படத்த நல்லா பாத்துக்குங்க ……..
சாங்கியத்த சொல்றேன்….. மண்டகப்படி மொறம மீறாம செய்யணும்… அப்பத்தான் சரியா வரும்… ரைட்டா ?!
1. நொட்டாங்கைப் பக்க மேம்மூலையில ஒரு தாம்பாளத்துல அடுக்கிவச்சிருக்கு பாருங்க, அதான் பால்பன்னு… பொஃப்புன்னு பொங்கியிருக்கும், சீனிப்பாகுல முக்கி ஊறவச்சு அடுக்கிருவாக..
“அதுல ஒண்ணு குடுங்ண்ணே” ன்னு கேக்கணும். வாழெலைல வச்சு இன்னுங்கொஞ்சம் சீனிப்பாகு ஊத்தித்தரும்போதே எச்சில் ஊறும்.. அதப்பதம்மா விண்டு பாகுல முக்கிப்பொரட்டி வாய்க்குள்ளபோட்டு மெல்லாம, நாக்கக்கொண்டியே அரைக்கணும்… அப்பிடியே கரைஞ்சு தேனா தொண்டக்குழியில இறங்கும்.. ஒரு விண்டு, அடுத்த விண்டு,… வாய் தொடங்கி உடம்பே இனிச்சுக்கெடக்கும்…. தெகட்டிராத மெதமான இனிப்பு
2. பால்பன்ன சாப்புட்டு கடைசி ஆள்காட்டிவெரல்ல அந்த எலைய வழிச்சு நக்குறது நம்ம மதுரை மரபு.. முடிச்சதும் கையக் கழுவிப்புட்டு, அரட்டம்ப்ளர் தண்ணிய வாய்க்குள்ளா ஊத்தி கொப்புளிச்சு முழுங்கிரணும்…….
ஆச்சா!!???
3. அடுத்து சோத்தாங்கைப் பக்கமாத் தெரியுதுபாத்தியளா? அதான் வடை.. அது வெறும் வடையில்ல சாமி. விசாலம் காபி கடையோட வடை. கெட்டிச்சட்னி வச்சுத் தருவாக. பால்பன்னு சாப்பிட்டு கொப்புளிச்சு முழுங்குனதுமே இது ஒண்ணு வாங்கணும். வடை மேலாக்குல மொருமொருன்னு “இந்தா ராசா”ன்னு கூப்புடும். அத நலுங்காம பிச்சு கெட்டிச் சட்னில நோகாமப் பொரட்டி வாய்லபோட்டு பட்டும் படாம மெல்லணும்.. தேங்கா-பச்ச மெளகா – வட மூணும் சரிவிகிதமா கலந்து ஒரு ருசி ருசிக்கும் பாருங்க… அப்பிடியே தூக்கும் … இப்பிடியே நாலு விண்டுல கடைசி துண்டு வந்துரும்
4. . வடையோட கடைசித் துண்டத்த வாய்க்குள்ள போடுறதுக்கு முன்னாடி, இந்தா தெய்வகடாச்சமா நிக்கிறாரு பாருங்க நம்மண்ணே, அவரப் பாத்து தலைய ஆட்டிரணும்..
5. கடைசி விண்ட சாப்புடுறதுக்கு தனி மொற இருக்கு, எப்டின்னு சொல்றேன்….
அதக்கொண்டி எலையில இருக்குற மொத்தச் சட்னியையுமெ தொடச்செடுத்து அப்பிடியே வாய்க்குள்ள போட்ரணும். வடத் துண்டத்தவிட சட்னி சாஸ்த்தியா இருக்கும். ஒரப்பும் கொஞ்சம் ஏறும். அப்பிடி ஏறிக்கிருக்கப்போ, கம கம வாசத்தோட காபி கைக்கு வரும்.. இந்தா படத்துல தெரியுது பாருங்க, அதான் … அந்தக் காபிதான்.
