ஆத்ம விசாரம்…… (என் முகநூல் பகிர்வு)

படம்

எனக்கான சாத்தியங்களின் எல்லைகளை உணரமுடியாத தருணங்களில் தவித்துதான் போகிறேன். எந்த ஒரு சம்பாஷனைகளையும் அறிவுரைகளாக முடிக்கும் ஆர்வக்கோளாரை கட்டுப்படுத்தவேண்டிய கட்டாயம் இருக்கிறது.

ஆழப் படிப்பதை தர்க்கங்களுக்குள் எடுத்துச் செல்லாமல் சிரித்து மழுப்ப பெரும் ப்ரயத்தனம் செய்தே ஆகவேண்டும். நல்லவனாக காட்ட முயற்சிக்காதது ஒன்றுதான் அன்றிலிருந்து இன்றுவரையான ஒரே ஆறுதல். 

பதில்களும் கேள்விகளுமில்லாமல் வாழ்க்கையை ஸ்வீகரிக்கும் ஆத்மாக்களைப் பார்க்கப் பொறாமையாக இருக்கிறது. வெள்ளந்தித்தனமான ஞானம் கிடைக்கப்பெறுவது ஒரு வரம். கிடைப்பதே தெரியாமல் அது கிடைத்தால் பெரும் பேறு. 

“பேசாமல் முட்டாளாகவே இருந்திருக்கலாம்” என்று நினைத்துவிட்டு, “இப்போ என்ன அறிவாளியாகவா இருக்கிறேன்” என்று கேட்டுக்கோள்ளும் அளவே என் அறிவு வளர்ந்திருப்பதை நினைத்து பெருமைப் பட்டுக்கொள்ள முடியவில்லை. 

மனமுதிர்ச்சியும் மடத்தனமும் ஒருசேரத் தெரிவதால், நான் யாரென்பதன் குழப்ப வினா துரத்தி வந்துகொண்டே இருக்கிறது. எந்தக் கத்திரியும் இல்லாமல் இதுவரை எழுதியதை வாசிக்கும்போது , நன்றாகப் புலம்ப வருகிறது என்பதுமட்டும் தெரிகிறது. 

வரைமுறையையும், கொள்கைக் கோட்பாட்டையும் எப்படிவேண்டுமென்றாலும் என் சௌகர்யத்துக்கு மாற்றி அதற்கொரு ஞாயம் கற்பிக்கத்தெரிந்திருப்பதால், அமைச்சராகும் அபாயமும் இருக்கிறது.

ஆகக்கூடி அத்தனை பிம்பங்களும் ஒன்றுமாற்றி ஒன்றாக, இதோ எனக்கு மேல் சுற்றும் மின்விசிறியின் வெட்டுக்கோடுகளாய்த் தெரியும் இறக்கைகள் போல் தடதடத்து , கட்டுப்பாடில்லாமல் வந்துபோகிறது……….. இருக்கட்டும். 

எது எப்படி இருப்பினும், 

பிஸ்மில்லாகான் இறந்த அன்று, உண்ணப்பிடிக்காமல் காரணமின்றி தொடர்ந்து நாள் முழுக்கக் கண்ணீர் விட்ட அந்த சிறுவன் எனக்குள்ளே இருக்கும் வரை, இந்த வாழ்க்கையின் மீதான என் காதல் பெருகிக்கொண்டேதான் இருக்கும் …. !

Posted in Uncategorized | 10 பின்னூட்டங்கள்

ஆப்பு …..

  படம்

தம்பி ஒருவனை வெகுநாள் கழித்து இன்று மதியம் சந்தித்தேன். என் கூட ஒரு விளம்பர ப்ராஜெக்ட்டும் , சில டிஷ்கஷன்களும் வேலை செய்திருக்கிறான். நல்ல ஞானமும் உழைப்பும் மிக்கவன்தான். இன்று ஏதோ மூட் அவுட் போல.   “சிக்குச்சு இரை” ங்கறா மாதிரி பய எங்கிட்ட பொரி பொரின்னு பொரிஞ்சு தள்ளிட்டான்.

 

“ஏண்ணா எனக்கு இப்டி நடக்குது.கரெக்ட்டா ப்ளான் பண்ணித்தான் செய்யிறேன். நான் எப்டி வேலை பார்ப்பேன்னு உங்களுக்கே தெரியும். எல்லாம் கூடி வருது , கடைசில சொதப்பிடுது. என்ன பண்றதுன்னே தெரியல. எனக்கிட்ட எதாவது மைனஸ் பாயிண்ட் தெரியிதா சொல்லுங்க திருத்திக்கிறேன்”

 

இடம் வலமாக இல்லாமல் கொஞ்சம் ஏற்ற இறக்கத்துடன், கண்களை உருட்டியபடியே பாதி வாய்பிளந்து கமல் போல தலையாட்டி என் கையறு நிலையை வெளிப்படுத்துவதற்கு முன்னே மறுபடியும் ஆரம்பித்துவிட்டான்.

 

“பின்ன என்னணா ……. ச்செய்ன்னு இருக்கு தெரியுமா… இன்னும் இப்டியே எத்தனை நாளைக்கி.  இந்தப் பொழப்புக்கு நான் பேசாம பெட்டிக்கடை வெச்சுரலாம்ணா”…

 

பேசிக்கொண்டே போனான். அவன் என்னைத்தான் கலாய்க்கிறானோ என்னும்  சந்தேகம்வேறு எனக்கு …. கொஞ்சம் உற்று பார்த்தேன். இல்லை என்பதை உறுதிசெய்துகொண்டபின் தொடரும் அவனின் பொருமலைக் கேட்க ஆரம்பித்தேன்.

 

பேசி ஓய்ந்து கடைசியில், விரக்தியுடன் ஒரு கெட்ட வார்த்தையின் முதல் இரு எழுத்தை மட்டும் சொல்ல ஆரம்பித்து , பின் நிறுத்தி , வேண்டாம் என்பதுபோல் தலையை ஆட்டி

 

“……… சரி விடுங்கண்ணா…..விட்டா இப்டி பேசிட்டே இருப்பேன். உங்களுக்கு இப்போ என்ன ப்ராஜெக்ட் போவுது,?”  என்ற கேள்வியுடன் முடித்தான்.

 

நானும், இப்போது  இருக்கும் சில வேலைகளையும், இல்லாத  சில வேலைகளையும் சேர்த்து ஒரு பில்டப்புடன் சொல்லி, “ஏதோ போகுது தம்பி பொழப்பு “ என்று நிறுத்தினேன்.

 

ஆச்சர்யத்துடன்  “எப்டிண்ணா இப்டி” என்பதைப்போல என்னைப் பார்த்தான். நானும் அவன் ஃபீலிங்கை சகிக்க இயலாமல் டாபிக்கை மாற்றினேன்.  தெலுங்கு ஹிந்தி என்று படங்களை பற்றிப் பேசிவிட்டு கடைசியாக தத்துவ செஷனுக்கு வந்தோம்.

அப்போ நான் சும்மா இல்லாமல் ஒரு பாயின்டை எடுத்துவிட்டேன்.

 

“”””””“தம்பி , லைப்ல  எது கிடைக்குதோ, அதை தொத்தி போய்க்கிட்டே இருக்கணும். ரொம்ப ப்ளான் பண்ணி பண்றது, ஸ்மார்ட்டா செய்யிறதா நெனச்சு ரொம்ப பில்ட்டப் குடுக்குறது, மத்தவனெல்லாம் முட்டாள், நான் தான் பெரிய அறிவாளின்னு ஜூ காட்டுறது. இதெல்லாம் இருந்துச்சுன்னு வெச்சுக்கோ….. ஆப்பு தான் “””””

 

அவன் புரிந்ததைப்போல் தலையாட்டினான். ஆனாலும் அவன் மனசு கேட்கவில்லை..

 

“நீங்க சொல்லுறது சரி மாதிரி இருக்கு, ஆனா மனசு ஒப்புக்கலண்ணா. இப்போ ஒரு தொழில சிறப்பா செய்ய ஸ்மார்ட்னெஸ் வேணும்தானே. ஒரு கலையோ விளையாட்டோ எதுன்னாலும் ப்ராக்டீஸ் கூட ப்ளானிங்கும் இருந்தாத்தானே ஷைன் ஆக முடியும்.?”

 

“தம்பி, ஒரு தொழிலில் அது சார்ந்த ஸ்மார்ட்னெஸ், ஒரு கலையில் அதுசார்ந்த ப்ளானிங் இருந்தாத்தான் அதில் நாம அனுபவங்களைப் பெற்று  நிபுணத்துவம் பெறமுடியும். ஆனா நான் சொல்லுறது தனிமனிதன் சார்ந்த ஸ்மார்ட்னெஸ்ஸும், அடுத்தவனை கவிழ்த்தி மீறும் அகம்பாவமும், அதை சார்ந்த ப்ளானிங்கும் சொல்றேன். அதில் சக்ஸஸ் வந்தாலும் அது நிலைக்காது”

 

“எப்டிண்ணா……?”

 

இதுக்கு நான் கொடுத்த விளக்கத்தை இங்கே சொல்லப்போவதில்லை. சுருக்கமாக சொல்லவேண்டுமென்றால் நான் படித்த சில கோட்பாடுகளையும், வாதத்திற்கென்று வேண்டுமென்றே கடமடித்த சில அறிவுஜீவிகளின் மேற்கோள்களையும் வரிசையாக அவனுக்கு அடுக்கி அடுக்கி ஒருவழியாக முடித்து ஒரு மிதப்புடன் அவனைப் பார்த்தேன்.

 

என்னை வைத்தகண் வாங்காமல் பார்த்த தம்பி, கொஞ்ச நேரம்  அமைதியாக இருந்துவிட்டு  கிளம்பத் தயாரானான். கிளம்பும்போது என் கைகளைப் பிடித்து

 

“அண்ணா …. நீங்க உண்மையிலேயே ஜீனியஸ்ணா” என்று சொல்லிவிட்டுப் போனான்.

 

அப்போதுதான் எனக்கு நறுக்கென்று யாரோ குட்டியதுபோல இருந்தது. அது வேறு யாருமில்லை. சாட்சாத் நானேதான்…

 

நான் முதலில் எடுத்துவிட்ட பாயிண்ட் கொடுத்த குட்டுதான் அது .

 

தயவுசெய்து எனக்காக  அதை ஒருமுறை படித்துவிடுங்கள்…

 

………………………………………………………………………………………………………………………

……………………………………………………………………………………………………………………

…………………………………………………………………………………………………………………

 

எப்படி நான் எனக்கே வைத்துக்கொண்ட “ஆப்பு” ….?????!!!!!!!!

