிமா, ஈரானிய படங்கள், கொரியப் படங்கள் என்று உலக சினிமா பற்றி பேசும் எழுதும் பலருக்கு, அதைவிட எந்த வகையிலும் குறைவில்லாமல் இருக்கும் இந்தப் படத்தைப் பற்றி ஏன் எழுதத் தோன்றவில்லை என்று எனக்குப் புரியவில்லை.

கடைசியாக பாலுமகேந்திரா அவர்கள் பேசும்போது, இந்தப் படத்தை தூர்தர்ஷன் நிதிவழங்க, தன் சொந்த தயாரிப்பாக 10 லட்ச ரூபாய் செலவில் எடுத்து முடித்ததாகவும், ஆனால் இன்று இதன் மூலப் பிரதி (Original negative) எங்கு இருக்கிறது என்று தெரியவில்லை….. அதுபோலத்தான் ‘வீடு’ படத்தின் மூலப் பிரதியும் கிடைக்கவில்லை என்றார்.

“இந்த இரண்டு படங்களின் மூலப் பிரதியும் கிடைக்காததால் நான் ‘மூன்றாம் பிறை’ படத்தின் மூலப்பிரதியை தேடுவதை விட்டுவிட்டேன். அதுவும் இல்லை என்று தெரியவந்தால் அவ்வளவுதான். எனக்கு அதைத் தாங்கும் திராணி கிடையாது.

தமிழ் நாட்டில் 40 வருடங்களுக்கும் மேலாக சினிமா சம்பந்தப்பட்டவர்களின் ஆட்சிதான் நடைபெறுகிறது. ஆனால் இப்படிப்பட்ட தமிழ் படங்களின் பிரதிகளைக் காக்க ஒரு ‘சினிமா ஆவணக் காப்பகம்’ இல்லை என்பதை நினைக்கும்போது வேதனையாக இருக்கிறது” என்று சொல்லும்போது அந்தக் கலைஞனின் நா தழுதழுத்து கண்கள் கலங்கியது… காரணம் புரியாத குற்ற உணர்ச்சி என்னுள் ஏற்பட்டது.

……எதைநோக்கிப் போய்க்கொண்டிருக்கிறோம் நாம்?

ஒரு சமூகத்தின் ஆணிவேராக இருக்கும் கலையும் இலக்கியமும் சரியான முறையில் அடுத்தடுத்த தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கப்பட்டால்தான் அந்த சமூகம் ஒரு உயிருள்ள சமூகமாக இருக்கும்.

வெறும் அறிவியலையும் தொழில்நுட்பத்தையும் மட்டுமே கற்றுக்கொண்டு அதற்குமட்டுமே முக்கியத்துவம் கொடுத்து வளரும் இந்தத் தலைமுறையிடம் இயந்திரத்தனத்தைத் தவிர வேறொன்றையும் எதிர்பார்க்கமுடியாது.

இன்று அதிகரித்துவரும் அனாதை இல்லங்களுக்கும், முதியோர் இல்லங்களுக்கும் மிக முக்கிய காரணம் இந்த இயந்திர மனோபாவம்தான் என்பது என் தனிப்பட்ட அபிப்ராயம் .

படம் முடிந்து வீடு வந்து சேர்ந்தபின்னும் அந்த சந்தியா ராகம் என்னோடு பேசிக்கொண்டே இருந்தது. நானும் ஒருநாள் முதுமையின் பிடியில் அகப்படத்தான் போகிறேன். அன்று என்முன் விரியும் உலகம் எப்படிப்பட்டதாக இருக்கும்…?

நினைத்துப் பார்க்கப் பார்க்க….. தூக்கம் தொலைந்துபோனது…

முதுமையால் ஆட்கொள்ளப்பட்டு கைகள் நடுங்கியபடி திரு பாலு மகேந்திரா அவர்கள் கடைசியாக சொன்ன வார்த்தைகள் இன்னும் என் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.

“நல்ல சினிமா எடுக்கவேண்டும் என்று புறப்பட்டுவந்து இந்த 40 சொச்ச வருடங்களில் எனக்குப்பிடித்து நான் எடுத்த இரண்டே நல்ல படங்கள் ‘வீடு’, ‘சந்தியா ராகம்’ தான். இப்போதுகூட குறைந்த செலவில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் ஒரு படம் எடுத்து வருகிறேன்.”

