பெண்கள் ….. வாகனம் …. கட்டுப்பாடு…

படம்

 

“தண்ணீர் லாரியில் சிக்கி இளம்பெண் பலி”  

நேற்று  கடை ஒன்றின் வெளியே மாலைச் செய்தியாக தொங்கிக்கொண்டிருந்த வாசகங்களில்  இதுவும் ஒன்று.

அந்த வாசகத்தின் அருகே,  சக்கரங்களில் சிக்கி சிதைந்த இளம்பெண்ணின் உடல். அருகில் ஒரு இருசக்கர வாகனம்… நல்ல தெளிவான வண்ணப் புகைப்பட இணைப்புவேறு…

பார்த்த உடன் எனக்குள் ஏற்பட்ட படபடப்பு இன்னும் அடங்கவில்லை…

நகரங்களில் இது சாதாரண செய்திதான் .

” ஐயோ பாவம்” … “இந்த லாரிக்காரனுங்களே இப்படித்தான்”  … “விதி” .. இப்படியெல்லாம் பெருமூச்சுடன் நகர்வது இயல்பாகிப்போன ஒன்று.

அதைத்தாண்டி நம்மால் எதையும் செய்துவிடமுடியாது என்பதும் நிதர்சனம். ஆனால் அவளின் பெற்றோர், உற்றார் உறவினர்களின் நிலையை  நினைத்துக்கூடப் பார்க்கமுடியவில்லை. யோசிக்க ஆரம்பித்தாலே நடுங்குகிறது.

இளைஞர்கள் பைக்குகளில் பறந்து செல்வதையும் , சாலையின் குறுக்கே படுத்து எழுந்து மற்றவர்களின் ரத்த அழுத்தத்தை எகிற வைப்பதையும் நாம் அன்றாடம் பார்க்கிறோம். “எப்பிடி போறாய்ங்க பாரு”…. “இதெல்லாம் எங்க உருப்படப் போகுதுகளோ”…. “எங்கயாவது அடிபட்டு விழுந்தாத்தான் புத்திவரும்” என்கிற சாபங்களை நம் சாலைகள் கேட்டுப் பழகிவிட்டன..

பெண்கள் இருசக்கர வாகனங்கள் ஓட்டுவதைப் பற்றி அவ்வளவாக யாரும் கண்டுகொள்வதில்லை. பொதுவாக அவர்கள் மிக நிதானமாக ஓட்டுவதாகவும் ,அதிக வேகம் போவதில்லை என்றும் நம்மில் பலர் நினைத்துக்கொண்டிருக்கிறோம்.

கடந்த 15  வருடங்களாக பெண்கள் இருசக்கர வாகனங்கள் ஓட்டுவது அதிகரித்திருக்கிறது, குறிப்பாக நகரப் பெண்கள். சற்று கூர்மையாகக் கவனிக்கும்பட்சத்தில், வெகு சில பெண்களே சரியாகவும் கட்டுப்பாட்டுடனும் வண்டி ஓட்டுகிறார்கள் என்பதை ஆழமாக அவதானிப்பவர்கள் உணருவர். சமீப காலமாக அதிகரித்துவரும் இதுபோன்ற விபத்துகளே சாட்சி…

வேகமாக ஓட்டுவதற்கும் கட்டுப்பாடில்லாமல் ஓட்டுவதற்கும் பெரும் வித்தியாசம் இருக்கிறது. வண்டியின் மொத்த இயக்கமும் ஓட்டுபவரின் உடல்மையப்புள்ளியை வைத்து சரியாக இயங்குவது என்பதே கட்டுப்பாடான ஓட்டும் முறை (controlled driving) .  இது  90% பெண்களுக்கு இருப்பதில்லை என்பது அதிர்ச்சி தரும் உண்மை. 

ஓட்டுனர் பயிற்சிப் பள்ளி நடத்திவரும் என் நண்பர் ஒருவருடன் இதைப்பற்றி விரிவாக பேசும்போது அவரும் இதை உறுதிசெய்தார். பெண்களின் உடற்கூறு, மூளைச் செயல்பாடு போன்றவைகள் இதில் அடங்கியிருந்தாலும், பெண்களுக்கான இருசக்கர  வாகனங்களின் வடிவமைப்பும், அது ஏற்படுத்தித் தருகிற இலகுவான இயங்குமுறையும் இதற்குக் காரணமென்றால் நம்ப சற்றுக் கடினமாகத்தான் இருக்கும்.