 

Posted in Uncategorized | 12 பின்னூட்டங்கள்

பெண்கள் ….. வாகனம் …. கட்டுப்பாடு…

படம்

 

“தண்ணீர் லாரியில் சிக்கி இளம்பெண் பலி”  

நேற்று  கடை ஒன்றின் வெளியே மாலைச் செய்தியாக தொங்கிக்கொண்டிருந்த வாசகங்களில்  இதுவும் ஒன்று.

அந்த வாசகத்தின் அருகே,  சக்கரங்களில் சிக்கி சிதைந்த இளம்பெண்ணின் உடல். அருகில் ஒரு இருசக்கர வாகனம்… நல்ல தெளிவான வண்ணப் புகைப்பட இணைப்புவேறு…

பார்த்த உடன் எனக்குள் ஏற்பட்ட படபடப்பு இன்னும் அடங்கவில்லை…

நகரங்களில் இது சாதாரண செய்திதான் .

” ஐயோ பாவம்” … “இந்த லாரிக்காரனுங்களே இப்படித்தான்”  … “விதி” .. இப்படியெல்லாம் பெருமூச்சுடன் நகர்வது இயல்பாகிப்போன ஒன்று.

அதைத்தாண்டி நம்மால் எதையும் செய்துவிடமுடியாது என்பதும் நிதர்சனம். ஆனால் அவளின் பெற்றோர், உற்றார் உறவினர்களின் நிலையை  நினைத்துக்கூடப் பார்க்கமுடியவில்லை. யோசிக்க ஆரம்பித்தாலே நடுங்குகிறது.

இளைஞர்கள் பைக்குகளில் பறந்து செல்வதையும் , சாலையின் குறுக்கே படுத்து எழுந்து மற்றவர்களின் ரத்த அழுத்தத்தை எகிற வைப்பதையும் நாம் அன்றாடம் பார்க்கிறோம். “எப்பிடி போறாய்ங்க பாரு”…. “இதெல்லாம் எங்க உருப்படப் போகுதுகளோ”…. “எங்கயாவது அடிபட்டு விழுந்தாத்தான் புத்திவரும்” என்கிற சாபங்களை நம் சாலைகள் கேட்டுப் பழகிவிட்டன..

பெண்கள் இருசக்கர வாகனங்கள் ஓட்டுவதைப் பற்றி அவ்வளவாக யாரும் கண்டுகொள்வதில்லை. பொதுவாக அவர்கள் மிக நிதானமாக ஓட்டுவதாகவும் ,அதிக வேகம் போவதில்லை என்றும் நம்மில் பலர் நினைத்துக்கொண்டிருக்கிறோம்.

கடந்த 15  வருடங்களாக பெண்கள் இருசக்கர வாகனங்கள் ஓட்டுவது அதிகரித்திருக்கிறது, குறிப்பாக நகரப் பெண்கள். சற்று கூர்மையாகக் கவனிக்கும்பட்சத்தில், வெகு சில பெண்களே சரியாகவும் கட்டுப்பாட்டுடனும் வண்டி ஓட்டுகிறார்கள் என்பதை ஆழமாக அவதானிப்பவர்கள் உணருவர். சமீப காலமாக அதிகரித்துவரும் இதுபோன்ற விபத்துகளே சாட்சி…

வேகமாக ஓட்டுவதற்கும் கட்டுப்பாடில்லாமல் ஓட்டுவதற்கும் பெரும் வித்தியாசம் இருக்கிறது. வண்டியின் மொத்த இயக்கமும் ஓட்டுபவரின் உடல்மையப்புள்ளியை வைத்து சரியாக இயங்குவது என்பதே கட்டுப்பாடான ஓட்டும் முறை (controlled driving) .  இது  90% பெண்களுக்கு இருப்பதில்லை என்பது அதிர்ச்சி தரும் உண்மை. 

ஓட்டுனர் பயிற்சிப் பள்ளி நடத்திவரும் என் நண்பர் ஒருவருடன் இதைப்பற்றி விரிவாக பேசும்போது அவரும் இதை உறுதிசெய்தார். பெண்களின் உடற்கூறு, மூளைச் செயல்பாடு போன்றவைகள் இதில் அடங்கியிருந்தாலும், பெண்களுக்கான இருசக்கர  வாகனங்களின் வடிவமைப்பும், அது ஏற்படுத்தித் தருகிற இலகுவான இயங்குமுறையும் இதற்குக் காரணமென்றால் நம்ப சற்றுக் கடினமாகத்தான் இருக்கும்.

பெண்களுக்கென்று வடிவமைக்கப்படும் வாகனங்களில் வேக அளவுப்படி என்று சொல்லக்கூடிய கியர்சிஸ்டம் (Gear system) இல்லை. சைக்கிள் பொல கால்கள் செயல்படும் வேலையும் இல்லை. கொஞ்சம்  balance மட்டும் இருந்தால் போதும் , சொகுசாகக் கிளம்பிவிடும். ஆக்ஸிலேட்டரை முறுக்க முறுக்க வேகமெடுக்கும். நொடிகளுக்குள் வேகத்தின் அளவு தாவி உயரும். வேகம் செல்கிறது, ஆனால் என்ன நிலையில் செல்கிறது என்பதை அவதானிப்பதைவிட அதன் போக்கில் ஏற்படும் சுகமானது இன்னும் இன்னும் முறுக்கவே தூண்டுகிறது. ஓட்டும் நபரின் உடற்கட்டுப்பாட்டைவிட்டு வண்டி கொஞ்சம் கொஞ்சமாக விலகுவதை ஓட்டும் நபரால் உணர முடிவதில்லை…

ஒரு சாலை முடிந்து மறு சாலை திரும்பும் இடத்திலோ, சாலைகளின் சந்திப்பிலோ அல்லது குறுக்கில் வாகனங்கள் வரும்போதோ, இப்படியான சந்தர்ப்பத்தில் உடனே ப்ரேக்கை பிடிக்கும்போது, அச்சமயம் வண்டிமீது ஓட்டும் நபருக்கு இருக்கும் ஆளுமையைப் பொறுத்தே அங்கு என்ன நடக்கும் என்பது முடிவு செய்யப்படுகிறது.

ஆண்களுக்கு கட்டுப்பாடுள்ள ஓட்டும்முறை, அவர்களின் வண்டியில் உள்ள கியர் சிஸ்டத்தால் அருமையாக வடிவமைக்கப்பட்டிருந்தாலும் வேகம் எடுப்பதிலும் அதில் கிடைக்கும் போதையிலும் அவர்கள் தாமாகவே கட்டுப்பாட்டை இழக்கிறார்கள். வேகம் குறைவாக ஓட்டுபவர்கள் பெரும்பாலும் விபத்தை சந்திப்பதில்லை.

எல்லாவற்றையும் மீறி நடக்கும் விபத்துக்களை இங்கு சேர்க்க இயலாது. எதிரில் வருபவரின் கவனக்குறைவால் ஏற்படும் சம்பவங்களையும் இங்கு பொருத்திப் பார்க்கவேண்டாம்.   

இதே கியர் சிஸ்டம் உள்ள வாகனங்களை ஓட்டும் பெண்கள் ஆண்களைவிட பிரமாதமாக கட்டுப்பாட்டுடன் ஓட்டுகிறார்கள். அவர்கள் ஏகதேசம் விபத்தையே சந்திப்பதில்லை என்றுகூட சொல்லலாம்.ஆனால் கியர் சிஸ்டம் உள்ள பைக்குகளை ஓட்டும் பெண்கள் அரிது.

 இதைப்பற்றி இன்னும் விரிவாக எழுதிக்கொண்டே போகலாம். அப்படிப் போக ஆரம்பித்தால் துவங்கியதன் நோக்கம் மாறி, இந்தக் கட்டுரையே  விபத்துக்குள்ளாகிவிடுமென்பதால் விஷயத்தை சுருக்கி முடிக்க விழைகிறேன்..

 பெண்பிள்ளைகள் உள்ள வீட்டில் கட்டாயம் இந்த கட்டுப்பாடான ஓட்டும் முறை பற்றி அடிக்கடி சொல்லுங்கள். அதற்காக ‘வாகனம் ஓட்டினாலே விபத்துதான்’ என்ற மனபயத்தை உருவாக்கிவிடாதீர்கள். அது விபத்தை விடக் கொடியது. இரு சக்கர வாகனம் ஓட்ட ஆரம்பிக்கும் ஆண்குழந்தைகளுக்கும் இது பொருந்தும்.

சமயம் கிட்டும்போது அவர்களுடன் வண்டியின் பின் அமர்ந்து அவர்களை ஓட்டச் சொல்லுங்கள். அப்படி ஓட்டும்போது “பாத்து பாத்து, இப்படியா ஓட்டுறது” என்று அவர்களை பதற்றமடையச்செய்யாமல் ஊக்கப்படுத்தி கட்டுப்பாட்டுடன் ஓட்டப் பழக்குங்கள்

வீட்டில் இருக்கும் சமயங்களில் கீழ்க்காணும் டிப்ஸ்களை அவர்களின் மனதில் இதமாகப் பதியவைக்க முயலுங்கள்…

 1. தெருமுனை வருவதற்கு சில அடிகள் முன்னமே ப்ரேக் பிடித்து நின்றே திரும்பவேண்டும். எதிரிலோ குறுக்கிலோ வாகனமே வரவில்லையென்றாலும் பரவாயில்லை.

2.  எந்த வாகனத்தையும் அவசரப்பட்டு முந்தவேண்டாம். குறிப்பாக இடப்பக்கமாக முந்துவது கூடவே கூடாது. எதிர் வாகனங்களைப் பார்த்தே வலதுபக்கமாக, அதுவும் அத்யாவசியமெனில் முந்தலாம்.

3.  பதற்றமாக இருக்கும்போது இருசக்கர வாகனத்தை எடுக்கக் கூடாது. சிறிது ஆசுவாசப்படுத்திக்கொண்டு பின் வண்டியை எடுக்கலாம். பதற்றமாகி பின் கிளம்பும்போது மெதுவாகச் செல்வது உத்தமம்.

4.  ஹெல்மெட் கட்டாயம் அணிந்துகொண்டுதான் செல்லவேண்டும்.

