சிறுவயதில் மாமன்காரன் நம்மைத் தூக்கி, கைகளை இறுகப் பிடித்தபடி கரகரவென சுற்றுவான்.
சுற்றச் சுற்ற கொஞ்சம் கொஞ்சமாகக் கண் கிறங்க ஆரம்பித்து சகலமும் மறைய ஆரம்பிக்கும் … நன்றாகக் கரக்கி சடாரென இறக்கி நிற்க வைத்த உடனே ஒரு தள்ளாட்டம் வருமே.. சில நொடிகள் எந்தப் பிரக்ஞையும் இராது…. கால்கள் உழன்று, பார்வை சுழன்று, நிதானத்திற்குள் பிரவேசிக்கும்முன் செலப்போ விழுந்து கூட எழுவோமே…. ம்ம்ம் அதேதான்…
இது வாழ்க்கையிலும் நடக்கும்….
எல்லாம் சரியாகப் போகிறது என்று நினைத்துக்கொண்டிருக்கும்போது ஒரு சுழல் வரும்…
இழுத்துத் தூக்கி எறியப்பட்டு விழித்துப் பார்த்தால், முனி அடித்து மூணுகாணிதள்ளி, பரம்படிச்ச பாலுக்கோனார் வயலில் சகதி அப்பி விடியக் கருக்கலில் முளிச்ச பொன்னுத்தாயி பெரியாத்தா போல, திக்குத் தெரியாமல் பெக்கேபெக்கே முழியுடன் நின்றுகொண்டிருப்போம்…
இதற்கு ‘நேரங்காலமோ காலக்கெரகமோ தலைவிதியோ இயற்கையின் நியதியோ இப்படி என்ன வேண்டுமானாலும் வசதிக்கு சொல்லிக்கொள்ளலாம்…
அறிவு.புத்தி,ஞானம்,அனுபவம் இது எதுவும் அப்போது இல்லாத மாதிரிதான்…
மீண்டு எழுவது, துணிந்து நிமிர்வது என்று, மூன்றாவது அடி வாங்கியபின் எம்ஜிஆர் செய்யும் வேலைகளெல்லாம் ‘அப்பெறகு’ சாமி…ஜீவிச்சிருக்க முதலில் மூச்சு வாங்கவேணும்..
அதற்கு நான் “மலைகளைத்” தேடித்தான் ஓடுவேன்…. அப்படி அதில் என்ன இருக்கிறதென்று இன்னமும் எனக்குப் பிடிபடவில்லை… மனது அதை நோக்கியே இழுக்கும்…..
அப்படி ஒரு நள்ளிரவு தனிமைப் பிரயாணம் இரண்டு வாரங்களுக்கு முன் மேற்குத் தொடர்ச்சி மலைகளில்…..
மேகங்கள் போர்த்திய இரவு அது.. “ராகதேவன்” , நௌஷாத் அலி தொடங்கி, உஸ்தாத் ராஷித் கான் என பெரும் தலைகள் என் துணைக்கு…
நள்ளிரவு ஆரம்பித்து பின்னிரவு முழுக்க…. வண்டியின் வெளிச்சம் மட்டும்தான்…. எதிரே சில வண்டிகள் அவ்வபோது கடந்து மறைந்தன….
வழியில் சிறிய சமதளமொன்று தென்பட . சாலையிலிருந்து கொஞ்சம் விலகி வண்டியை ஓரம் கட்டி நிறுத்திவிட்டு நடந்து அதன் எல்லைப் பகுதிக்கு வந்து நின்றபோது கீழே பெரும் பள்ளம்.. தூரத்தில் ஏதோ ஊர் ஒன்றின் மஞ்சள் வெள்ளை மினுப்புகள்… கண்ணுக்கெட்டியமட்டும் கறுத்துத் தெரியும் பச்சை. கொட்டும் பனி… வலதுபுறம் மலையின் இடுக்கில் ஒரு பெருங்கல்லை செருகிவைத்தாற்போல் துருத்தி நிற்கும் ஒரு பாறை… . அதை அடைவதற்கு இந்த சமதரையின் வலது ஓரத்தில் மிகக் குறுகலான வழி…
சில நிமிடங்கள் கழித்து .உள்ளங்கைகளைச் சேர்த்து வேகமாகத் தேய்த்து கன்னங்களில் அழுத்திக்கொண்டு, வாயில் குளிர்ப் புகை பறக்க அந்த ஒற்றைப் பாறையில் உட்கார்ந்திருக்கிறேன்.