“நான் இருக்கும் வரை இதுபோன்ற படங்களை எடுத்துக்கொண்டே இருப்பேன். என்று நான் படம் எடுப்பதை நிறுத்துகிறேனோ, அன்று நான் இல்லை”

சொல்லிவிட்டு அரங்கத்தின் ஸ்தம்பிப்பினூடே மெதுவாக நடக்க ஆரம்பித்தார்…………………..

 

 

பின் குறிப்பு : இந்த அருமையான நிகழ்வினை சிறப்பாக அமைத்துக் கொடுத்த “தமிழ் ஸ்டுடியோ”வுக்கும் அதில் மிக உண்மையாக உழைத்து வரும் ‘அருண்’ போன்ற நண்பர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்களும் நன்றிகளும் …

நன்றி : “தமிழ் ஸ்டுடியோ ” (கீழுள்ள இரண்டு படங்கள் )

About arrawinthyuwaraj

be happy and make others happy
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

15 Responses to சந்தியா ராகம்

 1. Oswin சொல்கிறார்:

  Romba romba nalaa irukku …unga wrtin skill..lovely

 2. anuradha சொல்கிறார்:

  hmm.. will watch for sure…. padam nijamava neenga eludina maadri avlo nalla irukaa nu paathu solren..

 3. ramdaus சொல்கிறார்:

  அப்பாடா, வேர்ட்ப்ரஸ்க்கு வந்தியா ஒரு வழியா. நல்ல பதிவு இது. பாலு மகேந்திரா அவர்களின் ஒரு சில படங்கள் எனக்கு மிகப் பிடித்தவை, உ.ம் சதிலீலாவதி. அதைப் பார்க்கும் போதெல்லாம் வயிறு வலிக்கச் சிரித்திருக்கிறேன். இப்போதுள்ள காமெடிக் காட்சிகளுக்கு ஒப்பாமல் சூப்பராக இருக்கும். இவர் படங்களின் ஒரிஜினல் பதிவெல்லாம் வெளிநாட்டிலே கண்டிப்பாக இருக்கும் என நினைக்கிறேன்.

 4. arrawinthyuwaraj சொல்கிறார்:

  இந்தப் படத்தைகூட சிலர் அகிரா குரசொவாவின் “Ikuru” வின் பாதிப்பாக சொல்லுவார்கள் . ஆனால் அப்படி விமர்சனம் செய்வது ஞாயமாகாது. அப்படிப் பார்த்தால் குரசொவா அவர்களுக்கும் ஒரு பாதிப்பு இருந்திருக்கும், அது நமக்கு தெரியாததால் அதை மூலம் என்று சொல்கிறோம்…
  ஆனால் இது முழுக்க முழுக்க நம் சூழல் சார்ந்த பதிவு… ஒவ்வொரு காட்சியும் நம் மரபால் செதுக்கப்பட்டது…
  “எனக்கு முதுமை வந்தால் நான் என்ன செய்வேன், என்று யோசிக்கும்போது தோன்றிய கதைதான் இது” என்று கடைசியில் திரு.பாலு மகேந்திரா அவர்களே குறிப்பிட்டார்…

 5. பிரமிளா சொல்கிறார்:

  சந்தியாராகம் படத்தை பார்த்திருக்கிறேன்….உங்கள் இந்தப் பதிவு அதைத் திரும்பவும் பார்க்க வேண்டுமே என்ற ஏக்கத்தை என்னுள் விதைத்து விட்டிருக்கிறது…

 6. rajalakshmiparamasivam சொல்கிறார்:

  Beautiful presentation
  N.Paramasivam

 7. Shakila Hamid Hussain சொல்கிறார்:

  After reading this I remembered having seen this movie many years back . Many things which I didn’t understand those days, age and maturity and personal experiences makes me understand now. very touching film. Your narration brought back the film very vividly in front of my eyes. Thanks for bringing back memories.

 8. Radha Sriram சொல்கிறார்:

  miga arumai..sandhya kalam evalavu azhaga irukko appadi adhai neengal varnichadhum..indha padam parkum aavalai thoondi ulladhu..

 9. Radha Sriram சொல்கிறார்:

  miga arumai..sandhya raagam evalavu azhaga irukko appadi adhai neengal varnichadhum..indha padam parkum aavalai thoondi ulladhu..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s