வாத்தியார்….

ஏதோ ஒரு முரட்டு தைரியத்தில் ” முதல் பதிவு”  போட்டுவிட்டேன். அதன்பின் என் வேலை காரணமாக 3,4 நாட்கள் பதிவு ஏதும்  போடவில்லை.

“என்னப்பா நீ … ஆரம்பிச்சுட்டு அப்டியே விட்டா எப்படி, எதையாச்சும் எழுதிகிட்டே இரு” என்று என் நட்பு வட்டாரம் சொல்ல ஆரம்பித்தபின்தான் என் சோம்பேறித்தனத்தின் எல்லைமீறலை என்னால் உணர்ந்துகொள்ளமுடிந்தது…

இந்த ப்ளாக் கின் ஒவ்வொரு எழுத்துக்களும் என் அருமை நண்பர்களுக்கே சமர்ப்பிக்கிறேன்.

இறை வணக்கத்தை விட குரு வணக்கத்தில்  ஆழ்ந்த நம்பிக்கை உள்ளவன் என்பதால்  என் முதல் தலைப்பு “வாத்தியார்”.

உடனே நான் ஒரு ஒழுக்கமான மாணவன் அல்லது  சிறந்த மாணவன் என்று நீங்கள் நினைத்துக்கொண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல.

ஒழுக்கமான நல்ல மாணவர்களைவிட அக்குறும்பும் அடங்காப்பிடாரித்தனமும் அதிகமுள்ள மாணவர்களுக்குத்தான் ஆசிரியரின் அருமை அதிகமாகவே தெரியும் என்பதற்கு நான் ஒரு நல்ல உதாரணம்.
இதை இங்கு பெருமையுடன் சொல்லிக்கொள்கிறேன்.காரணம், வாழ்வின் ஒவ்வொரு தருணத்திலும் அவர்களின் வழிகாட்டுதலின் முக்கியத்துவம் தெரிய வரும்போது, அந்த சூழ்நிலையில் அப்போது கற்றுத்தரும் நபரை ஆசானாக மரியாதையுடன் பார்க்கக்கூடிய பக்குவத்தை வாழ்க்கை எனக்கு கற்றுக்கொடுத்திருப்பதுதான் இதில் உள்ள சுவையான முரண். இது என் ஆசிரியர்களின் வெற்றியும் கூட.

கற்றுக்கொள்ளுதல் என்பது பிறந்த நொடியிலிருந்து துவங்குகிறது என்பது என் அபிப்ராயம். கருவிலேயே அது துவங்கிவிடுகிறது என்று மருத்துவ ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.அது ஒரு புறம் இருக்கட்டும்.

என் நினைவுக்கு முதல் ஆசானாக அறிமுகமான ‘டிலைலா’ மிஸ் தொடங்கி நேற்று இரவு நான் படித்த “அய்ஃபர் டுன்ஷ்” (துருக்கி எழுத்தாளர்) வரை எனக்கு வாத்தியார்கள்தான்.

“நாலு பருக்கைய கொடுத்து திங்கிறவன்தான் மனுசன்” என்று போகிறபோக்கில் விதைத்து சென்ற எங்கள் ஊர் கணபதிக்கோனார் தாத்தாவும், “தன் ஈமானுக்கே வாழாம அடுத்தவன் ஈமானையும் பாக்கணும்யா”.  என்று பேச்சுவாக்கில் சொல்லும் என்னை வளர்த்த  ஃபாத்துமா மாமியும் இந்த  பட்டியலில் அடங்குவர்.

“ஒருவனுக்கு தன் இன வரலாறும், தன் தொழில் வரலாறும் அவசியம் தெரிந்திருக்க வேண்டும். அப்போதுதான் அவன் அடக்கமாகவும் ஆழமாகவும் அதைக் கற்றுக்கொண்டு மிளிர முடியும்” என்று சொல்லிக்கொடுத்த நடிகர்.கலைமாமணி ராஜேஷ் அவர்களையும் … “பயிற்சி செய்து தயாராக இருப்பது ஒன்றுதான் உன் வேலை.வாய்ப்பும் வெற்றியும் காலத்தின் கையில் இருக்கிறது” என்று என்னிடம் அறிவுறுத்திய உன்னத கலைஞர் பாடகர் திரு பி.பி.சீனிவாஸ் அவர்களையும் ஆசான்களாகப் பெற்றது என் பாக்கியம்.

“இந்த மானிட்டர்ல சதுரமா தெரியுது பார். அந்த ஃப்ரேம் (frame) க்குள்ள மட்டும் வேல பார்க்கணும். அதுக்கு வெளியில இல்ல ” என்று ஒரு மாபெரும் பாடத்தை ஒரு வரியில் விளக்கிய என் சினிமா ஆசான் இயக்குனர் நாகா சார் அவர்களும் என் முக்கியமான வாத்தியார்களில் ஒருவர்.

“அண்ணா, நீங்க பேமென்ட் இல்லாம ஃப்ரெண்ட்ஷிப்புக்காக டிஸ்கஷன் போய் அவங்களுக்கு எழுதிக் கொடுக்குறது சரியில்ல. உங்க கிட்ட இருக்கிற கலையை நீங்க அவமானப்படுத்தாதீங்க” என்று என் போலிப் பெருந்தன்மையை உடைத்த என் தம்பி ஒளிப்பதிவாளர் வினோத் பாரதியும் என் வாத்தியார்தான்.