5.  பெண்கள்  முகம் முழுக்க துப்பட்டாவை சுற்றி , ஒரு பெரிய கண்ணாடி அணிந்துகொண்டு நீளக் கையுறைகளுடன் செல்வது தற்போது அதிகமாக தென்படும் சாலைக் காட்சிகளில் ஒன்று.கூடியமட்டும் இப்படி செல்வதைத் தவிர்க்கலாம். அப்படி செய்யும்போது சுவாசம் முட்டாமலும், தலையில் ஹெல்மெட் அணிந்தும் கொஞ்சம் மங்கல்குறைந்த கண்ணாடி அணிந்து செல்வது மிக நல்லது.  சரும பாதுகாப்பு முக்கியம்தான். அதைவிட உயிர் பாதுகாப்பு முக்கியம்.

6. வாகனம் ஓட்டும்போது பாட்டு கேட்டுக்கொண்டு செல்வது, ஹெட்ஃபோன் மூலம் பேசிக்கொண்டே செல்வது அறவே வேண்டாம்.

7.  பக்கக் கண்ணாடிகளைப் பார்க்காமல் வண்டியைத் திருப்பவோ நிறுத்தவோ சாலை கடக்கவோ கூடாது.

8. வண்டியின் பிடியும், உட்காரும் நிலையும் ஆரம்பிக்கும்போது எந்த அளவு பிடிமானமும் கட்டுப்பாடும் இருக்கிறதோ, அது ஓட்டும்போதும், ப்ரேக் பிடித்து நிறுத்தும்போதும் இருக்கவேண்டும்.

9. இரண்டுபேருக்கு மேல் செல்வதை கூடியமட்டும் தவிர்க்கவும். 

10. பிரச்சனைகளை விவாதித்தபடி வாகனம் ஓட்டுவது அறவே தவிர்க்கவும்.   (இந்த டிப்ஸ் தம்பதிகளுக்கும், காதலர்களுக்கும்)

 இது அடிப்படை டிப்ஸ்கள்தான். இதை பின்பற்ற ஆரம்பித்தால் மற்ற விஷயங்கள் தானாகவே பிடிபட்டுவிடும்.

வாகனம் ஓட்டுவது என்பது நேர சேமிப்பு, எளிதில் சென்றடைவது போன்றவைகளைவிட , அதுவும் ஒரு கலை. அதைக் கலைநயத்துடன் முழுமையாக உணர்ந்து செய்வது இன்னும் உன்னதம்…

எது நடக்கவேண்டுமென்று இருக்கிறதோ அது நடந்தே ஆகும் என்றால், அதற்கு பதில் சொல்வது இயலாதகாரியம்.

 எது நடந்தாலும் நாம் எப்போதும் கவனமாக இருக்கவேண்டும் என்பதற்காவே இந்தக் கட்டுரை..

Posted in Uncategorized | 16 பின்னூட்டங்கள்

நடத்தை – 2

தொடர்ச்சிக்கு முன் சில வரிகள்….

இந்த இரண்டாவது பகுதியை முன்னமே எழுதி முடித்திருந்தாலும், முதல் பகுதியின் பின்னூட்டங்கள் எப்படி இருக்கும் என்று கவனித்துவிட்டு, அதற்குபின் இதைப் பதிவிடலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் அப்படி எந்தவித விபரீதமும் நடக்காமல், அதிகமாக பாராட்டுக்களே கிடைத்த ஏமாற்றத்துடன் (!) இதைத் தொடர்கிறேன்…..

(தொடர்ச்சி)

2 ஆண்டுகளுக்கு முன் நான் எனக்கு நடந்த சம்பவம்.

மதுரையில் எனக்குத் தெரிந்த ஒருவரின் வீட்டிற்கு நான் செல்லவேண்டிய சூழல் ஏற்பட்டது. என் சிறுவயதில் அந்த தம்பதிகளைப் பார்த்தது. இப்போதுதான் மீண்டும் அவர்கள் வீட்டிற்குச் செல்கிறேன்.

அதே பழைய அன்பும் ஆசையும் குறையவே இல்லை. சிறு வயதில் கொஞ்சியதைப்போலவே அந்த அத்தை என் கன்னங்களைக் கிள்ளி முத்தமிட்டார், மாமா கட்டியணைத்துக் கொண்டார். இருவர் கண்களிலும் கண்ணீர். எனக்கும்….

அருமையான காபி வந்தது. காபியைக் குடித்தபடி அவர்களின் ஒரே மகள் பற்றி விசாரித்தேன்.திருமணமாகிப் பல வருடங்கள் கழித்துப் பிறந்த குழந்தை அவள்.

குழந்தையில் அவ்வளவு அழகாக இருப்பாள். “டே நீ சின்னப்பையன், உனக்கு தூக்க வராது. அப்படியே பாப்பாவை கொஞ்சிக்கோ” என்று அத்தை செல்லமாக அதட்டியது இன்னும் நினைவிருக்கிறது .இப்போது இளங்கலை பொறியியல் நான்காம் ஆண்டு படிக்கிறாள் என்று சொன்னார்கள்.

“எங்கே, ஹாஸ்டல்லையா இருக்காப்ல?

“டேஸ்க்காலர்தான்டா,”

” எங்கே போயிருக்கு, எப்போ வரும் ?”

“அட இங்கதான் இருக்கு, இரு கூப்பிடுறேன்”

என்று சொல்லிக்கொண்டெ எழுந்த அத்தை, முன்னே இருக்கும் அறையின் வாசலுக்குச் சென்று அவள் பெயரைச் சொல்லி “யார் வந்திருக்காங்க பாரு” என்று சொல்ல, உள்ளே இருந்து எந்த பதிலும் இல்லை.

அந்தத் திறந்த கதவின் எதிரில் இருந்த தொலைக்காட்சிப் பெட்டியின் (covered tv stand) பக்கவாட்டுக் கண்ணாடி மூடியில், (ஒலி அமைப்பிற்காக ஒரு பக்கம் சாய்வாகத் திறக்கப்பட்டிருந்த சிறிய கண்ணாடிக் கதவு) அறையின் உள்ளே என்ன நடக்கிறது என்று எனக்குத் தெளிவாகத் தெரிந்தது.

ஜீன்ஸ் டி-சர்ட் அணிந்த அந்தப்பெண், தன் மடிக்கணிணியில் எதோ பார்த்தபடி இருந்தவள் அத்தையின் சத்தம் கேட்டுத் திரும்பினாள். அத்தை வா என்று சைகை காட்ட “என்ன” என்பது போல சைகையில் கேட்டாள்.

அத்தை கொஞ்சம் கொஞ்சலாக “இங்க யார் வந்திருக்கான்னு வந்து பாரேன் பாப்பா” .

அத்தை என் பக்கம் சிரித்தபடியேதான் இதைச் சொல்கிறார்.

உள்ளிருந்த அந்த பெண் தன் நெற்றியில் அடித்துக்கொள்கிறாள். முறைத்தபடி தன் கையை அத்தையை நோக்கி ஏதேதோ கோணங்களில் ஆட்டி, உதடு அசைய சத்தமில்லாமல் திட்டுகிறாள்.

அத்தை அந்த அறையின் வாசலில் நிற்பதால் எனக்குத் தெரிந்துவிடும் என்பதற்காக சிரித்தபடியே அவள் திட்டுவதை வாங்கிக்கொள்கிறாள்.

“சரி ட்ரெஸ்ஸ மாத்திட்டு வாம்மா” என்று சிரித்துக்கொண்டே சொல்லிவிட்டு என்னைப் பார்த்து

“நைட்டில இருக்காடா. ட்ரெஸ் பண்ணிட்டு வருவா” என்றபடி மீண்டும் உள்ளே பார்த்தார்.

மறுபடியும் அந்தப்பெண் “கொன்றுவிடுவேன்” என்று சொல்வதைப்போல ஆள்காட்டி விரலைக்காட்டி சைகை செய்துவிட்டு “போய்த் தொலை ” என்கிற அர்த்தத்தில் வலதுகையை அசைத்தாள்.

எதையும் காட்டிக்கொள்ளாமல் அத்தை என்னருகில் வந்து அமர்ந்தபடியே “கொஞ்சம் தலைவலி அவளுக்கு” என்றார்.

மாமாவும் “போன வாரம் முழுக்க அவளுக்கு எக்ஸாம்.நைட்டெல்லாம் படிச்சால்ல, அதான்”…

நான் எதுவும் சொல்லவில்லை.

ஒரு சில நிமிடங்களுக்குப்பின் அதே ஜீன்ஸ்ஃபேண்ட் டி-சர்ட் சகிதம் அந்தப் பெண் வந்தாள்.

என்னைப் பார்த்து லேசாக புன்னகைத்தபடியே “ஹலோ, …. நல்லா இருக்கீங்ளா”

“நல்லா இருக்கேம்ப்பா, என்னை நினைவிருக்கா”

“இல்ல சரியா தெரியல” … பேசிக்கொண்டே அவள் அப்பாவிடம் திரும்பி “வண்டி கீ எங்க” என்றாள். மாமா தன் ஃபேன்ட் பாக்கெட்டிலிருந்து எடுத்துக்கொடுக்க, என்னைப் பார்த்து

“நான் வரேன். சீ யூ தென்” என்று சொல்லியபடியே வெளியே போய் தன் ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு பறந்துவிட்டாள்.

“அவசரமா எதோ ரெஃபர் பண்றதுக்கு போறாடா” என்று சொல்லியபடி அத்தை மாமாவைப் பார்க்க, மாமா உடனே

“டேய் சாப்டுத்தான் போற நீ”

அத்தையும் “ஆமான்டா ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்க” என்று எழ ஆரம்பிக்க, அவரின் கையைப் பிடித்து உட்கார வைத்தேன்.

“இப்போ என்ன அவசரம்… வீடு தெரிஞ்சிருச்சுல்ல… இன்னும் 2நாள் இருப்பேன். வந்து சாப்பிடுறேன். நான் கிளம்பணும், வெளிய ஃப்ரெண்டு வெயிட் பண்றான்.” என்று சொல்லியபடியே எழுந்தேன்.

இருவரும் வாசல் வரை வந்தார்கள். அத்தை வாசற்கதவருகே வந்து நின்றுகொள்ள, மாமா என்னோடு அந்த காம்பவுண்டுக் கதவு வரை வந்தார்.

