தனித்துவம் இல்லாத தனித்துவம் ….

படம்

 

 

“மணிவண்ணன் சாரைப் பற்றி ஒரு பதிவு போடு” என்று ஜெர்மனியில் இருந்து நிம்மி சிவா அண்ணியின் குறுஞ்செய்தி என்னிடம் வந்தபோது நான் அவர் வீட்டின் வாசலில் நின்றுகொண்டிருந்தேன்.

அவரைப்பற்றி அதிகமாகப் பேசிக்கொண்டிருக்கும் மனோபாலா சார் உள்ளே கண்ணீரோடு தலைமாட்டில் நின்றுகொண்டிருந்தார். “அவரால்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறேன்” என்று வெளிப்படையாகவே சொல்லும் சத்யராஜ்சார் தலையில் கைவைத்தபடி நிலைகுலைந்துபோய் உட்கார்ந்திருக்கிறார்.

அவரைப்பற்றி என்ன எழுத….

எனக்குள்ளே அவரின் மறைவின் அதிர்வு பெரும் ஓசையிட்டு இரையாமல் , தொடர்ந்து கரையை வந்து வந்து தொட்டுச்செல்லும் கடலலையின் வேகத்தில், ஆனால் நிதானமான தொடர் எண்ணமோதல்களை ஏற்படுத்திக்கொண்டே இருக்கிறது.

இந்த மனிதனைப் பற்றி என்ன பேரிதாக எழுதிவிடப் போகிறேன் என்று இந்தப் பதிவை எழுத ஆரம்பித்து இதுவரை வந்தபின்னும் எனக்குத் தெரியவில்லை என்பதுதான் நிஜமான நிஜம். இனி வரும் பத்திகள், ஒருகாபி கொஞ்சம் மௌனம், சில உலாத்தல்களுக்குப் பிறகு வந்தவை…

என் பள்ளி நாட்களில் ராஜபாளையம் லெட்சுமி விலாஸ் திரையரங்கில் செகெண்ட்ஷோ (இரவுக்காட்சி) “விடிஞ்சா கல்யாணம்”படத்தின் டைட்டில் கார்டில்தான் “மணிவண்ணன்” என்னும் பெயர் எனக்கு அறிமுகம். ஏனோ தெரியவில்லை, இன்றுவரை என் மனதை விட்டு நீங்காத த்ரில்லர் படங்களில் இதுவும் ஒன்று . அடுத்து நான் பார்த்து இன்னும் மனதைவிட்டு அகலாத அவரின் இன்னொருபடம் “வாழ்க்கைச் சக்கரம்” . அதுவும் இரவுக் காட்சிதான் . கம்பம் யுவராஜா திரையரங்கில்.

மேற்சொன்ன இரண்டுபடமும் அவரின் இயக்கத்தில் வந்த படங்களில் முக்கியமான இடத்திலோ , அல்லது தமிழ் சினிமாவின் முக்கிய படங்களின் வரிசையிலோ இல்லை. ஆனால் அந்த இரு படங்கள் இன்று வரை எனக்கு ரொம்பப் பிடிக்கும். பிடித்ததற்கான பிரத்யேகக் காரணங்கள் இன்றுவரை எனக்குப் பிடிபடவில்லை.

போராட்டங்களும் சிறைவாசமும் தன் இளம் வயதிலெயே கடந்த சமூகப் போராளியான ஒரு இளைஞன், சென்னை வந்து திரைப்பட இயக்குனரான ஒருவரிக்கதைதான் மணிவண்ணன் சாருடையது.

தனித்துவம் , புதுமை , வித்தியாசம் என்ற தமிழ் சினிமாவின் புகழ்ச்சிக்குரிய எந்தத் தகுதியுமே இல்லாமல், சினிமாவில் இருந்ததுதான் மணிவண்ணன் என்னும் எதார்த்த மனிதனின் தனித் தகுதி.

அவர் இயக்கிய படங்களில் எந்தவித “உலகத் தரமும்” , தனித்துவக் காட்சியமைப்பும் பெரிதாக இருந்ததில்லை. ஒரு கதைக்குண்டான காட்சிப்படுத்தலும், a simple making formula மட்டுமே இருந்திருக்கிறது.

பல சிறந்த சினிமா இயக்குனர்களின் பாணியை நாம் அறிவோம். அவர்கள் படங்களில் காட்சிப்படுத்தல் தொடங்கி வசனம் பேசும் முறை வரை எல்லாமே தனியாகத் தெரியும். அவர்கள் உபயோகிக்கும் களமும் கருவும் ஏறக்குறைய ஒரே மாதிரித்தான் இருக்கும்.உள்ளுக்குள் இருக்கும் கதையின் போக்கு மட்டுமே மாறியிருக்கும். ஆனால் எந்த தனிப்பாணியும் இல்லாமல் காதல், குடும்பம், த்ரில்லர், அரசியல்,நகைச்சுவை என்று வெவ்வேறு நிறமுடைய சினிமாக்களைக் கொடுத்தவர் இயக்குனர் மணிவண்ணன் அவர்கள். என் அறிவிற்கு, தமிழ் திரை உலகில் திரு.எ.பி.நாகராஜன் அவர்களுக்குப் பின் மணிவண்ணன் சார்தான் இவ்வளவு வேறுபட்ட படங்களைக் கொடுத்தவர்.

