ஆண்டு சரியாக நினைவில் இல்லை , ஆனால் பதிமூன்று வருடங்களுக்குக் குறையாமல் இருக்கும் என்பது என் அனுமானம். மவுண்ட் ரோடு கூவக் கரையோரம் ஸ்பென்சர்க்குப் பக்கத்தில் இருக்கும் காயிதே மில்லத் மகளிர் கல்லூரியில் புத்தககக் கண்காட்சி. பழைய புத்தகக் கடைகளிலும், சில குறிப்பிட்ட புத்தகக் கடைகளிலும் புத்தகம் வாங்கிப் பழகிய என் போன்றோருக்கு அது புது அனுபவம். அதற்கு முன் ஒரே முறை கல்கத்தா புத்தகக் கண்காட்சி போய் வேடிக்கை பார்த்த அனுபவம் மட்டுமே என் முந்தைய பொதி ..
ஏகே செட்டியார் எழுதிய சினிமா பற்றிய மெலிசான புத்தகம் ஒன்றும், முன்னமே பரிச்சயம் இருந்தாலும் 5 ரூபாய் 10 ரூபாயென என்சிபிஎச் ல் இடதுசாரி மற்றும் ருஷ்ய இலக்கிய புத்தகங்களும் வாங்கி வந்த நினைவு. வாங்கிய புத்தகங்களை கடை பரப்பி வேடிக்கை பார்க்கும் குஷி இருக்கிறதே. காகித மணம் நிறைந்தஅறையில் கழித்த அந்த இரவு ஒரு சுகானுபவம்.
சொல்ல வந்த விஷயம் இதுதான் ….
இன்று புத்தகக் கண்காட்சி தொடங்கிவிட்டது என்று யோசிக்கும்போதே உள்ளுக்குள் ஒரு சந்தோஷ குறுகுறுப்பு ஊறுவதை பகிர நினைத்தேன் என்பது மட்டுமே …
வாசிப்பது, படிப்பது, தெரிந்துகொள்வது, கற்றுக்கொள்வது , அனுபவங்கள் பெறுவது, இப்படி என்னென்ன பெயரிலோ ஒரு புத்தகத்தை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக அணுகுவர். அது அவரவர் மன வடிவின் வெளிப்பாடு. என்மட்டில் புத்தகங்கள் என்றாலே ஒருவகைக் கொண்டாட்டமும் குதூகலமும் தான். புத்தகக் கண்காட்சிகள் எப்பொழுதுமே திருவிழாக்கள் .
வழக்கம்போல இந்த முறையும் புதிய புதிய புத்தகங்கள் வருவது மிக மிக சந்தோஷமாக இருக்கிறது … இந்த ஆண்டு வெளிவரும் புத்தகங்களில் எனக்குப் பரிச்சையமான பலரின் புத்தகங்களும் வருகின்றன..
அன்பு நண்பன் “கவிதைக்காரன்” இளங்கோவின் “பிரைலியில் உறையும் நகரம்” கவிதைத் தொகுப்பு .