என்னுடைய  பள்ளி-கல்லூரி ஆசிரியர்கள் பற்றிய என் பார்வை எப்போதும் ஒரு ஆச்சர்யம் கலந்ததாகவே இருக்கிறது. அவர்கள் எனக்காகவே படைக்கப்பட்டவர்கள் போல எனக்குத்தோன்றும். அவர்களை இன்று நினைத்தாலும் அந்த ஆச்சர்யமும் பிரம்மிப்பும் என்னுள் சிறிதளவுகூட குறையவில்லை.

அவர்கள் கற்றுக்கொடுத்த பாடம் எதுவும் அவ்வளவாக நினைவில்லை. ஆனால் பாடபுத்தகத்தைத் தாண்டி அவர்கள் சொல்லிக்கொடுத்த வாழ்வியல் முறைகள், அறிவுரைகள் எல்லாம் அந்த நேரத்தில் எங்களின் கிண்டலுக்கும், வம்பு பேச்சுக்கும் உள்ளானாலும், இன்றும் அது என் காதில் ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது. வாழ்க்கையில் ஒவ்வொரு முறை தவறும்போதும் ஏதோ ஒரு ஆசிரியர் என் கண்முன் வந்து போவது தவிர்க்க இயலாத நிகழ்வாகிறது.

ஒவ்வொரு ஆசிரியரைப் பற்றி நான் எழுதத் தொடங்கினால் அது ஒவ்வொரு சிறுகதையாக விரியும். அதை இனி போகிற போக்கில் சொல்லிக்கொண்டே செல்லலாம் என்று நினைக்கிறேன்.

பள்ளி, கல்லூரிகளில் கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்கள் மட்டுமல்ல… நம் வாழ்வின் ஒவ்வொரு தருணத்திலும் ஏதோ ஒரு வகையில் நமக்கு வழிகாட்டும் ஒவ்வொருவரும் வாத்தியார்தான்.

The dream begins, most of the time, with a teacher who believes in you, who tugs and pushes, and leads you onto the next plateau, sometimes poking you with a sharp stick called truth….
என்கிற Dan rather அவர்களின் வரிகள் போல என்னுள்ளே தங்கியிருக்கும் பல விடயங்களைத் தோண்டி எடுத்து , எனக்கே என்னை அறிமுகம் செய்துவைத்த என் வாத்தியார்கள் எல்லோரையும் நன்றியோடு நினைத்துப்பார்க்கிறேன்.

கற்றுக்கொள்ளுதலும் கற்றுக்கொடுத்தலும் கேள்வி-பதில்களின் கொடுக்கல்-வாங்கல் போல எப்போதும் எனக்குத் தோன்றும். அப்படிப் பார்த்தால் வாழ்க்கையே ஒரு சிறந்த வாத்தியார்தான். அதுதான் இத்தனை வாத்தியார்களை நமக்கு அறிமுகம் செய்து நமக்கு கற்றுக்கொடுக்கிறது.

இதோ நான் எழுதிக்கொண்டிருக்கும் இந்த நேரத்திலும்கூட “நீ என்ன பெருசா நவுத்திட்டேன்னு இதையெல்லாம் எழுதுற” என்று என்னுள் எழும் கேள்விக்கு என் பள்ளி வாத்தியார் திரு.ஜான் பிரிட்டோ சார் சொன்ன வரிகள்தான் நினைவுக்கு வருகிறது
“யார் சொல்றாங்கன்னு பார்க்காதே.. என்ன சொல்றாங்கன்னு பாரு… எல்லார்கிட்டையும் நாம கத்துக்கிறதுக்கு ஏதோ ஒண்ணு கட்டாயம் இருக்கும்”…..

About arrawinthyuwaraj

be happy and make others happy
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

8 Responses to வாத்தியார்….

 1. Oswin சொல்கிறார்:

  A wonderful note….continue Arrwind

 2. anuradha சொல்கிறார்:

  I join with u in saluting all teachers in different aspects of our day to day life.. keep writing..

 3. PADMA சொல்கிறார்:

  I ALWAYS SAY THAT I OWE MY TEACHERS TO WHAT I AM TODAY ..GURUVE SARANAM
  NICE WRITE UP

 4. ramdaus சொல்கிறார்:

  எல்லாத்தையும் பாத்துட்டுதான் வந்துருக்கு!

 5. vaduvur rama சொல்கிறார்:

  ஆமாம் அர்விந்த்..கற்றுக் கொள்ளுதல் ஒவ்வொரு நொடியும் நடக்கிறது..நீங்க சொன்னாமாதிரி பள்ளி ஆசிரியர்கள் இன்னும் நமக்கு கொஞ்சம் பாசமாகவும் அன்யோன்யமாவும் தோன்றுகிறது..இது முதன் முதலில் அவர்களைத்தான் நாம் ஆசிரியர்கள் என்று சந்தித்ததால் இருக்குமோ..முதல் காதல் மாதிரி..முதல் பள்ளி ஆசிரியர்கள் பள்ளி கல்லூரி காலங்களில் நம் குறும்பையும், சேஷ்டைகளையும் அவ்ர்களிடம் காண்பித்தது இனிமையான காலம்தான்.. மாணவப் பருவத்திற்கு அதிக பொறுப்பு இல்லாததாலும் இருக்கலாம்..படிப்பு மட்டும்தானே.அதன் பிறகு வாழ்க்கையின் நமக்கென்று குறிக்கோள்கள், கடமைகள் வரும் போது முதலில் இருந்ததைவிட கொஞ்சம் தாமதமாகிறார் போல் தோன்றுகிறது..ஒரு குழந்தை கூட நமக்கு கற்றுக் கொடுக்கும்.. நல்ல பதிவு..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s