6. கடைசி வாய் மென்னு முழுங்குனதுமே, காபிய லேசா உறிஞ்சிரணும்…. (தண்ணியக் குடிக்கிறது,கைய்யகிய்யக் கழுவப்போறது கண்டிசனா கூடாதுப்பு) . அந்த வட சட்னி காரம் பரவிக்கெடந்த நாக்குல இந்த சூடான காபி விழுந்ததும் ஒரு சுகமான ருசி ஆரம்பிக்கும் பாருங்க …. கெரக்கமே வந்துரும், இந்த போதை எங்கேயுமே நீங்க அனுபவிக்க முடியாது..
7 . அந்தக் கெரக்கத்துலயே ஒண்ணு ரெண்டு மூணு மடக்கு குடிச்சதும், காபி பாதி தீந்துரும். அப்போ டம்ளர ஓரமா வெச்சுட்டு போய், வடை எலைய தொட்டில போட்டுட்டு கைகழுவிட்டு வந்து…….
மீதி காபிய டக்குன்னு குடிச்சிரக்கூடாது…
(கொஞ்சம் பொறுங்க அவசரப்படாதிய .. சரியா?!!!!)
8. அந்த அரட்டம்ளர் காபி கிளாஸ மொள்ளமா கலக்குற மாதிரி, இந்தப்பக்கமா அந்தப்பக்கமா சிந்தீராம சுத்தணும். இப்போ லேசா ஒரு மடக்கு குடிச்சுப் பாத்தா, அடியில இருக்குற மிச்ச சீனி கரஞ்சு, தூக்கலான இனிப்புல காபி நாக்கக் கழுவி தொண்டைக்குள்ள எறங்கும் பாருங்க…. அடேயப்பா … அப்பிடியிருக்கும்….ம்ம்ம்ம்ம்ம்
அதே போதைல மிச்ச காபியையும் குடிச்சுப்புட்டு, துட்டக் குடுத்துட்டு அப்பிடியே சுத்தும் முத்தும் பாருங்க ….. வானத்தப்பாருங்க … கைய விரிச்சு ஒடம்ப ஒரு முறுக்குவிடுங்க…. கண்ணு லேசா கலங்கும். இந்த உலகமும் அந்த வானமும் அம்பூட்டு அழகாவும் புதுசாவும் தெரியும்…….!
ஆகா…! ஆகா…!
நன்றி திண்டுக்கல் தனபாலன் சார்
அனைத்து ஆக்கங்களையும் படித்தேன். மிகச் சிறப்பாக இருக்கின்றன. இடைவெளி விடாமல் தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி Ramanan அவர்களே
எங்கூரு மொறம …= அதே போதைல மிச்ச காபியையும் குடிச்சுப்புட்டு, துட்டக் குடுத்துட்டு அப்பிடியே சுத்தும் முத்தும் பாருங்க ….. வானத்தப்பாருங்க … கைய விரிச்சு ஒடம்ப ஒரு முறுக்குவிடுங்க…. கண்ணு லேசா கலங்கும். இந்த உலகமும் அந்த வானமும் அம்பூட்டு அழகாவும் புதுசாவும் தெரியும்…….!= ஆஹா. என்ன ரசனை! அருமையான எழுத்து நடை, உங்கள் முகம் மறக்கவே மறக்காது. – எனது பக்கத்தில் பகிர்கிறேன். வாழ்த்துகள் – நண்பர்கள் தவறாது படிக்க வேண்டுகிறேன் – A Treat.
நன்றியும் அன்பும் ரத்தினவேல் சார்:)
Reblogged this on rathnavelnatarajan and commented:
எங்கூரு மொறம …= அதே போதைல மிச்ச காபியையும் குடிச்சுப்புட்டு, துட்டக் குடுத்துட்டு அப்பிடியே சுத்தும் முத்தும் பாருங்க ….. வானத்தப்பாருங்க … கைய விரிச்சு ஒடம்ப ஒரு முறுக்குவிடுங்க…. கண்ணு லேசா கலங்கும். இந்த உலகமும் அந்த வானமும் அம்பூட்டு அழகாவும் புதுசாவும் தெரியும்…….!= ஆஹா. என்ன ரசனை! அருமையான எழுத்து நடை, உங்கள் முகம் மறக்கவே மறக்காது. – எனது பக்கத்தில் பகிர்கிறேன். வாழ்த்துகள் – நண்பர்கள் தவறாது படிக்க வேண்டுகிறேன் – A Treat.