மதிப்பிற்குரிய திருமதி .பத்மஜா நாராயணன் அவர்களின் அருமையான மொழிபெயர்ப்பில் “நான் மலாலா ”
என் அன்பு போகன் ஷங்கரின் கவிதைத் தொகுப்பான “தடித்த கண்ணாடி போட்ட பூனை ”
திரு.பாரதி மணி ஐயாவின் முழு கட்டுரைகள் அடங்கிய தொகுப்பான “புள்ளிகள் கோடுகள் கோலங்கள் ”
அன்புத் தம்பி தம்பி பூ.கோ.சரவணனின் “டாப் 100 அறிவியல் மேதைகள்” மற்றும் “டாப் 200 வரலாற்று மனிதர்கள்”
பங்காளி ஆத்மார்த்தியின் “ஆடாத நடனம்” சிறுகதைத் தொகுப்பு
தம்பி கடங்கநேரியானின் கவிதைத் தொகுப்பு “யாவும் சமீபித்திருக்கிறது”
பைத்திய ருசி கணேசகுமாரனின் அடுத்த தொகுப்பு “மெனிஞ்சியொமா ”
அன்புத் தம்பி க. உதயகுமாரின் “கூதிர்காலத்தின் துயரப்பாடல்”
திருமதி. உமா ஷக்தி அவர்களின் கட்டுரைத் தொகுப்பான “தற்கால உலகத் திரைப்படங்கள்”
நண்பர் ஸ்ரீதர் (நந்தன் ஸ்ரீதரன்) அவர்களின் சிறுகதைத் தொகுப்பு “தாழி ”
தோழி சுஜாதா செல்வராஜின் கவிதைத் தொகுப்பு “காலங்களைக் கடந்து வருபவன் ”
அன்பு அக்கா சந்திராவின் கவிதைத் தொகுப்பு “வழிதவறியது ஆட்டுக்குட்டியல்ல கடவுள்”
அன்பன் அதிஷாவின் “ஃபேஸ்புக் பொண்ணு”
கவிதா சொர்ணவல்லியின் சிறுகதைத் தொகுப்பு “பொசல்”
தம்பி ரமேஷ் ரக்சனின் சிறுகதைத் தொகுப்பான “16”
இப்படி மனதிற்கு இனிய தோழமைகளின் எழுத்துக்களைச் சுமந்துகொண்டு வரும் இந்த புத்தகக் கண்காட்சி சொல்லொண்ணா மகிழ்ச்சியைத் தருகிறது . இதில் ஒருசில புத்தகங்களை நான் வாசித்துவிட்டேன் என்பது கொசுறு …. (இப்போது நினைவில் இருக்கும் புத்தகங்களை மேலே குறிப்பிட்டுள்ளேன் . ஏதேனும் விடுபட்டிருந்தால் சம்பந்தப்பட்ட நண்பர்கள் பொறுத்தருள்க)
பெரும் எழுத்தாளுமைகளான எஸ் ரா , சாரு போன்றோரின் புத்தகங்கள் வருவது இன்னும் கூடுதல் மகிழ்ச்சி. எஸ் ரா வின் சிறுகதைகள் எல்லாம் சேர்த்து மூன்று தொகுதிகள் மற்றும் “நான்காவது சினிமா ” இரண்டையும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். எழுத்தாளரும் வசன கர்த்தாவுமான பாஸ்கர் சக்தியின் சிறுகதைகள் மொத்தமும் ஒரு தொகுப்பாக வெளிவருகிறது. அருமை அண்ணன் ராஜ் சிவா அவர்களின் இரண்டு அறிவியல் தொகுப்புகளும், தம்பி லஷ்மி சரவணகுமாரின் படைப்பும் புதிய வரவுகளில் காத்திருக்கின்றன. வா.மணிகண்டனின் கட்டுரைத் தொகுப்பும் எனக்குப் பிடித்த கௌதம சித்தார்த்தன் அண்ணனின் புத்தகமும் இம்முறை வருகிறது. … நிறைய மொழி பெயர்ப்புகளும் வெளிவருகின்றன. யுவன் சந்திரசேகர் , பெருமாள் முருகன்,பூமணி, சுகுமாரன் ஜெயமோகன் போன்றோரின் புதிய படைப்புகள் வருகிறதா தெரியவில்லை .. கண்காட்சியில் தெரிந்துகொள்ளலாம்.சிலபல புத்தகங்களின் பெயரைச் சொல்லி தத்துவார்த்தம், மேஜிக்கல் ரியலிசம் என்று பயமுறுத்துவது இந்த இடத்திற்கு “ஓவர் சீன்” எனக் கருதுவதால் இத்தோட அபீட்டு…
A reader lives a thousand lives before he dies என்பார்கள் .. உண்மைதான், நாம் வாழும் ஒற்றை வாழ்க்கையில் ஓராயிரம் வாழ்க்கைகளைக் கடந்து செல்லக்கூடியதான அனுபவத்தை புத்தகங்களால் மட்டுமே தரமுடியும்.