உஸ்தாத் நுஸ்ரத் ஃபதேஅலிகான் சாஹாப் கஸல் ஒன்றை ஆரம்பிக்கிறார்.. ரேயின் ‘ஜல்சகார்’ இல் வரும் ஜமீன்தாராகிறேன்…
Dheerki chatt(u) ghayi
chaandke noor se (2)
jab tu yaad aagaya
chaandni raath mein
chaand kya kehegayaa
chaandni raath mein
இந்த வரிகளை உஸ்தாத் கடக்கும் தருணம்…
கீழ்த் தண்டுவடத்தில் உருவான மின்னல் ஒன்று விர்ரெனப் பரவி பின்தலையை அடைந்து, தலை நிரப்பிய சிலிர்ப்பு உடல் முழுக்கப் பரவியது. பாறையை விட்டு பறக்க ஆரம்பித்த மனம் மலை முழுக்க சுற்ற ஆரம்பிக்க… ஆஹா ஏகாந்தம்… ..மீண்டெழுதலின் குறியீடாக விவிலியதில் வருமே “பரிசுத்த ஞானஸ்நானம்” என்றொரு சொல்… அதே ….முழுக்கக் கழுவப்பட்டெழுந்த ஓர் விவரிக்க இயலாத ‘இறகு நிலை” …
யாரப்பா அந்த தபேலா வாசிக்கும் உஸ்தாத்?!!! பகிரக் காணியில்லாத காரணத்தால், உன் விரல்களுக்கு என் முத்தங்கள் ……, இப்படியே கரைந்து கரைந்து தூங்கிப் போனேன்.
விடிவதற்கு யோசித்துக் கொண்டிருக்கும் பின்னிரவிற்கும் அதிகாலைக்கும் இடையே கண் திறந்தேன்., இந்த உலகம் சுத்திகரிக்கப்பட்டிருந்தது…. பிரிய மனமின்றி அந்தப் பாறையை விட்டு என் வண்டியை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்…
என்னை இன்னுமொரு முறை உயிர்ப்பித்த “துரோகமே” …….. நன்றி ….!
வாழ்க வளமுடன்.. என்ன எழுதறதுன்னு தெரியலை அர்விந்த்……
வாழ்த்துக்களுக்கு நன்றி ரமா … வாழ்க வளமுடன்
புகைப்படம் உங்கள் உணர்வுகளை உரக்கச் சொல்லுகிறது.
சக்தி வாய்ந்த எழுத்துக்கள். பாராட்டுக்கள்!
மிக்க நன்றி ரஞ்சனி நாராயணன் madam
வித்தியாசமான வீரியமான வரிகள்…
தொடர்க… வாழ்த்துக்கள்…
நன்றி திண்டுக்கல் தனபாலன்
அட்டகாசமான விவரிப்பு. கோர்த்தெடுத்த சொற்களின் மாலை, அம்சமாய் இருக்கிறது. ம்ம்…
இனி நீளுகின்ற நாட்கள், நம்பிக்கை மனிதர்களும், நல்ல நிகழுவுகளுமாக மகிழ்ச்சி தூவி கரம் பற்றி அழைத்து செல்லட்டும்.
மிக்க நன்றி தீபா நாகராணி …..
mikavum arumai arrawinth thodarattum
மிக்க நன்றி uthai அவர்களே