முகநூல் பதிவு :- ஆகஸ்ட் 1 / 2016
டி எம் கிருஷ்ணாவுக்கு விருதா?!! இது விருதான்னு தரலோக்கலா எறங்கி (இதுல சஞ்சய் சுப்ரமண்யம் மென்னியவேற நெரிச்சு) ஜெயமோகன் அண்ணாச்சி கம்பு சுத்தினது ஒரு பக்கம்.. ஆமா – இல்லன்னு போட்டி போட்டு ரெண்டு குருப்பா பிரிஞ்சு இங்கன ஒரே ராவடி… எனக்கென்னபோச்சு… நான் எம்பாட்ல அனந்தபுரி எக்ஸ்ப்ரஸ்ல நீட்டி நிமிந்து “அங்கே இடி முழங்குது” தேக்கம்பட்டி சுந்தர்ராஜன் கேட்டுட்ருந்தேன்.
அப்பொதான் ஜெயமோகன் அண்ணாச்சி எழுதின “நாக்கு” சிறுகதை ஞாபகத்துக்கு வந்துச்சு …. சுருக்கமா சொல்லமுடியுமான்னு பாக்கறேன் . வேற எதுனா புரிஞ்சுதுன்னா அதுக்கு நான் பொறுப்பில்ல ஆமா…
சரி இப்பொ கதை ……………..
கெய்ரோவின் புறநகர்ப் பகுதியில் நாசரின் வீடு. அமெரிக்காவிலிருந்து வந்திருந்த நண்பன் கிருஷ்ணனுடன் (நோட் திஸ் நேம் யுவரானர்!) இரவு உணவை ஆரம்பிக்கிறான். உணவுக்கு முன்னதாக நாசர் ஊற்றிக் கொடுத்த எகிப்தின் பாரம்பர்ய பானமான “சாக்ஷ்” ஐ ருசித்தபடியெ “அப்துல் லத்திப் அல் பக்தாதி” தெரியுமா!? என்று கிருஷ்ணன் கேட்க, “தெரியாது” என்கிறான் நாசர்.
பனிரெண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த தொழில்முறை மருத்துவர் – வேதியியல் அறிஞர் “அப்துல் லத்திப் அல் பக்தாதி”… 1197 ல் கெய்ரோ வருகிறார். 1200 – 1203 வரை மூன்று வருடங்கள் நைல் நதி வரண்டு எகிப்தில் கடும் பஞ்சம் நிலவுகிறது. அரசாங்கக் கணக்குப்படி இறந்தவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட ஒன்றைரை லட்சம். “அல் பக்தாதி” எழுதி வைத்த குறிப்பொன்றில் இப்படி சொல்கிறார் .
///” மக்கள் உணவுக்காக வெறி கொண்டு அலைந்தார்கள். கண்ணில் பட்ட பச்சையெல்லாம் தின்றார்கள். கொலையும் கொள்ளையும் செய்தார்கள். எல்லாம் முடிந்து ஏதுமில்லாமற்போக கடைசியில் நர மாமிசம் சாப்பிட ஆரம்பித்தார்கள்”///
” என்ன ..!!!!!!?? என்று விழித்த நாசரை நோக்கி ஆம் என்பதைப்போல தலையசைக்கிறான் கிருஷ்ணன்..
//”முதலில் இறந்தவர்களை சிலர் ரகசியமாக சுட்டுத்தின்ன ஆரம்பித்தார்கள் . நாளடவில் ரகசியம் உடைந்து , தயக்கம் விலகி பகிரங்கமாக சாப்பிட ஆரம்பித்தார்கள். அடுத்து குழுவாகக்கூடி வேட்டையாட ஆரம்பித்தார்கள். குழந்தைகளையும் முதியவர்களையும் ருசிகண்டு பிரித்து சுவையாக சமைத்து உண்ணத் துவங்கினார்கள். உண்டபின் எஞ்சியதை வியாபாரம் செய்தனர். அது ஒரு வணிகமாக மாறத் துவங்கியது. ‘மிஸர்’ என்ற ஊரில் ‘பொரித்த குழந்தைகளை’ விற்பதற்காக கூடைகளில் வைத்திருப்பதைக் கண்டேன்”/// என்று அப்துல் லத்திப் அல் பக்தாதி எழுதுகிறார் …. நாசரின் முகம் அருவருப்பில் சுருங்க, “இது உண்மை” என்கிறான் கிருஷ்ணன்.
