முன்னாள் சினிமா தயாரிப்பாளர் ஒருத்தரோட பேசவேண்டிய சூழல்.
அவரும் ஒரு இயக்குநரும் சேர்ந்து சில வெற்றிப்படங்களைக் கொடுத்தார்கள் .
ஒரு காலகட்டத்தில் பிரிந்து தனித்தனியாக படங்கள் பண்ணினாங்க, ஆனா இருவரும் அதிகம் சோபிக்கவில்லை
இந்தத் தயாரிப்பாளர் சில படங்கள் விநியோகம் செய்து ஓரளவு தேறினார் . அந்த இயக்குநர் சில படங்களோடு ஒதுங்கிக் கொண்டார்.
பேசிட்டிருக்கும்போது அந்தத் தயாரிப்பாளர் சொன்ன ஒரு விஷயத்த இங்க பகிரலாம்னு தோணுச்சு
‘நாங்க ரெண்டுபேரும் தனிப்பட்ட முறையில முன்கோபக்காரர்கள், அதே நேரம் மிகத் திறமையானவர்கள் . அவர் கொண்டுவரும் க்ரியேட்டிவ் ப்ராடக்ட் நல்லா வரணும்னு ரெண்டு பேரும் போட்டி போட்டு விட்டுக்கொடுக்காம உழைப்போம். வெளில அடிச்சுக்கற மாதிரி தெரியும் , ஆனா எங்களுக்குள்ள அப்டி ஒரு புரிதல் இருக்கும்.
இப்படி இருந்த நாங்க எப்படி பிரிஞ்சோம் தெரியுமா ?கேட்டா உனக்கு சிரிப்பு வரும்.
ஒரு கல்யாண ரிசப்ஷன் ல முன்னப்பின்ன பழகாத யாரோ ஒரு ஆள் “அந்த டைரக்டர் வேற கம்பெனில அட்வான்ஸ் வாங்கிட்டார்”னு சொன்னதை நம்பினதுதான்.
கேணத்தனமா இருக்குல்ல!??
அடுத்தபடம் செய்வோம்னு சொல்லிட்டு ஏமாத்திட்டானே, முதுகில குத்திட்டானேன்னு அன்னிக்கி எனக்கு தோணுச்சு. வந்த கோபத்தில அவசரமா ஒரு புதுப்பையன வெச்சு பூஜை போட்டு சூட்டிங் போய்ட்டேன். அதுக்கப்பறம் நாங்க சந்திச்சுக்கவே இல்ல.
சில வருஷங்களுக்கு முன்னால எனக்கு பைப்பாஸ் சர்ஜரி நடந்தப்போ என்னோட பழைய மேனேஜரும் அந்த டைரக்டரும் ஆஸ்பத்திரி ல என்னைப் பாக்க வந்தாங்க .
என்னைப் பாத்ததும் அவருக்கு கண்கலங்க எனக்கும் அழுக வந்திட்டு , என் கைய பிடிச்சு எப்டி இருக்கீங்க தலைவரேன்னு கேட்டாப்ல , நான் அப்போவும் ” ஆனாலும் நீ அட்வான்ஸ் வாங்கிருக்கக்கூடாது”ன்னேன்.
“உங்க அட்வான்ஸ்க்காக நான்தான் ஆறுமாசம் காத்திருந்தேன் , இதோ நம்ம மேனேஜரே சாட்சி, எப்டி தலைவரே வாக்கு மாறுவேன்?”
திரும்பி மேனேஜரப் பாக்கறேன், ஆமான்னு தலையாட்டுறான். கிட்டக்க வந்து ” எத்தன தடவ உங்கட்ட சொல்ல வந்தேன், நீங்க என்னன்னு கூட கேக்கல, சரினு விட்டுட்டேன்”
“ஏம்பா நான் தான் அப்டி இருந்தா, நீயாவது வந்திருக்கக்கூடாதா”ன்னு டைரக்டர கேட்டா
“இவன் இல்லாமலே என்னால ஜெயிக்க முடியும்னு நீங்க சொன்னதா கேள்விப்பட்டு கோபத்துல தனியா ஒதுங்கிட்டேன் தலைவரே”ங்கறான் .
இப்படி சொன்ன நாதாரிய அந்த டைரக்ட்டரும் மறந்துட்டிருக்கார்.
எவனோ முகமே தெரியாத ஒருத்தன் சம்பந்தமே இல்லாம , நாம நல்லா பழகின ஒருத்தனப் பத்தி போறபோக்குல கொளுத்திப் போட்டுப் போய்ட்டான்.
மறுபடியும் கையப்புடிச்சு கண்கலங்கி ஒருத்தர ஒருத்தர் பாத்துக்கும்போது 30 வருசம் ஓடிப்போச்சு .
தற்கொலைங்கறது நாம நம்மள கொல்றது மட்டுமில்ல , நல்ல நட்பையும் உறவையும் காரணமே இல்லாமக் கொல்றதும் ஒருவகைல தற்கொலை தான் …
///இன்று உலக தற்கொலை தடுப்பு தினம்
10/09/2019 :- மதுரை
அரவிந்த் யுவராஜ்