” பாப்பா எதுவும் பேசாம விசுக்குன்னு போயிடுச்சுன்னு எதும் நெனச்சுக்காதய்யா… சரியா, ”

“அட இதுல என்ன இருக்கு மாமா. நம்ம புள்ள”

சற்று யோசித்து ஒரு பெருமூச்சு விட்டபடி “நீ கவனிச்சது தெரியும்யா……. என்னத்தச் சொல்றது, ஒத்தைக்கு ஒருபுள்ளைன்னு ஒவ்வொண்ணா பாத்து செஞ்சு, கேட்டதெல்லாம் வாங்கிக்குடுத்து, இப்போ எதுவுமே சொல்லமுடியலய்யா. உன் அத்தை என்னைய திட்டமுடியாம, அவளையும் கண்டிக்கமுடியாம தெனமும் அழுகுறதப் பாக்க தாங்கலய்யா….”

“அட விடுங்க மாமா….”

ஏதேதோ சொல்லி சமாளித்துவிட்டு வந்தேன்.

வெளியே காத்துக்கொண்டிருந்த என் நண்பன் “டே நேரமாச்சு மாப்ள, படம் போட்ருவாய்ங்க”….

மாமாவை பார்த்துவிட்டு மதியம் சினிமாவுக்கு செல்வதுதான் எங்களின் காலைத்திட்டம்.அவசரமாக கண்ணில் தெரிந்த ஒரு ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு பைக்கில் பறந்தோம்.

மாமா வீட்டிலிருந்து தியேட்டர் சற்று தொலைவுதான். உள்ளே நாங்கள் நுழையவும் சினிமா துவங்கவும் சரியாக இருந்தது.

இடைவேளையின்போது எழுந்து வெளியே சென்றுவிட்டு உள்ளே நுழைந்து சுற்றிலும் பார்த்தேன்.தியேட்டரில் கூட்டம் மிகக் குறைவுதான். ஆனால் அங்கே இன்னொரு காட்சியும் எனக்கு பார்க்கக் கிடைத்தது.

நான் அமர்ந்திருந்த இருக்கைக்கு இரண்டு இருக்கைகளுக்கு முன் ஓரத்தில் அதே ஜீன்ஸ்பேண்ட் டி-சர்ட் பெண், ஒரு வாலிபனுடன் மிக நெருக்கமாக அமர்ந்திருந்தாள்.

நடந்தவைகளை என் நண்பனிடம் சுருக்கமாகச் சொன்னேன். “விடு விடு.. அப்படித்தான் எல்லாம்” என்று ஒரு வார்த்தையில் பதில் சொன்னான். படம் முடியும் முன்னே எழுந்து வெளியே வந்து கிளம்பிவிட்டோம்.

அதற்கு ஒரு காரணமும் உண்டு.

சிறு வயது முதல் எனக்கு ஒரு குணம். எனக்கு வேண்டிய அல்லது தெரிந்த குடும்பத்துப் பெண்களை அல்லது ஆண்களை , வேறோரு தெரியாத நபருடன் பொது இடங்களிலோ அல்லது இப்படி சினிமா தியேட்டரிலோ நிலையில் பார்க்க நேர்ந்தால், கூடியமட்டும் அவர்களின் பார்வையில் விழாமல் தப்பித்து அந்த இடத்தை விட்டு சென்றுவிடுவேன்.

அடுத்தமுறைவர்களை சந்திக்கும்போது அந்த நிகழ்வைப் பற்றி அவர்களிடம் கேட்கவும் மாட்டேன். அப்படி கேட்டு அவர்களை தர்ம சங்கடத்தில் நெளியச் செய்வதை மிக மிக அநாகரீகமாகக் கருதுவேன்.

சரி…. மேலே குறிப்பிட்ட சம்பவம், சமீப காலமாக நம் எல்லோரது வாழ்வில் வெவ்வேறு தருணங்களில் வெவ்வேறு வடிவங்களில் அனுபவித்த ஒன்றாக இருக்கும்… இதற்கு உங்களின் பதில் “இல்லை” என்றால் நீங்கள் கொடுத்துவைத்தவர்கள்…

முந்தைய அத்தியாயத்தில் நான் குறிப்பிட்ட “நடத்தை”, அடுத்த தலைமுறைக்கு கொண்டுசெல்லாததன் விளைவுதான் மேற்சொன்ன சம்பவம்…

இது சம்பந்தப்பட்ட வேறொரு வடிவம் சொல்கிறேன்…

என் நண்பன் ஒருவன் தன் 8 வயது மகன் சரியாக படிப்பதில்லை என்று என்று குறைபட்டுக்கொண்டான்.

“சரியா படிக்க மாட்டேன்ங்குறான். எது சொன்னாலும் அடம் புடிக்கிறான்”

“ஓ அப்படியா… எத்தனாவது ரேங்க் வாங்கினான்”

” 12 வது ரேங்க்…க்ரேடு சிஸ்டம்தான் இப்போ , ஆனா டோட்டலா அப்டி கேல்குலேட் பண்ணி அவங்க டீச்சர் சொன்னாங்க. பேரன்ட்ஸ் மீடிங்ல அப்டி சொன்னபோது எனக்கு வெக்கமாப்போச்சு. என்ன பண்றதுன்னே தெரியல”

“சரி … அந்த 1, 2, 3 ரேங்க் வாங்கின பசங்கள் கிட்ட போய் வாழ்த்து (congratulate) சொல்ல சொன்னியா உன் மகன?”

“எலேய் … என்னடா நீ , என் அப்பா கூட சொல்லித்தராத ஒரு விஷயத்த சொல்ற”…

அப்போதுதான் எனக்கு உறைத்தது. இது 3 தலைமுறைகள் தாண்டித் தொடரும் வியாதி என்று…

மகன் நன்றாகப் படிக்கவில்லை. சரி. பாடப் புத்தகங்களில் இருக்கும் எழுத்துக்களையோ எண்களையோ மனனம் செய்து, அல்லது கூட்டி பெருக்கி வகுத்து ஒரு தீர்வை எட்டுவது தெரியவில்லை. அல்லது புரியவில்லை என்று வைத்துக்கொள்ளுங்கள். இந்த ஒரு விஷயம் மட்டுமே அந்தக் குழந்தையை தகுதியற்ற குழந்தையாகச் செய்துவிடுமா?… கல்வி என்பதற்கும் கற்றல் என்பதற்கும் என்ன அர்த்தம்?

கல்வி அமைப்பைப் பற்றி எனக்குண்டான பார்வையை இதில் பேச ஆரம்பித்தால் அது வேறு திசைக்கு இட்டுச் செல்லும்.அது வேண்டாம்.

ஆனால் தன் சக மாணவனை வாழ்த்தும் மனப்பான்மை நம் குழந்தைகளுக்கு நாம் ஏன் கற்றுத்தர மறந்துவிட்டோம்? ஏனென்றால் நாமே அப்படி இல்லை என்பதுதான் நிதர்சனம்…

இதில் மிக நுட்பமான பகுதி என்னவென்றால், அதிகம் படித்தவர்கள்தான் இந்தத் தவறைச் செய்கிறார்கள். படிக்காத தன் பெற்றோரை விட தன் பிள்ளைகளை இன்னும் அக்கறையுடன் வளர்க்கிறேன் பேர்வழி என்று எண்ணும் மனப்பான்மைதான் இந்த நடத்தைச் சறுக்கலின் துவக்கம். அவர்கள் அதிகம் படித்தவர்களாயிற்றே…. அவர்கள் நினைப்பதுதானே சரி…

“என் அப்பாவுக்கு வேலையே இல்ல… எந்த கல்யாணம் கருமாதின்னாலும் மொத ஆளா போய் உக்காந்துகிட்டு… மானம் போகுது” என்று சொல்லும் படித்த மேதைகளைப் பார்த்திருக்கிறேன். எனக்கு ஒருபக்கம் சிரிப்புதான் வரும். அதேசமயம் அவ்வளவு உன்னத நடத்தையுடைய தந்தை இப்படி நகைப்புக்குள்ளாக்கப்படுவது இன்னொரு பக்கம் வேதனையாகவும் இருக்கும்.

“அப்போ அந்தக்காலத்து ஆளுங்களெல்லாம் நல்லவங்க. இப்போ இருக்குறவங்கெல்லாம் கெட்டவங்க.. அப்படித்தானே?”

இப்படி ஒரு கேள்வி வருவது இயல்புதான். கொஞ்சம் இதை நுட்பமாகப் பார்க்கலாம்.

நல்லவன் கெட்டவன் என்பது இயல்பு, அல்லது அவர்களை நாம் பார்க்கும் பார்வை. சரி, ஒரு வாதத்திற்கு இதை எடுத்துக்கொள்வோம். அப்போதும் நல்லவர்கள் கெட்டவர்கள் என்று இருந்தார்கள். ஆனால் இந்த அடிப்படை “நடத்தை” என்பது அநேகமாக எல்லொரிடமும் இருந்தது.

“என்னதான் இருந்தாலும் அவன் வீடு தேடி வந்து பத்திரிக்கை வெச்சுட்டான். நம்ம செய்யவேண்டியதை செய்யாம இருந்தா நமக்கு மரியாதை இல்ல”….

“ஆயிரம்தான் இருக்கட்டும் அவனுக்கு நாம பத்திரிக்கை வைக்கிறதுதான் மரியாதை. நடந்தது எல்லாம் இப்ப பாக்குற நேரமில்ல. போய் வெச்சிட்டு வா”

“ஆயிரம்தான் பிரச்சனை இருந்தாலும் மொத வரிசையில வந்து நின்னு எல்லா மொறமையும் செஞ்சுட்டுப் போய்ட்டான் பாரு. பெரிய மனுசன்தான்டா அவன்”

“என்னதான் இத்தன வருஷம் பேசாம ஒதுங்கி இருந்தாலும், சாவுக்கு போய் நிக்காம இருக்குறது தப்பு. வா ஒரு எட்டு போய்ட்டு வருவோம். இனி எப்போ பாக்கப்போறோம் அவன”….

இந்த வார்த்தைகளை நம் சிறு பிராயத்தில் கேட்டிருப்போம்… நினைவிருக்கிறதா…?

இது தான் நடத்தை……!

(தொடர்கிறேன்)

Posted in Uncategorized | 16 பின்னூட்டங்கள்

நடத்தை …

வெகு நாட்களக எழுதி வைத்திருந்த கட்டுரை  இது. ஆனால் என்ன          காரணத்தினாலோ வெளியிடாமல் தள்ளிப் போட்டுக்கொணடேவந்தேன் . குறிப்பான காரணம் எதுவும் இல்லை.  ஆனால் சுதந்திரம் பற்றியேல்லாம் பேசி,  களைத்து, கொண்டாடி, எதிர்த்து ஒரு வழியாக முடிந்த இன்று (16-08-2012) பதிவிடுது சரியாக இருக்கும் என்று தோன்றியது.

