ஒரு வாரநாளுக்கு உண்டான பரபரப்பு அவ்வளவாக அந்தத் தெருவில் இல்லை. இத்தனைக்கும் மதுரையின் முக்கிய சாலை ஒன்றின் கிளைத்தெரு அது. மேலப்பெருமாள் மேஸ்திரி வீதி. எல்லோரும் நேற்று செய்ததைத்தான் இன்றும் செய்துகொண்டிருந்தார்கள். மத்திம நாளொன்றின் சுடுவெயில் எந்தக் குறையுமின்றி தகித்தவண்ணம் இருந்தது.
வேலையொன்றை முடித்துவிட்டு அந்தத் தெருவழியாக வந்துகொண்டிருந்தேன். பழமையான தெருவாதலால் நெருக்கமான தொடர் கட்டிடங்கள், பெரும்பாலும் பழையவை. டீக்கடை ஒன்றில் தென்பட்ட கூட்டம் முன்பகல் இடைவேளை என்று உணர்த்திற்று. அந்தக் கடைதாண்டி ஒரு கண்ணாடி சுவரும் கதவும் பொருத்தப்பட்ட அலுவலகம். சுத்தமான நீல இரும்பு மடக்குக் கதவு போட்டு மறைக்கப்பட்டிருந்தது. அதன் வாசலில் ஒருவர், அத்தனை வெயிலிலும் தற்போதைய தமிழரின் மரபான “சரக்கடித்து மட்டையாவது” என்னும் தெய்வீகச் செயலில் ஆழ்ந்து ஈடுபட்டிருந்தார்.
அவதானித்தபடி அந்த இடம் கடக்கும் சமயம் ஒரு குரல்
“சக்கரக்கட்டி ராஜாத்தி – என்
என் மனச வச்சுக்கோ காப்பாத்தி
சந்தனக்கட்டி மேனியிலே – நான்
சாஞ்சுக்கவா சொல்லு மகராசி”
அனிச்சையாய் கால்கள் நிற்க, திரும்பினேன்.
இன்னும் முழுமையாகக் கருமை நீங்காத நரைத்த தலை-தாடியுடன். எழுபதுகளைக் கடந்துகொண்டிருக்கும் முறுக்கேறிய உருவம். காலடியில் சில காகிதங்கக் செருகப்பட்ட ஒரு ப்ளாஸ்டிக் பை. இல்லாமையின் அத்தனை அடையாளங்களையும் கொண்ட அந்த மனிதனிடமிருந்து அப்படி ஒரு சாரீரம் .
“பெற்றால்தான் பிள்ளையா” படத்தில் டிஎம்எஸ் – பி.சுசீலா குரல்களில் எம்.எஸ்.வி ஐயா இசையமைப்பில் கவிஞர் வாலி எழுதிய பாடல். திரையில் எம்ஜிஆரும் சரோஜாதேவியும் வாயசைத்திருப்பார்கள். அதே பாடல் அட்சரம் பிசகாமல் இந்தக் கிழவனின் குரலில், அடடா என்ன ஒரு ராகபாவத்துடன்…..
பல்லவி பாடும்போது தோள்களைக் குலுக்கி எம்ஜியாராகி…… அட அட அட என்ன குரல் என்ன குரல். டிஎம்எஸ்ஸின் ஊரிலிருந்து பாடும்போது அந்த வாடை இருக்கும்தானே. ஒலித்தட்டில் கேட்டதற்குப் பிறகு இவ்வளவு அழகாக வேறொருவர் பாடி நான் அதுவரை கேட்டதில்லை.
இப்படிப்பாடும் ஒரு மனுசனை “வெட்டிப்பய” என்று அலட்சியமாகக் கடந்து செல்லும் மந்தையிலிருந்து ஒரு ஆடு மட்டும் நின்று திரும்பினால் அந்தக் கலைஞனுக்கு சந்தேகம் வருவது இயல்புதானே. திரும்பி அவரை நோக்கி நான் நடக்க, சத்தம் மெதுவாகக் குறைந்து என்னைப் பார்த்துப் புன்னகைத்தார்.