தான் சொல்ல நினைத்ததை எந்தவித தயக்கமும் இன்றி நேர்மையாக சொல்லும் திறன்படைத்த ஒரு இயக்குனர் அவர். தயாரிப்பாளிரின் சிரமம் தெரிந்த நல்ல சினிமாக்காரன் . தன் கடைசிப் படத்தின் படப்பிடிப்பைக் கூட 50 நாட்களுக்குள் நடத்தி முடித்தார் என்றால் அவரின் தொழில் சிரத்தையை யோசித்துப் பாருங்கள். நடிகராக அவருக்குக் கிடைத்த மாபெரும் அங்கிகாரம், ஒரு இயக்குனராக மணிவண்ணன் அவர்களுக்குக் கிடைக்கவில்லை என்பது என்னைப் போன்ற பலரின் குறை.

படம்

 

காதல்கோட்டை படத்தில் “ரங்கீலா ஊர்மிளா தெரியாம… நீ தமிழ்நாட்ட கேவலப்படுத்துறியா” என்ற அவரின் நக்கலான வசனம் இன்னும் என் காதில் ஒலித்துக்கொண்டிருக்கிறது. இந்த நகைச்சுவை வசனம்தொட்டுத்தான் சமூக அக்கறையுள்ள ‘நடிகர் மணிவண்ணனாக’ என் மனதில் பதிய ஆரம்பித்தார்.

நடிப்பில்கூட எந்தவித தனித்துவமும் இல்லாமல் அவராகவே இருந்ததுதான் அவரின் தனித்துவம். இயல் பிம்பம் – திரை பிம்பம் (real life image & celluloid image) என்று சொல்லக்கூடிய இரண்டு முகங்கள் எல்லா நடிகர்களுக்கும் இருக்கும். ஆனால் அது இரண்டுமே இயல் பிம்பமாக (real image) அமைவது அபூர்வம். அத்தகைய கொடுப்பினை எம்.ஆர்.ராதா, மணிவண்ணன் போன்ற ஒரு சில கலைஞர்களுக்கு மட்டுமே காலம் வழங்கியிருக்கிறது. அவரின் முகத்தை நாம் மனதில் கொண்டுவரும்போதே அவர் பேசிய எதாவது ஒரு அரசியல் அல்லது சமூகக் கருத்து நம் காதில் “ங்ணா” சேர்த்து விழுவது தவிர்க்க முடியாது.

இப்படிப்பட்ட மனிதன் எங்கே மற்ற எல்லோரையும்விட இன்னும் தனித்துவப் படுகிறார்?

ஒரே ஒரு இடம்தான்.

“எப்போதும் , எந்த நிலையிலும் தன் சுயத்தை இழக்காதது.”

அவர் இயக்குனராகக் கோலோச்சிய காலத்தில் அரசியலில் இருந்த பல சினிமாக்காரர்களைவிட தேசிய, மாநில, உலக அரசியலில் அவர் அதிக ஞானமுள்ளவராக இருந்தும் , அதை அவர் எந்த வகையிலும் சுயநலத்திற்காகப் பயன்படுத்தவில்லை.. ஆவேசாமாக சிலிர்த்து பேசுபவர் இல்லைஎன்றாலும் எல்லோரையும் கவரும் இயல்பான நல்ல மேடைப்பேச்சாளர் . 80களில், பெரிய கட்சி ஒன்றில் இணைந்திருந்தால் அவரின் திறமைக்கும் அறிவிற்கும் அவர் ஒரு அமைச்சராக இருந்திருக்க முடியும். ஆனால் அவர் அதைச் செய்யவில்லை.

இப்போதும் அவரின் அரசியல் நிலைப்பாடு பற்றி விமர்சிக்கும் பலர் அவர்மேல் அன்பும் மரியாதையும் கொண்டவர்கள், காரணம் “மணிவண்ணன் ஒரு உண்மையான தமிழ் இனப் பற்றாளன். கருத்தியல் ரீதியாக அவருக்கு சரி என்று படும் இடத்தில் அவர் இருப்பாரே தவிர, எப்போதும் அரசியல் ஆதாயத்திற்காக அல்ல” என்று அவர்களுக்கு நன்றாகத் தெரியும். அத்தகைய நேர்மையும், சுயமரியாதையும் கொண்ட புகழ்மிக்க மனிதர்களைக் காண்பது அபூர்வம்.

“தமிழர் நலன்” என்னும் வார்த்தையில் அவர் மேல் வைத்திருக்கும் அபிமானம் அளப்பரியது. அவரின் இன உணர்வு, மொழி உணர்வு அசாத்தியமானது. அதற்காக யார் முன்னிலையிலும் தன் கருத்தை வலியுறுத்த தயங்காதவர். அவரின் நண்பர்கள் பலர் பல சம்பவங்களைச் சொல்லக் கேட்டிருக்கிறேன். அதில் பல மிக மிக திகைப்பானவை.