சரி…… விஷயத்துக்கு வருகிறேன்.

சில மாதங்களுக்கு முன், பெங்களூரில், ஒரு முக்கிய பிரமுகருடன் அவரது காரில் பயணித்துக் கொண்டிருந்தேன். அவரின் நெருங்கிய நண்பர் ஒருவரும் எங்களோடு இருந்தார். அவர் மிகப் பெரிய செல்வந்தர்.கார் மைசூரை நோக்கி விரைந்துகொண்டிருந்தது. அந்த முக்கிய பிரமுகர் தனக்குப் பிடித்த பழைய ஹிந்திப் பாடல்களைக் கேட்டு ரசித்தபடி இருந்தார்.

சிறிது நேரத்திற்குப் பின் அவரது நண்பர் அவரிடம்”இன்னும் இப்படிபழைய பாட்டுக்களையே கேட்டுகிட்டிருக்கீங்க. இப்போ புது பாட்டுக்கள் என்னவெல்லாமோ வந்திருக்கு. அதையும் கேளுங்க” என்று சொல்லிக்கொண்டே தன்னிடம் இருந்த புது ஹிந்திப் பாடல்கள் அடங்கிய சிடியை எடுத்துக் கொடுத்து போடச் சொன்னார். பாடல்கள் ஓட ஆரம்பித்தன. அந்த முக்கிய பிரமுகரும் அதை ரசிப்பதுபோல் பாவனை செய்தபடி இருந்தார்.

வேலைகள் முடிந்து பெங்களூர் திரும்பினோம்.  வழியில் ஒரு பிரம்மாண்டமான வீட்டின் முன் கார் நிற்க , அவரின் நண்பர் இறங்கிக் கொண்டார். கார் கிளம்பியதும் அந்த முக்கியய பிரமுகர் என்னிடம்

“பார்த்தீர்களா அவர் நடத்தையை”

“என்ன சார்”…

“அவர் என்னைவிட அந்தஸ்திலும் பணத்திலும் உயர்ந்தவர்தான். ஆனால் அவர் பயணித்தது என் காரில். அதில் எனக்குப் பிடித்த பாடல்களை நான் போட்டு கேட்டுக்கொண்டு வருகிறேன். அதில் தலையிடுவது அநாகரீகம் என்றுகூட அவருக்குத் தெரியவில்லை பாருங்கள். ……” தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தார்.

எனக்கு வெகு நாட்களுக்கு முன் படித்த வரலாற்றுப் பகுதி ஒன்று நினைவுக்கு வந்தது.

தந்தைப் பெரியாரின் வீட்டுக்கு ‘ரசிகமணி’ டிகேசி அவர்கள்  ஒருமுறை வந்து தங்கினார். காலையில் அவர் குளித்துமுடித்து வந்தபோது , கையில் விபூதி பழத்துடன் காத்திருந்தார் பெரியார்.  ஆச்சர்யத்துடன் “இது உங்களுக்குப் பிடிக்காத விஷயமாச்சே ” என்றார் டிகேசி.

பெரியார் சிரித்துக்கொண்டே “உங்களுக்கு இது பிடித்த விஷயம் அல்லவா. அதனால் பக்கத்து கோவிலில் இருந்து தருவித்தேன்” என்றார். ஏனென்றால் திரு.டிகேசி அவர்கள் தீவிர சிவ பக்தர் என்பது பெரியார் அவர்களுக்கு நன்கு தெரியும். தீவிர கடவுள் மறுப்பாளரான தந்தை பெரியாரின் நடத்தை இது.

இன்னும் பல சம்பவங்கள்  என் நினைவில் வந்துபோகிறது.

இந்த நடத்தையின் உன்னத கணத்தைத்தான்  நம் அழகுத்தமிழ் “நயத்தகு நாகரீகம்” என்கிறது. இந்த நடத்தைக்கும் கல்விக்கும், அறிவிற்கும் சம்பந்தம் இருக்கிறதா என்று யோசித்தால் ‘இல்லை’ என்பதை உறுதியாக சொல்லமுடியும்.

தன் ஆட்டோவில் பயணித்தவர் விட்டுச்சென்ற பல லட்சம் மதிப்புள்ள  பணத்தையும் நகைகளையும், திரும்ப தேடிச்சென்று ஒப்படைத்த  அதிகம்  படிக்காத ஏழைத் தோழர் ஒருவரை நான் சந்தித்திருக்கிறேன். எப்படி அதை செய்தீர்கள் என்று கேட்டதற்கு அவர் சொன்ன பதில் “அது என்னோடது இல்லையே தம்பி”…

அந்த வார்த்தைகள் என் முகத்தில் அறைந்ததுபோல இருந்தது. எவ்வளவு பெரிய வார்த்தைகள் அவை. இந்த உயரிய பண்பை அவர் எங்கிருந்து கற்றார்?  இத்தனைக்கும் மிக மிக ஏழைக் குடும்பத்தைச் செர்ந்தவர் அவர்.

இப்படிப்பட்ட நம் மரபு சார்ந்த பண்புகள் எல்லாம் சமீபகாலமாக குறைந்து குறைந்து, மிருகங்களை விட கீழ்த்தரமான நிலைக்கு நாம் போய்க்கொண்டு இருக்கிறோம் என்பது மறுக்கமுடியாத உண்மை.

இந்த பண்பு எங்கிருந்து வருகிறது, எதனால் குறைகிறது என்பதற்கு மனோ உளவியல் வல்லுனர்கள் பல காரணங்கள் சொல்லுகிறார்கள். அதற்குள் நான் போக விரும்பவில்லை.

ஆனால் ஒன்றுமட்டும் என்னால் உறுதியாக சொல்ல முடியும். நமக்குள் இருக்கும் மனசாட்சி என்கிற ஒரு விஷயம் சமீக காலமாக செத்துக்கொண்டிருக்கிறது.  அதற்கு நம் அரசியல்-பொருளாதாரச் சூழல் , ஏன் நம் கல்வியும்கூட காரணமாக இருக்கிறது என்பதுதான் வேதனையான உண்மை.

“நான் வெற்றிபெற்று முதலமைச்சரானதைவிட  திரு.காமராஜர் அவர்களின் தோல்வி எனக்கு மிகுந்த மன வருத்தத்தைக் கொடுக்கிறது” என்றார் பேரறிஞர் அண்ணா. அந்த நயத்தகு நாகரீகம் அதற்குப் பின் 40 வருடங்களுக்கு மேலாக காணாமல் போனதற்கு என்ன காரணம்?

“தன் பொருள் தனக்கல்ல” என்கிற ஒரு ஆட்டோ ஓட்டும் தோழருக்கு இருக்கும் மனநிலை கூட இன்றைய அரசியல்வாதிகளுக்கோ ஆள்பவர்களுகோ இல்லையே ஏன்? அப்படி இருப்பவர்கள் கோமாளிகளாக அவமதிக்கப்பட்டு ஓரங்கட்டப்படுகிறார்களே ஏன்?

நமக்கு முந்தைய தலைமுறையினருக்கும் நமக்கும் இடையே ஏதோ ஒன்று இடிக்கிறது… மார்க்ஸையெல்லாம் வம்புக்கு இழுத்து ‘தலைமுறை’ இடைவெளி என்கிற கோணத்தில் அதைப் பார்த்தாலும் , அதில் ஏதோ தேய்மானம் இருப்பதாகவே படுகிறது.. உள்ளார போய் குழப்பாமல் மேலெழுந்தவாரியாக மட்டுமே பார்க்கலாம்.

நவீனமும் உலமயமாக்கலும் நம் மனதின் எல்லாப்  பகுதியையும் ஆக்கிரமித்து நம் இயல்புகளிலும் மரபுகளிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதை மறுக்கவில்லை. இதையே 60 களின் மத்தியில் ஃப்ரான்ஸும் அதற்கு முந்தைய காலகட்டத்தில் அமேரிக்காவும் இன்னும் சில ஐரோப்பிய நாடுகளும் அனுபவித்திருக்கின்றன என்பதைப் படித்திருக்கிறோம்.

ஆனால் அது அவர்களின் அடிப்படை பண்புகளை மாற்றியிருக்கின்றனவா என்று பார்த்தால் ,ஓரளவு மாற்றியிருக்கின்றது என்பது உண்மையே. ஆனால் நம்மிடையே  ஏற்பட்டுள்ள மாற்றம் மிக கொடூரமானதாக எனக்குத் தோன்றுகிறது.

கொடூரம் என்பது சற்று கடுமையான வார்த்தையாக இருப்பினும் அதை பயன்படுத்தியே ஆகவேண்டிய கட்டாயமாகிறது.

இன்றைய நவீனம் நம்மிடையே பல குறைகளை நம்மை அறியாமல் நமக்குள் புகுத்திவிட்டதாகவே நான் கருதுகிறேன். வாழ்க்கை பற்றிய தவறான புரிதல்களை சரியென்று சொல்லி நம்ப வைக்கிறது. உதாரணத்திற்கு நான் எடுத்துக்கொள்ளும் வார்த்தை ‘மரியாதை’.

இன்று நம் சக மனிதனை மதிப்பது என்பது ‘அவமதிப்பு’ என்று  நவீனம் நமக்கு கற்றுக்கொடுத்திருக்கிறது என்று நான் சொன்னால் அதை நீங்கள் நம்புவீர்களா?.. நம்பித்தான் ஆகவேண்டும். உதாரணத்திற்கு சில கேள்விகள்.

  1. நம்மில் எத்தனை பேர் புதியவர்களையோ, பெரியவர்களையோ கைகூப்பி வரவேற்கிறோம் ?.
  2. நமக்கு வரும் தொலைபேசி அழைப்பை நம்மில் எத்தனை பேர் ‘வணக்கம்’ சொல்லி எடுத்து பேசுகிறோம்.?
  3. நம் வீட்டில் நடைபெற்ற நல்ல விஷயங்களுக்கோ அல்லது துன்ப நிகழ்விற்கோ வந்து சென்றவர்களுக்கு நன்றி அறிவித்திருக்கிறோம்?
  4. நம் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு நம்மில் எத்தனை பேர் இப்படிப்பட்ட ‘மரியாதை’களை கற்றுக்கொடுத்திருக்கிறோம்?

இதுபோன்ற பல கேள்விகள் என்னுள்ளே எழுவதற்குக் காரணம் நான் பார்த்து வளர்ந்த மனிதர்களும், இப்போது பார்த்துக்கொண்டிருக்கும் மனிதர்களும்தான்.