பெண்களுக்கென்று வடிவமைக்கப்படும் வாகனங்களில் வேக அளவுப்படி என்று சொல்லக்கூடிய கியர்சிஸ்டம் (Gear system) இல்லை. சைக்கிள் பொல கால்கள் செயல்படும் வேலையும் இல்லை. கொஞ்சம்  balance மட்டும் இருந்தால் போதும் , சொகுசாகக் கிளம்பிவிடும். ஆக்ஸிலேட்டரை முறுக்க முறுக்க வேகமெடுக்கும். நொடிகளுக்குள் வேகத்தின் அளவு தாவி உயரும். வேகம் செல்கிறது, ஆனால் என்ன நிலையில் செல்கிறது என்பதை அவதானிப்பதைவிட அதன் போக்கில் ஏற்படும் சுகமானது இன்னும் இன்னும் முறுக்கவே தூண்டுகிறது. ஓட்டும் நபரின் உடற்கட்டுப்பாட்டைவிட்டு வண்டி கொஞ்சம் கொஞ்சமாக விலகுவதை ஓட்டும் நபரால் உணர முடிவதில்லை…

ஒரு சாலை முடிந்து மறு சாலை திரும்பும் இடத்திலோ, சாலைகளின் சந்திப்பிலோ அல்லது குறுக்கில் வாகனங்கள் வரும்போதோ, இப்படியான சந்தர்ப்பத்தில் உடனே ப்ரேக்கை பிடிக்கும்போது, அச்சமயம் வண்டிமீது ஓட்டும் நபருக்கு இருக்கும் ஆளுமையைப் பொறுத்தே அங்கு என்ன நடக்கும் என்பது முடிவு செய்யப்படுகிறது.

ஆண்களுக்கு கட்டுப்பாடுள்ள ஓட்டும்முறை, அவர்களின் வண்டியில் உள்ள கியர் சிஸ்டத்தால் அருமையாக வடிவமைக்கப்பட்டிருந்தாலும் வேகம் எடுப்பதிலும் அதில் கிடைக்கும் போதையிலும் அவர்கள் தாமாகவே கட்டுப்பாட்டை இழக்கிறார்கள். வேகம் குறைவாக ஓட்டுபவர்கள் பெரும்பாலும் விபத்தை சந்திப்பதில்லை.

எல்லாவற்றையும் மீறி நடக்கும் விபத்துக்களை இங்கு சேர்க்க இயலாது. எதிரில் வருபவரின் கவனக்குறைவால் ஏற்படும் சம்பவங்களையும் இங்கு பொருத்திப் பார்க்கவேண்டாம்.   

இதே கியர் சிஸ்டம் உள்ள வாகனங்களை ஓட்டும் பெண்கள் ஆண்களைவிட பிரமாதமாக கட்டுப்பாட்டுடன் ஓட்டுகிறார்கள். அவர்கள் ஏகதேசம் விபத்தையே சந்திப்பதில்லை என்றுகூட சொல்லலாம்.ஆனால் கியர் சிஸ்டம் உள்ள பைக்குகளை ஓட்டும் பெண்கள் அரிது.

 இதைப்பற்றி இன்னும் விரிவாக எழுதிக்கொண்டே போகலாம். அப்படிப் போக ஆரம்பித்தால் துவங்கியதன் நோக்கம் மாறி, இந்தக் கட்டுரையே  விபத்துக்குள்ளாகிவிடுமென்பதால் விஷயத்தை சுருக்கி முடிக்க விழைகிறேன்..

 பெண்பிள்ளைகள் உள்ள வீட்டில் கட்டாயம் இந்த கட்டுப்பாடான ஓட்டும் முறை பற்றி அடிக்கடி சொல்லுங்கள். அதற்காக ‘வாகனம் ஓட்டினாலே விபத்துதான்’ என்ற மனபயத்தை உருவாக்கிவிடாதீர்கள். அது விபத்தை விடக் கொடியது. இரு சக்கர வாகனம் ஓட்ட ஆரம்பிக்கும் ஆண்குழந்தைகளுக்கும் இது பொருந்தும்.

சமயம் கிட்டும்போது அவர்களுடன் வண்டியின் பின் அமர்ந்து அவர்களை ஓட்டச் சொல்லுங்கள். அப்படி ஓட்டும்போது “பாத்து பாத்து, இப்படியா ஓட்டுறது” என்று அவர்களை பதற்றமடையச்செய்யாமல் ஊக்கப்படுத்தி கட்டுப்பாட்டுடன் ஓட்டப் பழக்குங்கள்

வீட்டில் இருக்கும் சமயங்களில் கீழ்க்காணும் டிப்ஸ்களை அவர்களின் மனதில் இதமாகப் பதியவைக்க முயலுங்கள்…

 1. தெருமுனை வருவதற்கு சில அடிகள் முன்னமே ப்ரேக் பிடித்து நின்றே திரும்பவேண்டும். எதிரிலோ குறுக்கிலோ வாகனமே வரவில்லையென்றாலும் பரவாயில்லை.