ஈழத் தமிழர்கள்பால் அவர் வைத்திருக்கும் அன்பு ….. சொல்ல வார்த்தைகளே இல்லை.இயல்பிலேயே தைரியமான குணாதிசயம் கொண்ட அவர், சமீப காலங்களில் கண்ணீர்விட்டுக் கதறிய சம்பவங்களில் பெரும்பான்மை ஈழத் தமிழர் சார்ந்தவை என்பதுதான்.

நன்றி மறவாமை, குருபக்தி, நட்பிற்குத் தரும் முக்கியத்துவம், இயல்பான நகைச்சுவை உணர்வு, புத்தகங்களின்பால் காதல், உணர்ச்சியும் அறிவும் கலந்த ஞானம், இத்தனையும் கலந்த கலவைதான் “மணிவண்ணன்” என்னும் எளிய மனிதன்.

தான் வாழும் சமூகத்தின் ஒவ்வொரு அசைவையும் எந்தவித சமரசம் இல்லாமல் பிரதிபலிப்பவனே சிறந்த கலைஞன். அதை சினிமாவிலும் நிஜ வாழ்விலும் தன் இறுதி மூச்சுவரை பிரதிபலித்த உன்னத கலைஞன் “மணிவண்ணன் சார்”

அவரோடு பழகிய பலர் என்னிடம் பேசும்போது “உன்னிடம் அதிகம் மணிவண்ணன் சாரோட டச் இருக்கு என்று சொல்லியிருக்கிறார்கள். நான் அதில் எந்தவித ஆச்சர்யமும் அடைந்ததில்லை. இயல்பிலேயே இடதுசாரி சிந்தனையும், கடவுள் மறுப்பும்,அசட்டுத்தனமும் திமிரும் சரிவிகிதக் கலவையில், கொஞ்சம் மார்க்ஸியச் செதுக்கலும் பெற்று , மனதில் பட்டதைப் பேசி, “யாவாரம் தெரியாத உதவாக்கரை” என்று முடிசூட்டப்பட்ட எல்லோரும் “மணிவண்ணன் டச்” உள்ளவர்களாகத்தான் இருக்க முடியும்.

“மணிவண்ணன் டச்” உள்ளவர்கள் பலர் இருக்கலாம். ஆனால் மணிவண்ணனாக வாழ்வது மிக மிக மிகக் கடினம் ….. அதற்கு போலித்தனமில்லாத அசாத்திய நேர்மை தேவை.

வீர வணக்கம் மணிவண்ணன் சார்…

 

 

 

About arrawinthyuwaraj

be happy and make others happy
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

8 Responses to தனித்துவம் இல்லாத தனித்துவம் ….

 1. sheila.rathnam சொல்கிறார்:

  ##ஈழத் தமிழர்கள்பால் அவர் வைத்திருக்கும் அன்பு ….. சொல்ல வார்த்தைகளே இல்லை.இயல்பிலேயே தைரியமான குணாதிசயம் கொண்ட அவர், சமீப காலங்களில் கண்ணீர்விட்டுக் கதறிய சம்பவங்களில் பெரும்பான்மை ஈழத் தமிழர் சார்ந்தவை என்பதுதான்.## avarai naan paarkka arambithathum eela thamilan meethu avarukkulla kadhalai paartha pinbu thaan… ennai pondra eela tamil atharavalargalukku avar maraivu oru periya izhappu… Arumaiyana pathivu.. ungal writing simply superb Arrawinth…!!…. RIP Mani Sir. _ Thomas.

 2. Guna சொல்கிறார்:

  பிடித்திருக்கு……..எனக்கு ரொம்பவே பிடித்இருக்கு……இவை….

  “நன்றி மறவாமை, குருபக்தி, நட்பிற்குத் தரும் முக்கியத்துவம், புத்தகங்களின்பால் காதல், உணர்ச்சியும் அறிவும் கலந்த உணர்வு, இத்தனையும் கலந்த கலவைதான் “மணிவண்ணன்” என்னும் எளிய மனிதன்.”

  “மணிவண்ணன் டச்” உள்ளவர்கள் பலர் இருக்கலாம். ஆனால் மணிவண்ணனாக வாழ்வது மிக மிக மிகக் கடினம் ….. அதற்கு போலித்தனமில்லாத அசாத்திய நேர்மை தேவை.”

 3. Hemamalini Ramesh சொல்கிறார்:

  அருமையான பதிவு அர்விந்த்….
  எப்போதுமே நின் எழுத்துக்களுக்கு பலம் உண்டு…..
  நிச்சயம் ஒரு நாள் நின் இலக்கைச் சென்றடைவாய் என்ற வாழ்த்துகின்றேன்….

 4. mano சொல்கிறார்:

  super artical…..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s