நம்முடைய புறச்சூழல் நம்மை இந்த நிலைக்குக் கொண்டுவந்து தள்ளிவிட்டதை நான் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் இல்லை. ஆனால் அதையும் மீறி நாம் அதற்கு கொடுக்கின்ற விலை, நம்முடைய இயல்பை மட்டுமல்ல நம் சுயத்தை சாகடிக்கிறது என்கிற வேதனை என்னுள்ளே கடந்த சில வருடங்களாக இருந்துகொண்டே இருக்கிறது.

தன்னுடைய குழந்தைக்கு இப்படிப்பட்ட அடிப்படையான விஷயங்களைக் கூட கற்றுக்கொடுக்க திராணியற்று, “அது அவனுக்கு பிடிக்காது” “அவன் நான் சொன்னா எங்க கேக்கப்போறான்” என்று சொல்லும் பெற்றோர்களைப் பார்க்கும்போது,  அவர்கள் பெரும் குற்றவாளிகளாகத்தான் என் கண்ணுக்கு  தெரிகிறார்கள்.

தன் குழந்தையின் விருப்பத்திற்கு ஏற்ற வகையில் நடந்துகொள்வதுதான் பாசம் என்று நினைப்பவர்கள், தன் முன்னோர்களும், தன் பெற்றோர்களும் காலம் காலமாக பின்பற்றும் உயரிய குணங்களை உணர்ந்து,  அதை தன் குழந்தைகளுக்குப் பழக்கப்படுத்துவதுதான் அவர்களுக்கு செய்யும் மிகப்பெரிய கடமை என்பதை ஏன் மறுக்கிறார்கள் என்பது எனக்குப் புரியவில்லை. அதுதானே உண்மையான பாசம்.?

ஒரே மகன், ஒரே மகள் என்று சொல்லும் தற்காலப் பெற்றோர்கள், அப்படி பொக்கிஷமாக கிடைத்த குழந்தையை எப்படி நடத்தையோடு வளர்க்கவேண்டும் என்பது தெரிந்து வைத்திருக்க வேண்டாமா?

(தொடர்கிறேன்)

Posted in Uncategorized | 10 பின்னூட்டங்கள்

சந்தியா ராகம்

நேற்று தற்செயலாக முகப்புத்தகத்தை மேய்ந்துகொண்டிருந்தபோது “தமிழ் ஸ்டுடியோ” என்கிற வலைத்தள அறிவிப்பு கண்ணில் பட , எனக்கு சொல்லொண்ணா பூரிப்பு…

” இன்று மாலை 6 மணிக்கு சென்னை MM ப்ரிவ்யூ தியேட்டரில் ‘சந்தியா ராகம்’ திரையிடப்படுகிறது. திரு பாலு மகேந்திரா அவர்கள் கலந்துகொள்கிறர்.அனைவரும் கலந்துகொள்ளவும்” என்கிற அறிவிப்பு.

என் பள்ளி காலங்களில் ஒரு ஞாயிற்றுக்கிழமை மதியம் தூர்தர்ஷனில் பார்த்த நினைவு மட்டும் இருக்கிறது. அதுவும் சில காட்சிகள் மட்டும் ஓலிகள் இல்லாமல் படிமங்களாக பதிந்திருக்கிறது.

அதற்குப் பின் பல இடங்களில் இந்தப் படத்தைப் பற்றி பலர் பேசும்பொழுது பார்க்கவேண்டும் என்று தோன்றும். இதன் பிரதியை பலரிடமும் கேட்டிருக்கிறேன். திரைப்பட விழாக்களில் எதிர்பார்த்தேன். எதுவும் வாய்க்கவில்லை.ஆனால் இப்போது “தமிழ் ஸ்டுடியோ” மூலம் இதை பார்க்கும் சந்தர்ப்பம்.

5.30 க்கே MM ப்ரிவ்யூ தியெட்டர் சென்றுவிட்டேன். 6 மணிக்கு ஆரம்பமாகவேண்டியது சற்று தாமதமாக ஆரம்பமானது. அரங்கம் நிறைந்திருந்தது. கறுப்புவெள்ளையில் ஆரம்பமானது.

Image

மனைவியை இழந்த முதியவர் (சொக்கலிங்க பாகவதர்) வேறு போக்கிடம் இல்லாமல் சேலத்துக்கு அருகிலுள்ள தனது சொந்த கிராமத்தை விட்டு சென்னையில் உள்ள தன் தம்பி மகனிடம் (ஓவியர்.வீர சந்தானம்) வந்து சேர்கிறார்.

சொற்ப சம்பளத்தில் ஒரு அச்சகத்தில் ஓவியராகப் பணிபுரிந்து வரும் அந்த மகன், தன் நிறைமாத கர்ப்பிணியான மனைவி (அர்ச்சனா), பள்ளிசெல்லும் மகளுடன் ஒரு ஒண்டுக்குடித்தனத்தில் வாழ்ந்துவருகிறான்.

அவர்களோடு சேர்ந்து வாழத்துவங்குகிறார் முதியவர். அவரால் இயன்ற அளவுக்கு அவர்களுக்கு உதவியாக இருக்கிறார். அந்தக் குழந்தை அவருடன் வெகுவாக ஒட்டிக்கொள்கிறது.

ஒரு நாள் அந்த முதியவர் தன் பேரக் குழந்தையை பள்ளிக்குக் கொண்டுவிடும் சமயத்தில் , குழந்தை ஆசைப்படுகிறாளே என்று சாலையோரத்தில் விற்கும் பட்ஷணம்(வடை) ஒன்றை வாங்கிக்கொடுக்கிறார். அது அந்தக் குழந்தைக்கு ஒவ்வாமல்போய் வாந்தியெடுத்து மயங்கிவிடுகிறது.

அந்தப் பதட்டத்தில் மருமகள் அவரைத் திட்டிவிட்டு குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்று ஊசி போட்டு திரும்புகிறாள். அந்த இரவு முதியவர் எதுவும் சாப்பிடாமல் ஆழ்ந்து யோசிக்க ஆரம்பிக்கிறார்.

இவர்களுக்கு தான் ஒரு பாரமாக இருக்கிறோமா என்கிற எண்ணம் அவருக்குத் தோன்ற , மறுநாள் அதிகாலை யாரிடமும் சொல்லாமல் வீட்டை விட்டு வெளியேறுகிறார். ஒரு முதியோர் இல்லத்தில் தானே சென்று சேர்ந்து தன் வாழ்க்கையைத் தொடருகிறார்.

அந்த மகனும் மருமகளும் அவரை பல இடங்களில் தேடுகிறார்கள். மகன் தன் ஊருக்கெல்லாம் சென்று தேடி , அவர் கிடைக்காமல் ஏமாற்றத்தோடு திரும்புகிறான்.

தான் திட்டியதால்தான் மாமா வீட்டைவிட்டு போய்விட்டார் என்று நினைத்து நினைத்து அந்த கர்ப்பிணி மருமகள் வருந்திக்கொண்டிருக்கும் சமயத்தில் அவளுக்கு அந்த முதியவரிடமிருந்து ஒரு கடிதம் வருகிறது.

கடிதத்திலுள்ள முகவரியைத்தேடி உடனே கிளம்பிச்சென்று முதியவரை சந்திக்கிறாள் மருமகள்.தன்னுடன் வரும்படி அவரை வற்புறுத்துகிறாள்.

முதியவர் அன்பாக மறுக்கிறார். தான் இங்கே நிம்மதியாக இருப்பதாகச் சொல்கிறார். அந்த இல்லத்தில் இருக்கும் நண்பர்களை மருமகளுக்கு அறிமுகம் செய்துவைக்கிறார். எப்போது வேண்டுமானாலும் தான் வந்து அவர்களைப் பார்ப்பதாக உறுதியளிக்கிறார். மேலும் அவர்கள் மீது தனக்கு எந்த வருத்தமும் இல்லை என்று புரியவைத்து மருமகளை அனுப்பிவைக்கிறார்.

சில நாட்களுக்குப் பின் மருமகளுக்கு குழந்தை பிறந்திருப்பதாக அவருக்கு செய்தி வர, உடனே கிளம்பி மருத்துவமனைக்கு வந்து பிறந்த குழந்தையைப் பார்க்கிறார்.

மகிழ்ச்சி பொங்க தன் மருமகளை அவர் பார்க்க…
அவளும் அவரைப் பார்த்து பாசமாய் புன்னகைக்க….
அவரின் முதிர்ந்த விரலை அந்த பச்சிளம் குழந்தையின் கை மெதுவாக பற்ற…. காட்சி மெதுவாக மறைந்து

“திரைக்கதை – வசனம்- ஒளிப்பதிவு -எடிட்டிங் – பாலு மகேந்திரா என்று திரையில் தோன்றுகிறது …..

எங்கும் நிசப்தம்…. ஆங்காங்கே ஒன்றிரண்டு தொடங்கி, பின் அரங்கம் கைதட்டலில் அதிர்கிறது.

முதுமையின் பயணம் எப்படிப்பட்டது என்பதை அந்தக் கலைஞன் எவ்வளவு நுட்பமாகப் பதிவு செய்திருக்கிறார்.அடடா… சொல்ல வார்த்தைகள் இல்லை.

என்னுள் இறங்கிய இடி, அதனால் ஏற்பட்ட பெருமழை இன்னும் அடங்கியபாடில்லை.

ஒரு விமர்சகனாகவோ அல்லது சினிமாவில் வேலைபார்ப்பவனாகவோ இதை எழுதுவதற்கு உண்டான தகுதி எனக்கு இல்லை என்பதால் அந்த தவறைச் செய்ய எனக்கு மனம் வரவிலலை.

இந்தக் காட்சி அழகு, அந்தக் காட்சி அப்படி, என்று ஒரு ரசிகனாக சொல்லவேண்டுமானால் இதை இன்னும் குறைந்தபட்சம் 15 முறையாவது நான் பார்க்கவேண்டும்.

ஆனால் உங்களிடம் ஒன்றை மட்டும் ஒரு வேண்டுகோளாக வைக்கிறேன். இந்தப் படத்தை எங்கு பார்க்கக் கிடைத்தாலும் தவிர்க்காமல் பாருங்கள் .

ஒரு 5,6 பத்திகளில் கதைச் சுருக்கத்தை சொல்லிவிட்டேன். ஆனால் சந்தியா ராகம் அது அல்ல. அது ஒரு பயணம். அதை நீங்கள் பயணித்து அனுபவித்தால்தான் அந்த சுகானுபவம் உங்களுக்குக் கிடைக்கும்.