பாட்டை முழுவதுமாகக் கேட்டுவிடவேண்டும், அது அவரின் இயல்பிலேயே இருக்கவேண்டுமென்பதால், என் கைபேசியை எடுத்து யருடனோ பேசும் பாவனையில் அவரைக் கண்டுகொள்ளாததுபோல நடைபாதையில் ஒதுங்கித் திரும்பிக்கொண்டேன்….. ஒரு சில வினாடிகள் மௌனம் …. இயல்பாகத் திரும்புவதுபோலத் திரும்பினேன் …
“பட்டுப்போன்ற உடல் தளிரோ – என்னைப்
பார்க்கையிலே வந்த குளிரோ
தோகை மயிலின்
தோளை அணைத்த்த்த்து (குரல் சுசிலாவாகி மயங்குகிறது)
தோகை மயிலின்
தோளை அணைத்து
பழகிக் கொள்வது சுகமோ”
…………………. அப்படியே குரலை டிஎம்எஸ் ஆக மாற்றி, எம்ஜியாராக மாறி தோளைக் குலுக்கிக்கொண்டே
“தொட்டுக்கொள்ள உடல் துடிக்கும் – விழி
தூரப் போகச்சொல்லி நடிக்கும்..
ஆளை மயக்க்க்கும்ம்ம்ம் (அடடா.. ஒரு ஸ்டைலான கிறக்கம் )
பாவை சிரிப்பில் (ஓஹோ)
“ஆளை மயக்கும்
பாவை சிரிப்பில்
ஆசை பிறந்தது எனக்கும்
…………………………………… அடுத்து ஒரு நடன அசைவுடன்
“கொடுத்த மனசுக்கும்
எடுத்த மனசுக்கும்
கொடுத்த மனசுக்கும்
எடுத்த மனசுக்கும்
“கேள்வி என்ன” (டிஎம்எஸ்ஸின் அதே அணுக்கம்)
ஜாடை என்ன” (சுசீலாம்மாவின் அதே குழைவு)
“கேள்வி என்ன
ஜாடை என்ன
தேவை இல்லை வெட்கம்” . …
………………………………….
மெதுவாக என்னைப் பார்த்தார் … புன்னகைக்க ஆரம்பித்தேன் …. வெட்கம் கலந்த ஒரு சிரிப்பு … அதே வேட்கத்துடன்
“அத்தை மகனே அத்தானே – உன்
அழகைக் கண்டு நான் பித்தானேன்
தென்றலடிக்கும் தோட்டத்திலே –நான்
பூத்திருக்கும் முல்லைக் கொத்தானேன்”
……….
நளினத்தில் சரோஜாதேவியாகி, குரலில் சுசிலாவின் உணர்வுடன் ராக பவனி வர …… கரைந்து உருகிப்போய்விட்டேன்.
அதே உற்சாகமும் பாவமும் குறையாமல் அடுத்த சரணங்களையும் பாடி முடித்தபோது, கடுங்கோடையொன்றில் வெடித்துப்பிளந்த வயற்காட்டின்மேல் பெருமழையொன்று கொட்டித்தீர்ந்த நிறைவு எனக்கு.
என்னையும் வெயிலுக்கு ஒதுங்கிய தெருநாய் ஒன்றையும் தவிர வேறுயாரும் அவரை கவனிக்கவே இல்லை. ஏதோ வினோத ஜந்துவைப் பார்ப்பதுபோலப் பார்த்தபடி கடந்துபோய்க்கொண்டிருந்தார்கள். பாவம், அவர்களுக்குத்தான் ஆயிரத்தெட்டு வேலை.
பாடி முடித்தவரின் அருகில் சென்று
“ஐயா,.. டீ என்னமும் சாப்புடுறீங்களா”.?
குடிப்பதைப்போல கைசெய்கைகாட்டி தலையாட்டியபடியே
“வேணாம் தம்பி … போட்டது எறங்கிரும்”
“ரொம்ப நல்லாப் பாடுனீங்கய்யா “
சிரித்துக்கொண்டார்.
“ஐயா பேரு”?
“முருகன்”
“உங்களுக்கு வேறென்ன வேணும் “
“எதுவும் வேணாம் சாமி, நீ கேட்டதே போதும். ரொம்ப சந்தோசம்யா”
கீழே பார்த்தபடி நொடிகள் கடத்தியபின்
“எனக்கு ஒரே மவன். நல்லா படிக்க வச்சேன். பெரிய மருந்துக் கம்பெனியில வேல பார்க்கிறான். கல்யாணம் பண்ணி தனியா போய்ட்டான். எப்பவாச்சும் பாத்தா அஞ்சு பத்து குடுத்துட்டுப் போவான். நான் பழயபடி பேப்பர் பொறுக்கி பொழச்சுகிட்டிருக்கேன். இதுதான் அன்னைக்கும் சோறு போட்டுச்சு, இன்னைக்கும் போடுது. ஆனா சந்தோசத்துக்குக் கொறவே இல்ல. நான் நல்லா இருக்கேன்… பாத்தீல்ல… வயசு எழுவத்தி எட்டாகுது. இன்னும் ஒரு சீக்கு வந்து படுத்ததில்ல.”