2.  எந்த வாகனத்தையும் அவசரப்பட்டு முந்தவேண்டாம். குறிப்பாக இடப்பக்கமாக முந்துவது கூடவே கூடாது. எதிர் வாகனங்களைப் பார்த்தே வலதுபக்கமாக, அதுவும் அத்யாவசியமெனில் முந்தலாம்.

3.  பதற்றமாக இருக்கும்போது இருசக்கர வாகனத்தை எடுக்கக் கூடாது. சிறிது ஆசுவாசப்படுத்திக்கொண்டு பின் வண்டியை எடுக்கலாம். பதற்றமாகி பின் கிளம்பும்போது மெதுவாகச் செல்வது உத்தமம்.

4.  ஹெல்மெட் கட்டாயம் அணிந்துகொண்டுதான் செல்லவேண்டும்.

5.  பெண்கள்  முகம் முழுக்க துப்பட்டாவை சுற்றி , ஒரு பெரிய கண்ணாடி அணிந்துகொண்டு நீளக் கையுறைகளுடன் செல்வது தற்போது அதிகமாக தென்படும் சாலைக் காட்சிகளில் ஒன்று.கூடியமட்டும் இப்படி செல்வதைத் தவிர்க்கலாம். அப்படி செய்யும்போது சுவாசம் முட்டாமலும், தலையில் ஹெல்மெட் அணிந்தும் கொஞ்சம் மங்கல்குறைந்த கண்ணாடி அணிந்து செல்வது மிக நல்லது.  சரும பாதுகாப்பு முக்கியம்தான். அதைவிட உயிர் பாதுகாப்பு முக்கியம்.

6. வாகனம் ஓட்டும்போது பாட்டு கேட்டுக்கொண்டு செல்வது, ஹெட்ஃபோன் மூலம் பேசிக்கொண்டே செல்வது அறவே வேண்டாம்.

7.  பக்கக் கண்ணாடிகளைப் பார்க்காமல் வண்டியைத் திருப்பவோ நிறுத்தவோ சாலை கடக்கவோ கூடாது.

8. வண்டியின் பிடியும், உட்காரும் நிலையும் ஆரம்பிக்கும்போது எந்த அளவு பிடிமானமும் கட்டுப்பாடும் இருக்கிறதோ, அது ஓட்டும்போதும், ப்ரேக் பிடித்து நிறுத்தும்போதும் இருக்கவேண்டும்.

9. இரண்டுபேருக்கு மேல் செல்வதை கூடியமட்டும் தவிர்க்கவும். 

10. பிரச்சனைகளை விவாதித்தபடி வாகனம் ஓட்டுவது அறவே தவிர்க்கவும்.   (இந்த டிப்ஸ் தம்பதிகளுக்கும், காதலர்களுக்கும்)

 இது அடிப்படை டிப்ஸ்கள்தான். இதை பின்பற்ற ஆரம்பித்தால் மற்ற விஷயங்கள் தானாகவே பிடிபட்டுவிடும்.

வாகனம் ஓட்டுவது என்பது நேர சேமிப்பு, எளிதில் சென்றடைவது போன்றவைகளைவிட , அதுவும் ஒரு கலை. அதைக் கலைநயத்துடன் முழுமையாக உணர்ந்து செய்வது இன்னும் உன்னதம்…

எது நடக்கவேண்டுமென்று இருக்கிறதோ அது நடந்தே ஆகும் என்றால், அதற்கு பதில் சொல்வது இயலாதகாரியம்.

 எது நடந்தாலும் நாம் எப்போதும் கவனமாக இருக்கவேண்டும் என்பதற்காவே இந்தக் கட்டுரை..

About arrawinthyuwaraj

be happy and make others happy
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

16 Responses to பெண்கள் ….. வாகனம் …. கட்டுப்பாடு…

 1. Kirthika Tharan சொல்கிறார்:

  அருமையான கட்டுரை.

 2. ranjani135 சொல்கிறார்:

  மிகச் சிறப்பாக எப்படி இந்த மாதிரி விபத்துக்கள் நேரிடுகின்றன என்று அலசி ஆராய்ந்து எழுதியிருக்கிறீர்கள், அர்விந்த்! இந்தக் கட்டுரையின் ஒவ்வொரு வார்த்தையும் வண்டி ஓட்டும் பெண்கள் எல்லோரும் படித்து உணர வேண்டியவை.

  நானும் சில காலம் இரண்டு சக்கர வாகனம் ஓட்டக் கற்றுக் கொண்டவள்தான். பாலன்ஸ் பண்ண சரியாக வராததால் தொடர்ந்து ஓட்டுவதை தவிர்த்துவிட்டேன். நீங்கள் சொல்லியிருக்கும் பத்து கட்டளைகளை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டியது அவசியம்.