அடர்ந்த காட்டின் நடுவே சலனமற்று ஓடும் நதியில் நிதானமாக மூழ்கிக் களிக்கும் சிலிர்ப்பை எப்படி சொல்லி புரியவைக்க முடியாதோ, அதுபோலத்தான் இந்த சந்தியா ராகமும்.

கூடியமட்டும் அரங்கில் பாருங்கள். தனியாக பார்க்கக் கிடைத்தால் கைபேசியை அணைத்துவிட்டு கொஞ்சம் கவனம் செலுத்திப் பாருங்கள்.ஏனென்றால் இதற்காக நீங்கள் கொடுக்கப்போகும் ஒவ்வொரு நொடியும் உன்னதமானது.

ஐரோப்பிய சினிமா, ஈரானிய படங்கள், கொரியப் படங்கள் என்று உலக சினிமா பற்றி பேசும் எழுதும் பலருக்கு, அதைவிட எந்த வகையிலும் குறைவில்லாமல் இருக்கும் இந்தப் படத்தைப் பற்றி ஏன் எழுதத் தோன்றவில்லை என்று எனக்குப் புரியவில்லை.

கடைசியாக பாலுமகேந்திரா அவர்கள் பேசும்போது, இந்தப் படத்தை தூர்தர்ஷன் நிதிவழங்க, தன் சொந்த தயாரிப்பாக 10 லட்ச ரூபாய் செலவில் எடுத்து முடித்ததாகவும், ஆனால் இன்று இதன் மூலப் பிரதி (Original negative) எங்கு இருக்கிறது என்று தெரியவில்லை….. அதுபோலத்தான் ‘வீடு’ படத்தின் மூலப் பிரதியும் கிடைக்கவில்லை என்றார்.

“இந்த இரண்டு படங்களின் மூலப் பிரதியும் கிடைக்காததால் நான் ‘மூன்றாம் பிறை’ படத்தின் மூலப்பிரதியை தேடுவதை விட்டுவிட்டேன். அதுவும் இல்லை என்று தெரியவந்தால் அவ்வளவுதான். எனக்கு அதைத் தாங்கும் திராணி கிடையாது.

தமிழ் நாட்டில் 40 வருடங்களுக்கும் மேலாக சினிமா சம்பந்தப்பட்டவர்களின் ஆட்சிதான் நடைபெறுகிறது. ஆனால் இப்படிப்பட்ட தமிழ் படங்களின் பிரதிகளைக் காக்க ஒரு ‘சினிமா ஆவணக் காப்பகம்’ இல்லை என்பதை நினைக்கும்போது வேதனையாக இருக்கிறது” என்று சொல்லும்போது அந்தக் கலைஞனின் நா தழுதழுத்து கண்கள் கலங்கியது… காரணம் புரியாத குற்ற உணர்ச்சி என்னுள் ஏற்பட்டது.

……எதைநோக்கிப் போய்க்கொண்டிருக்கிறோம் நாம்?

ஒரு சமூகத்தின் ஆணிவேராக இருக்கும் கலையும் இலக்கியமும் சரியான முறையில் அடுத்தடுத்த தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கப்பட்டால்தான் அந்த சமூகம் ஒரு உயிருள்ள சமூகமாக இருக்கும்.

வெறும் அறிவியலையும் தொழில்நுட்பத்தையும் மட்டுமே கற்றுக்கொண்டு அதற்குமட்டுமே முக்கியத்துவம் கொடுத்து வளரும் இந்தத் தலைமுறையிடம் இயந்திரத்தனத்தைத் தவிர வேறொன்றையும் எதிர்பார்க்கமுடியாது.

இன்று அதிகரித்துவரும் அனாதை இல்லங்களுக்கும், முதியோர் இல்லங்களுக்கும் மிக முக்கிய காரணம் இந்த இயந்திர மனோபாவம்தான் என்பது என் தனிப்பட்ட அபிப்ராயம் .

படம் முடிந்து வீடு வந்து சேர்ந்தபின்னும் அந்த சந்தியா ராகம் என்னோடு பேசிக்கொண்டே இருந்தது. நானும் ஒருநாள் முதுமையின் பிடியில் அகப்படத்தான் போகிறேன். அன்று என்முன் விரியும் உலகம் எப்படிப்பட்டதாக இருக்கும்…?

நினைத்துப் பார்க்கப் பார்க்க….. தூக்கம் தொலைந்துபோனது…

முதுமையால் ஆட்கொள்ளப்பட்டு கைகள் நடுங்கியபடி திரு பாலு மகேந்திரா அவர்கள் கடைசியாக சொன்ன வார்த்தைகள் இன்னும் என் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.

“நல்ல சினிமா எடுக்கவேண்டும் என்று புறப்பட்டுவந்து இந்த 40 சொச்ச வருடங்களில் எனக்குப்பிடித்து நான் எடுத்த இரண்டே நல்ல படங்கள் ‘வீடு’, ‘சந்தியா ராகம்’ தான். இப்போதுகூட குறைந்த செலவில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் ஒரு படம் எடுத்து வருகிறேன்.”

“நான் இருக்கும் வரை இதுபோன்ற படங்களை எடுத்துக்கொண்டே இருப்பேன். என்று நான் படம் எடுப்பதை நிறுத்துகிறேனோ, அன்று நான் இல்லை”

சொல்லிவிட்டு அரங்கத்தின் ஸ்தம்பிப்பினூடே மெதுவாக நடக்க ஆரம்பித்தார்…………………..

 

 

பின் குறிப்பு : இந்த அருமையான நிகழ்வினை சிறப்பாக அமைத்துக் கொடுத்த “தமிழ் ஸ்டுடியோ”வுக்கும் அதில் மிக உண்மையாக உழைத்து வரும் ‘அருண்’ போன்ற நண்பர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்களும் நன்றிகளும் …

நன்றி : “தமிழ் ஸ்டுடியோ ” (கீழுள்ள இரண்டு படங்கள் )

Posted in Uncategorized | 15 பின்னூட்டங்கள்

வாத்தியார்….

ஏதோ ஒரு முரட்டு தைரியத்தில் ” முதல் பதிவு”  போட்டுவிட்டேன். அதன்பின் என் வேலை காரணமாக 3,4 நாட்கள் பதிவு ஏதும்  போடவில்லை.

“என்னப்பா நீ … ஆரம்பிச்சுட்டு அப்டியே விட்டா எப்படி, எதையாச்சும் எழுதிகிட்டே இரு” என்று என் நட்பு வட்டாரம் சொல்ல ஆரம்பித்தபின்தான் என் சோம்பேறித்தனத்தின் எல்லைமீறலை என்னால் உணர்ந்துகொள்ளமுடிந்தது…

இந்த ப்ளாக் கின் ஒவ்வொரு எழுத்துக்களும் என் அருமை நண்பர்களுக்கே சமர்ப்பிக்கிறேன்.

இறை வணக்கத்தை விட குரு வணக்கத்தில்  ஆழ்ந்த நம்பிக்கை உள்ளவன் என்பதால்  என் முதல் தலைப்பு “வாத்தியார்”.

உடனே நான் ஒரு ஒழுக்கமான மாணவன் அல்லது  சிறந்த மாணவன் என்று நீங்கள் நினைத்துக்கொண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல.

ஒழுக்கமான நல்ல மாணவர்களைவிட அக்குறும்பும் அடங்காப்பிடாரித்தனமும் அதிகமுள்ள மாணவர்களுக்குத்தான் ஆசிரியரின் அருமை அதிகமாகவே தெரியும் என்பதற்கு நான் ஒரு நல்ல உதாரணம்.
இதை இங்கு பெருமையுடன் சொல்லிக்கொள்கிறேன்.காரணம், வாழ்வின் ஒவ்வொரு தருணத்திலும் அவர்களின் வழிகாட்டுதலின் முக்கியத்துவம் தெரிய வரும்போது, அந்த சூழ்நிலையில் அப்போது கற்றுத்தரும் நபரை ஆசானாக மரியாதையுடன் பார்க்கக்கூடிய பக்குவத்தை வாழ்க்கை எனக்கு கற்றுக்கொடுத்திருப்பதுதான் இதில் உள்ள சுவையான முரண். இது என் ஆசிரியர்களின் வெற்றியும் கூட.

கற்றுக்கொள்ளுதல் என்பது பிறந்த நொடியிலிருந்து துவங்குகிறது என்பது என் அபிப்ராயம். கருவிலேயே அது துவங்கிவிடுகிறது என்று மருத்துவ ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.அது ஒரு புறம் இருக்கட்டும்.

என் நினைவுக்கு முதல் ஆசானாக அறிமுகமான ‘டிலைலா’ மிஸ் தொடங்கி நேற்று இரவு நான் படித்த “அய்ஃபர் டுன்ஷ்” (துருக்கி எழுத்தாளர்) வரை எனக்கு வாத்தியார்கள்தான்.

“நாலு பருக்கைய கொடுத்து திங்கிறவன்தான் மனுசன்” என்று போகிறபோக்கில் விதைத்து சென்ற எங்கள் ஊர் கணபதிக்கோனார் தாத்தாவும், “தன் ஈமானுக்கே வாழாம அடுத்தவன் ஈமானையும் பாக்கணும்யா”.  என்று பேச்சுவாக்கில் சொல்லும் என்னை வளர்த்த  ஃபாத்துமா மாமியும் இந்த  பட்டியலில் அடங்குவர்.

“ஒருவனுக்கு தன் இன வரலாறும், தன் தொழில் வரலாறும் அவசியம் தெரிந்திருக்க வேண்டும். அப்போதுதான் அவன் அடக்கமாகவும் ஆழமாகவும் அதைக் கற்றுக்கொண்டு மிளிர முடியும்” என்று சொல்லிக்கொடுத்த நடிகர்.கலைமாமணி ராஜேஷ் அவர்களையும் … “பயிற்சி செய்து தயாராக இருப்பது ஒன்றுதான் உன் வேலை.வாய்ப்பும் வெற்றியும் காலத்தின் கையில் இருக்கிறது” என்று என்னிடம் அறிவுறுத்திய உன்னத கலைஞர் பாடகர் திரு பி.பி.சீனிவாஸ் அவர்களையும் ஆசான்களாகப் பெற்றது என் பாக்கியம்.