“வாசித்தல்” என்பது இந்த வாழ்க்கையையும் சக மனிதர்களையும் “நேசித்தல் ” என்னும் செயலுக்கான ஆதாரப் புள்ளி என்பேன் . அறிவின் சேகரம் ஒரு மெல்லிய நீரோடையில் மனதார நீந்திக் களித்து எழும் ஆகசுகம். புத்தகங்கள் வாழ்க்கையை மாற்றுகிறதோ இல்லையோ , வாழ்க்கையை அழகாக்குகிறது என்பது மெய்யான மெய். யாரோ ஒருவரின் எழுத்துக்களையும் வாழ்க்கையையும் படித்ததனால் “நாம் அறிவாளிகள்” என்பதை வாசித்தலின் முக்கியத்துவமாக நான் கருதவில்லை. மாறாக அந்த எழுத்துக்கள், எழுதியவர்களையும் நம்முள் அடக்கிப் பயணிக்கவைத்து , நம்மை “அனுபவசாலிகளாக” மாற்றும் அற்புதத்தைச் செய்கிறது என்பேன்.கண்டிப்பாக ஒவ்வொருவருக்குமே ஒவ்வொரு அனுபவம்.அந்த அனுபவம் நமக்கு ஆத்ம நிறைவினையும் அதை மற்றவரோடு பகிர்ந்துகொள்ளும்போது , கேட்பவரையும் நம் அனுபவத்துடன் சேர்த்து அணைத்துக்கொள்ளும் ஒரு இனிய ரசவாத சாகசத்தை புத்தகங்களைத் தவிர வேறேதும் நமக்குத் செய்து விடப்போவதில்லை .
நாம்பெற்ற பெறப்போகும் இன்பத்தை நம் வருங்கால சந்ததியினருக்கும் கடத்த முற்படுவது நம் கடமையல்லவா? … அதிலும் “பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளைத் தமிழிலும் படிக்கப் பயிற்றுவிக்கலாம் ” தவறில்லை என்றே கருதுகிறேன் .. இப்படியான தொனியில் சொல்லக் காரணம் தமிழில் வாசிப்பதை அவ்வளவு கௌரவமாகக் கருதாத மனநிலை தற்போது தமிழை நன்கு வாசிக்கும் வாசகப் பெற்றோருக்கும் , ஏன் சில எழுத்தாளர்களுக்குமே உண்டு . தாய் மொழியைக் கெஞ்சிதான் வாசிக்க வைக்கவேண்டுமென்றால் கெஞ்சிக் கேட்பதில் தவறில்லை… வாசித்தலைக் கற்றுக்கொடுக்கும் ஒவ்வொரு பெற்றோரும் தன் பிள்ளைகளுக்கு “அறிவார்ந்த தோழமை ” என்னும் பெரும் சொத்து ஒன்றினை எழுதித் தந்துவிடுகின்றனர். அது உங்களின் காலத்திற்குப் பிறகும் அவர்களின் கூடவே எப்போதும் இருக்கும். அவர்களையும் இத்திருவிழாவில் பங்குபெறச் செய்வது நம் கடமை , பொறுப்பும் கூட …
வரும்பொழுது எப்படி வரவேண்டும் , என்னென்னெ தயாரிப்புகளோடு வரவேண்டும் என்று தனியாகப் பாடமேடுப்பது சரிவராது … கொஞ்சம் பணம் எடுத்துக்கொண்டு முதலில் ஒருமுறை வந்து பாருங்கள் .. நீங்களே புரிந்துகொள்வீர்கள் …
ஒரு விசேஷ வீட்டு வரவேற்பிறகு அழைக்கும் முறையில் சொல்வதென்றால்
” மறக்காம குடும்பத்தோட கட்டாயம் வந்திருங்க “
வருகிறேன்… சந்திப்போம்…
நிச்சயமாக திண்டுக்கல் தனபாலன் அவர்களே
உடனே வந்துரணும்னு தோணுது புத்தகங்கள் மீதான ஈர்ப்பை அதிகப்படுத்தி விட்டீர்கள்
நன்றி Hepsi madam