“எப்ப இருந்து பாடுறீங்கய்யா”
“அது சின்ன வயசிலிருந்து …… ஒண்ணு தெரியுமா, என் சம்சாரத்துக்கு நான் பாடுறது ரொம்பப் புடிக்கும். அதுவும் எம்ஜியார் பாட்டுன்னா அம்புட்டுப் பிரியம். அவளுக்குன்னே நெறைய பாடுவேன். அவ போய்ச் சேந்து இருவது வருசமாச்சு”
முகம் கொஞ்சம் வாடியது. உடனே சமாளித்துக்கொண்டு
“நீ ஒரு டீ சாப்புடு , ஐயா வாங்கித்தரேன்” என்று கைபிடிக்க, நான் அழுத்தி நிறுத்தியபடி
“பரவாயில்லங்கையா , நான் இப்பத்தான் சாப்பிட்டேன்.
“சரி, நான் வறேங்கய்யா “ …………………. அவர் கையில் வம்படியாக கொஞ்சம் பணத்தைத் திணித்தேன். அவர் மறுக்க, “இருக்கட்டும்” என்று நான் அழுத்த, அந்தக் கை வாங்கிக்கொண்டு வணங்கியது.. வணங்கிச் சிரித்தபடி கிளம்பினேன்.
என்னையறியாமல் ஏதோ ஒரு திருப்தி.ஒரு பெரிய வித்வானின் கச்சேரி கேட்டு வந்திருந்தால் கூட இவ்வளவு சந்தோஷம் கிடைத்திருக்க வாய்ப்பில்லை. காரணம், அந்த வித்வம் ஏற்கனவே தெரிந்துதான். கொட்டும் அருவியில் நனைவதற்கும், திடீரென்று சிறிது நேரம் பெய்து ஓயும் கோடை மழையில் நனைவதற்கும் இருக்கும் வேறுபாடுதான்.
வந்தவேலை சீக்கிரம் முடிந்திருந்தால் இச்சம்பவத்திற்கு முன்னமே கடந்திருப்பேன். அடுத்த தெருவழியாகப் போயிருந்தாலும் நான் செல்லவேண்டிய இலக்கை அடைந்திருக்கலாம். எதற்கு இந்ததெரு வழியே வந்தேன்.???? உண்மையில் நான் கொடுத்துவைத்தவன்தான்.
நாங்களே நேரில் கண்ட மாதிரி இருக்கிறது…. மொத்த காட்சியும் கண் முன் விரிந்தது.. எளிமையில் திறமை……..அருமை
நன்றி ரமா ஸ்ரீனிவாசன் அவர்களே…
ஆகா… ரசனையான பாடல்கள்…
நன்றி தனபாலன் சார் …
அருமையான விவரிப்பு…நல்ல எழுத்து நடை …லவ்லி…
நன்றி கமலி அவர்களே …
அருமையான பதிவு அரவிந்த். ரயிலில் பயணிக்கும் போது யாரோ ஒருவர் பாடிக் கேட்ட “கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்” என்னும் டி.எம்.எஸ் பாடிய பாடல் என் நினைவுக்கு வந்தது. 🙂 நம்மிடையே குரல்வளமிக்க இசைக்கலைஞர்கள் உள்ளனர். ஒரே குறை – அவர்களுக்கான வாய்ப்புகள் அவர்களை சேராமல் போனதுதான். 🙂
நன்றி மதுரைக்காரன் அவர்களே …
ஒரு நல்ல கலைஞனை உலகுக்குக் காட்டியிருக்கிறீர்கள். இவரைப் போல எத்தனை எத்தனை பேர்களோ?
மிக்க நன்றி ரஞ்சனி அவர்களே …
அருமை… மனம் நிறைந்த வாழ்க்கை அவர் வாழ்கிறார்…எங்க்கொரு பாட்டு நினைவுக்கு வருகிறது ..:குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா…”.. , கிடைக்க பெற்ற வாழ்க்கையை, கடமையுடனும், அதே நேரத்தில் சுவாரஸ்யத்துடனும் வாழ ஒரு சிலராலே இயலும்… நன்றி பதிவுக்கு
நன்றி ராஜ ராஜேஸ்வரி அவர்களே . . . !
உங்களை அறிமுகப் படுத்திய எங்கள் இனிய நண்பருக்கு நன்றி. எனது பக்கத்தில் பகிர்கிறேன். உங்கள் பதிவின் தோற்றம் (get up) அருமையாக இருக்கிறது. நன்றி & வாழ்த்துகள் திரு arrawinthyuwaraj
நன்றி rathnavel natarajan அவர்களே ..