“இந்த மானிட்டர்ல சதுரமா தெரியுது பார். அந்த ஃப்ரேம் (frame) க்குள்ள மட்டும் வேல பார்க்கணும். அதுக்கு வெளியில இல்ல ” என்று ஒரு மாபெரும் பாடத்தை ஒரு வரியில் விளக்கிய என் சினிமா ஆசான் இயக்குனர் நாகா சார் அவர்களும் என் முக்கியமான வாத்தியார்களில் ஒருவர்.

“அண்ணா, நீங்க பேமென்ட் இல்லாம ஃப்ரெண்ட்ஷிப்புக்காக டிஸ்கஷன் போய் அவங்களுக்கு எழுதிக் கொடுக்குறது சரியில்ல. உங்க கிட்ட இருக்கிற கலையை நீங்க அவமானப்படுத்தாதீங்க” என்று என் போலிப் பெருந்தன்மையை உடைத்த என் தம்பி ஒளிப்பதிவாளர் வினோத் பாரதியும் என் வாத்தியார்தான்.

என்னுடைய  பள்ளி-கல்லூரி ஆசிரியர்கள் பற்றிய என் பார்வை எப்போதும் ஒரு ஆச்சர்யம் கலந்ததாகவே இருக்கிறது. அவர்கள் எனக்காகவே படைக்கப்பட்டவர்கள் போல எனக்குத்தோன்றும். அவர்களை இன்று நினைத்தாலும் அந்த ஆச்சர்யமும் பிரம்மிப்பும் என்னுள் சிறிதளவுகூட குறையவில்லை.

அவர்கள் கற்றுக்கொடுத்த பாடம் எதுவும் அவ்வளவாக நினைவில்லை. ஆனால் பாடபுத்தகத்தைத் தாண்டி அவர்கள் சொல்லிக்கொடுத்த வாழ்வியல் முறைகள், அறிவுரைகள் எல்லாம் அந்த நேரத்தில் எங்களின் கிண்டலுக்கும், வம்பு பேச்சுக்கும் உள்ளானாலும், இன்றும் அது என் காதில் ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது. வாழ்க்கையில் ஒவ்வொரு முறை தவறும்போதும் ஏதோ ஒரு ஆசிரியர் என் கண்முன் வந்து போவது தவிர்க்க இயலாத நிகழ்வாகிறது.

ஒவ்வொரு ஆசிரியரைப் பற்றி நான் எழுதத் தொடங்கினால் அது ஒவ்வொரு சிறுகதையாக விரியும். அதை இனி போகிற போக்கில் சொல்லிக்கொண்டே செல்லலாம் என்று நினைக்கிறேன்.

பள்ளி, கல்லூரிகளில் கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்கள் மட்டுமல்ல… நம் வாழ்வின் ஒவ்வொரு தருணத்திலும் ஏதோ ஒரு வகையில் நமக்கு வழிகாட்டும் ஒவ்வொருவரும் வாத்தியார்தான்.

The dream begins, most of the time, with a teacher who believes in you, who tugs and pushes, and leads you onto the next plateau, sometimes poking you with a sharp stick called truth….
என்கிற Dan rather அவர்களின் வரிகள் போல என்னுள்ளே தங்கியிருக்கும் பல விடயங்களைத் தோண்டி எடுத்து , எனக்கே என்னை அறிமுகம் செய்துவைத்த என் வாத்தியார்கள் எல்லோரையும் நன்றியோடு நினைத்துப்பார்க்கிறேன்.

கற்றுக்கொள்ளுதலும் கற்றுக்கொடுத்தலும் கேள்வி-பதில்களின் கொடுக்கல்-வாங்கல் போல எப்போதும் எனக்குத் தோன்றும். அப்படிப் பார்த்தால் வாழ்க்கையே ஒரு சிறந்த வாத்தியார்தான். அதுதான் இத்தனை வாத்தியார்களை நமக்கு அறிமுகம் செய்து நமக்கு கற்றுக்கொடுக்கிறது.

இதோ நான் எழுதிக்கொண்டிருக்கும் இந்த நேரத்திலும்கூட “நீ என்ன பெருசா நவுத்திட்டேன்னு இதையெல்லாம் எழுதுற” என்று என்னுள் எழும் கேள்விக்கு என் பள்ளி வாத்தியார் திரு.ஜான் பிரிட்டோ சார் சொன்ன வரிகள்தான் நினைவுக்கு வருகிறது
“யார் சொல்றாங்கன்னு பார்க்காதே.. என்ன சொல்றாங்கன்னு பாரு… எல்லார்கிட்டையும் நாம கத்துக்கிறதுக்கு ஏதோ ஒண்ணு கட்டாயம் இருக்கும்”…..

Posted in Uncategorized | 8 பின்னூட்டங்கள்

முதல் பதிவு…

 

“நீ என்னென்னமோ பேசுற … இதையெல்லாம் ஏன் நீ எழுதக்கூடாது” என்று என்னிடம் கேட்ட பலரிடமும்  ” இல்லீங்க , நான் அங்க இங்க பிராய்ஞ்சு கொஞ்சம் தெரிஞ்சு வெச்சிருக்கேன். என்னைவிட சிறப்பா சொல்றவங்க நெறைய பேர் இருக்காங்க” என்று சொல்லி சமாளித்துவிடுவேன்.

சுவாரஸ்யமாக பேசுவது என்பது ஒரு வகை.  எதிரிலிருப்பவரின்  முகபாவங்களிலிருந்தே நம்முடைய சுவாரஸ்யத்தின் அளவு என்ன என்று  கணித்து  அதற்கு தகுந்தாற்போல நாம் பேசும் தலைப்புகளை மாற்றி சூழலுக்கேற்ப ஏதோ ஒன்றைப் பேசி  சமாளித்துவிடலாம். ஆனால்  எழுதுவது என்பது அப்படியல்ல. அது ஒரு பரீட்சையைப்போல எப்போதும் எனக்குத் தோன்றும்  .

படிப்பதில் காட்டும் ஆர்வமும் அக்கறையும் , ஏதோ ஒன்றை எழுதவேண்டும் என்று  ஆரம்பிக்கும்போது  எனக்கு வருவதே இல்லை. காரணம் அதன்மேல் உள்ள பயமும், நான் பிறரின் எழுத்துக்களை படித்துவிட்டு செய்த விமர்சனமும்தான். இது அனாவசியமானது என்று  தெரிந்திருந்தும்  என்னால் அந்த மனப்பிறழ்விலிருந்து வெளிவர இயலவில்லை.

இதாவது பரவாயில்லை. முகப்புத்தகத்தில் (facebook) சிறு துணுக்குகளாக நான் எழுதியதை நண்பர்கள் பலர் ஊக்குவிக்க, அதை ஒரு சொற்கட்டு வடிவமாக மாற்றி ‘நோட்ஸ்’ களாக போட ஆரம்பித்தேன். பல நண்பர்கள் “இதை ஏன் நீ ஒரு தொகுப்பாக வெளியிடக்கூடாது” என்று கேட்க ஆரம்பிக்க, “நிச்சயமா செய்யிறேன்” என்ற உறுதியும் கொடுத்து, தமிழ்கூறும் நல்லுலகிற்கு ஒரு கவிதைத் தொகுப்பை முன்பதிவு செய்திருக்கிறேன். அந்த சுனாமி வரும் நாள் எதுவோ , எனக்கே தெரியவில்லை…..

இது நடந்து கொண்டிருக்கும்  காலங்களில் ,  தொடர்ந்து  சமூக வலைத் தளங்களில் சில காலம் சுற்றியலைந்தபோது பலரின் “ப்ளாக்” குகளை படிக்கும் வாய்ப்பு அதிகமாக கிடைத்தது.  அது பலரின் அகராதியாகவும் , சிலரின் அங்காடியாகவும், அந்தந்த நபர்களின் கண்ணாடியாகவும் பெரும்பாலோரின் முகமூடியாகவும் செயல்பட்டு வருவதை என்னால் நன்றாக உணரமுடிந்தது.

மன்னிக்கவும், ஒரு இடைச்செருகல் … “ப்ளாக் ” என்பதன் தமிழாக்கம் என்ன என்று தெரியாததால் “ப்ளாக்” என்றே சொல்வதை குற்றமெனக் கொள்ளாதிருக்க வேண்டுகிறேன்.

நானும் ப்ளாக் எழுதலாம் என்று முடிவெடுத்து “பாய்மரம்” என்கிற பெயரில்  ப்ளாக் ஒன்றை ஆரம்பித்து , அதில் என் முகப்புத்தக வரிகளை காப்பி பேஸ்ட் செய்து, சிறிதுகாலம் அதை பலரிடம் சொல்லிவந்தேன். எல்லோரும் என் முகப்புத்தக நண்பர்களான காரணத்தினால் “ப்ளாக்க நல்ல டெவலப் பண்ணுங்க்க பாஸ். இதையே அங்க ரிபிட் பண்ணினா எப்படி” என்று கேட்க ஆரம்பித்தவுடன் அதை அப்படியே நிறுத்திவிட்டேன்.

சோம்பலும் அலட்சியமும்தான்  இவ்வாறு  நான் நடந்துகொள்வதற்கான காரணங்களே தவிர வேறொன்றுமில்லை.

ஆனால் இன்று (03-06-2012)  காலை முதல் என்னுளே  ஒரு குரல், “எதாவது எழுது” என்று. இது வழக்கம்போல வருவதுதான்.  ஆனால்  அதை இன்று என்  மனது கேட்டிருக்கும் போல.. ஏதோ ஒரு உந்துதல்… இதோ ஒரு ப்ளாக்கை உடனடியாக ஆரம்பித்து என் முதல் பதிவினை எழுதி முடிக்கப்போகிறேன்.

இது எதுவரை போகுமோ என்று எனக்குத் தெரியாது.

நான் எதைப் பற்றியெல்லாம் எழுதப்போகிறேன் …. தெரியாது…

தினமும் இதில் பதிவிடுவேனா … அதுவும் தெரியவில்லை.

ஆனால் ஆரம்பித்துவிட்டேன்….

இதை சரியாக செய்வேன் என்று என் மனம் சொல்கிறது…

உங்களின் அன்பும், வழிகாட்டுதலும் எனக்கு கிடைக்கும் என்கிற நம்பிக்கையில்….. இதோ புறப்பட்டுவிட்டேன்…..

Posted in Uncategorized | 10 பின்னூட்டங்கள்

Hello world!

Welcome to WordPress.com! This is your very first post. Click the Edit link to modify or delete it, or start a new post. If you like, use this post to tell readers why you started this blog and what you plan to do with it.

Happy blogging!

Posted in Uncategorized | 1 பின்னூட்டம்