  எனக்கும் பெண்கள் இரண்டு சக்கர வாகனங்கள் ஓட்டுவதைப் பற்றி நிறைய ஆதங்கங்கள் உண்டு. ஆண்களுக்குப் போட்டியாக எல்லாம் செய்வோம் என்னும்போது அதற்குத் தக்க பாதுகாப்பும் தேவை

  இன்றைய தினத்தில் மிகவும் தேவையான கட்டுரை இது.
  உங்கள் அனுமதியுடன் இதனை என் தளத்தில் reblog செய்கிறேன். இன்னும் பலரும் படிக்க உதவும்.

  ட்விட்டரிலும், பேஸ்புக்கிலும் கூடப் பகிர்ந்து கொள்ளுகிறேன்.

 3. Geetha Sambasivam சொல்கிறார்:

  ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்பெண்ணின் தாய் தான் வண்டியை ஓட்டி இருக்கிறார். சாலையின் மேடு, பள்ளத்தில் அந்தப் பெண் தடுமாறிக் கீழே விழ, பின்னாலேயே வந்த லாரி மேலே ஏறி விட்டது. அம்மாவின் கண்ணெதிரே மகள் மரணம்! கொடுமையிலும் கொடுமை. :(((((

 4. ரஞ்சனி அம்மா மூலம் (http://ranjaninarayanan.wordpress.com/2013/04/04/அர்விந்த்யுவராஜ்-எழுதிய/) உங்கள் தளம் தெரியும்… தொடர்கிறேன்… நன்றி…

 5. Avargal Unmaigal சொல்கிறார்:

  மிகவும் பயனுள்ள் அருமையான கட்டுரை.

  பாராட்டுக்கள். வாழ்த்துகள்

 6. வணக்கம்
  யுவராஜ்(அண்ணா)

  ஒரு தாய் தன் பிள்ளைக்கு புத்தி புகட்டுவது போல நாலுபேராவது திருந்தி வாழவேண்டும் என்ற சிந்தனை ஆளுமையுடன் சிறப்பான கட்டுரையை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி நீங்கள் கூறிய கருத்தை கடைப்பிடித்தாள் ஒவ்வொரு மனிதனும் விபத்தில் சிக்காமல் இருக்கலாம் வாழ்த்துக்கள் அண்ணா
  (ரஞ்ஜனி அம்மா மூலம் உங்கள் தளத்துக்கு முதலில் வருகை தந்துள்ளேன்)

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

 7. ezhil.V சொல்கிறார்:

  அக்கரையான பதிவு ரஞ்சனி அம்மாவின் பதிவினால் இங்கு வந்தேன் நானும் என் முக நூல் பக்கத்தில் பகிர்கிறேன்…

 8. கமலி சொல்கிறார்:

  உண்மையில் வண்டி ஓட்டும் போது வேகம் வேகம் எடுக்க கிடைக்கும் போதை தான் அதி வேகமாக செல்ல தூண்டுகிறது…இடையில் வரும் ஸ்பீடு ப்ரேக்,, குறுக்கே வரும் மனிதர் பிற வாகனம் போன்றவை வண்டி நம் கண்ட்ரோலில் இல்லை என்பதை சொல்லும்…ஆனாலும் அந்த வேகம் என்னும் போதை விடாது…மற்றொன்று பெண்கள் சட்டென்று எமோசனல் ஆவார்கள் அதே மனநிலையில் வண்டி ஓட்டினால் அவர்கள் மனம் பிரச்சனையில் இருக்க வண்டியின் மீதோ எதிரே வரும் வாகனங்கள் மீதோ கவனம் இருக்காது….பயனுள்ள கட்டுரை…

 9. வெண்ணிலா சொல்கிறார்:

  மிகவும் பயனுள்ள தகவல். இதிலிருந்து, வண்டி ஓட்டும்போது நான் கடைபிடிக்கத் தவறிய பல விஷயங்களை இனிமேல் கடைபிடிப்பது நல்லது என்பதை புரிந்து கொண்டேன் . நன்றி.

 10. rajalakshmiparamasivam சொல்கிறார்:

  திருமதி ரஞ்சனி அவர்களின் வலைத் தளத்திலிருந்து இங்கு வந்தேன்.
  உங்களுடைய 10 commandments for two wheelers பின்பற்றினால் விபத்துகளை அறவே தவிர்க்கலாம். அதை விடவும் 2 சக்கர வாகனங்களில் அனுப்பி விட்டு வீட்டில் காத்து கிடக்கும் அன்புள்ளங்கள் நிம்மதியாக இருக்கலாம் . ஆனால் இது அத்தைக்கு மீசை முளைத்தால் ……. கதை தான். நான் இன்னும் உங்களுடைய மற்ற பதிவுகளின் தலைப்பை தான் பார்த்தேன். சமுதாய அக்கறை மிகுந்தவர் போல் தெரிகிறது.
  வாழ்த்துக்கள்,
  தொடருங்கள்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s