///”பஞ்சம் முடிந்த பின்னும் ருசி கண்டவர்கள் அடங்கவில்லை, தொடர்ந்து கொலைகள் செய்தபடி இருந்தனர், அரசாங்கம் கடும் சட்டங்களை இயற்றி அடக்கியது. அதில் பலர் புறநகர் பகுதிகளில் சென்று குடியேறி வழிப்போக்கர்களைக் கொன்றுதின்ற சம்பவங்களும் உண்டு” ///
“அல் பக்தாதி கொஞ்சம் ஓவரா எழுதியிருக்காரோ” என்று நாசர் இழுக்க “அவர் ஒரு மருத்துவர் – ஆய்வாளரும் கூட, சரியாகத்தான் சொல்லியிருப்பார்……ஏன் நாசர், எகிப்தில் இன்னும் ஏதேனும் இனக்குழுக்களில் மனித மாமிசம் சாப்பிடும் வழக்கம் உண்டா? ”
எனக்குத் தெரிந்து இல்லை கிருஷ்ணன்”
“மனித நாக்கு வித்தியாசமானது நாசர், எப்போதும் தன் பூர்வீக ருசியைத் தேடிக்கொண்டே இருக்கும்” என்கிறான் கிருஷ்ணன்.
இருபது நாட்களுக்கும் மேலாக கெய்ரோவில் தங்கி, நாசரும் கிருஷ்ணனும் பல இடங்கள் சுற்றி வருகினறனர். பல இனக்குழுக்களை சந்திக்கின்றனர்.ஆனால் யாரும் எந்த சூழலிலும் மனித மாமிசத்தை உண்ணுவதில்லை என்னும் தகவலே எஞ்சுகிறது.
கிருஷ்ணன் அமெரிக்கா திரும்பவேண்டிய நாளும் வருகிறது. அதற்குள் நாசர் தினமும் கொடுத்த “சாக்ஷ்” பானத்திற்கு அடிமையாகி விடுகிறான் கிருஷ்ணன். தனக்கு ஏன் இது பிடித்தது என்பதை நாசரிடம் இப்படி சொல்கிறான்
” நானும் என் முன்னோர்களும் சுத்தமான சைவ பட்சிணிகள், முட்டைகூட தொடமாட்டோம். வருடா வருடம் எங்களின் குல தெய்வமான காளிக்கு திருவிழா எடுப்போம், அப்பொது எங்கள் இனத்துப் பெரியவர்கள் ஒரு பானம் தயாரித்து அருந்துவார்கள், நானும் என் பத்து-பனிரெண்டாவது வயதில் அதைக் குடித்திருக்கிறேன்… அதுவும் இந்த சாக்ஷும் ஒன்றுபோல இருக்கிறதென்பதை இன்று காலைதான் உணர்ந்தேன்” என்கிறான் கிருஷ்னன். “இது அமெரிக்காவில் கிடைக்குமா ” என்று நாசரிடம் கேட்கிறான். தான் இரண்டு நாட்களுக்கு முன்னரெ 10 கேஸ்கள் கிருஷ்ணனின் முகவரிக்கு அனுப்பிவிட்டதாக நாசர் சொல்கிறான்.
கிருஷ்ணனை கெய்ரோ ஏர்போர்ட்டில் இறக்கிவிட்டு, திரும்பி வந்துகொண்டிருக்கும் வழியில் ஒரு மூதாட்டி சாலையில் நின்றபடி லிப்ட் கேட்பதைப்போல கைகாட்ட, நாசர் காரை நிறுத்துகிறான். எகிப்தின் எல்லையோர கிராமப்பகுதி ஒன்றில் வசிக்கும் அவள், கெய்ரோவின் புறநகர் பகுதியில் இருக்கும் தன் பேத்தியைப் பார்க்க வந்ததாகக் கூற , நாசர் அம்மூதாட்டியை தன் காரில் ஏற்றிக் கொள்கிறான்.. அவளுடைய கைகளைப் பார்க்கிறான், நீண்ட நகங்கள்.. கால்களிலும் நீண்ட நகங்கள்.. பேச்சுக்கொடுத்தபடி வெட்டப்படாத அவளின் நகங்கள் பற்றிக் கேட்கிறான்.
“எங்கள் இனக்குழுவின் வழக்கப்படி நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் நகம் வெட்டுவோம், அதுவும் ஒரு திருநாளன்று எல்லோரும் கூடி வெட்டுவோம், அதை எங்கள் குழுவினர் கொதிகலனில் போட்டு கலக்கி சாறாக்குவார்கள்..”
சொல்லிக்கொண்டிருக்கும்போதே மூதாட்டி இறங்கும் இடம் வர வண்டியை நிறுத்தினான் நாசர். வெளியெ இறங்கிய மூதாட்டி நன்றி கூறுகிறாள், நாசரும் சலாம் வைத்துவிட்டு
“அம்மா, அந்த சாற்றை என்ன செய்வீர்கள்?”
“எங்கள் இனபானத்தின் முக்கிய மூலப்பொருள் அதுதான்”
“ஓ .. அந்த பானத்தின் பெயர்????”
“சாக்ஷ்” ….!!!